முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ்வின் பிரதிநிதிகளாக நமது வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பது குர்ஆனின் கட்டளைகளூள் ஒன்று. முஸ்லிம்களாகிய நம்மை அகில உலகிற்கும் முன்மாதிரிச் சமுதாயமாக அமைத்திருப்பதாகவும் குர்ஆனிலே அல்லாஹ் கூறுகிறான். நபி(ஸல்) அவர்கள் விட்டுச் சென்றுள்ள பணிகளை ஒவ்வொரு முஸ்லிமான ஆணும்,பெண்ணும் செய்வது கடமை என்பதையும் ஹதீஸ்களின் மூலம் நாம் அறிகிறோம்.
ஆனால் நமது நிலை என்ன? கொடுத்த வாக்குறுதியில் நாம் சரியாக இருக்கிறோமா? குடும்ப வாழ்க்கையை இஸ்லாமிய அடிப்படையில் அமைத்து விட்டோமா? பொய் சொல்லுதல் புறம் பேசுதல் போன்ற காரியங்களிலிருந்து விலகி விட்டோமா? மூடப் பழக்க வழக்கங்களிலுருந்து முற்றாக ஒதுங்கி விட்டோமா? இஸ்லாமிய வாழ்க்கையில் முழுமையாக நாம் நுழைந்து விட்டோமா?
இக்கேள்விகளுக்கெல்லாம் மறுமையில் நாம் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள். ஆகையால் தினசரி திருக்குர்ஆனை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தமக்கு தெரிந்த மொழி பெயர்ப்புகளில் தினசரி ஒரு பக்கம் வீதம் படித்து, சிந்தித்து, உணர்ந்து செயல்பட்டால் நாம் ஒவ்வொருவரும் அல்லாஹ் கூறும் உண்மையான முஸ்லிம்களாக மாற முடியும். (இன்ஷா அல்லாஹ்)
குர்ஆன் மொழி பெயர்ப்புகளையும், ஹதீஸ்களையும் தினசரி ஒருசில நிமிடங்களைப் ஒதுக்கிப் படித்து வாருங்கள். சிந்திக்க ஆரம்பியுங்கள். வருடக் கணக்கில், அதுவும் இளமையில்ச் செலவிட்டுப் படித்தவர்கள் மட்டுமே விளங்க முடியும் என்ற தப்பான எண்ணத்தை விட்டு விடுங்கள். குர்ஆன், ஹதீஸ் படித்து சரியான உமதேசங்களை அறிந்து கொள்ளுங்கள்.
எழுதப் படிக்கத் தெரியாத, நாகரீகமற்ற மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருந்த மிகவும் பின் தங்கியிருந்த ஒரு சமூகம் நபி(ஸல்) அவர்களின் 23 ஆண்டு கால உழைப்புக்குப் பின் ஒப்புயுற்வற்ற ஒர் உன்னத சமுதாயமாக உயர்ந்தது. மனித சமுதாயத்தையே நேர்வழியில் இட்டுச் செல்லும் ஒரு மகத்தான பதவியை அடைந்தது. குர்ஆன், ஹதீஸைக் கொண்டு மட்டுமே அச்சமுதாயத்தினர் அவ்வற்புத ஞானத்தைப் பெற்றிருந்தனர். முஸ்லிம்கள் இன்று அத்தகைய இறை கொடுத்த நேர்வழியை விட்டு, வழி தவறி மனித அபிப்பிராயங்களால் உண்டான மத்ஹபுகள், தரீக்காக்கள், இயக்கங்கள் போன்ற பல வழிகளில் சென்றமையால், மிகக் கீழானதொரு நிலையை அடைந்துள்ளனர்.
எனவே, நபி(ஸல்) அவர்களின் காலத்து அதே எளிய நேர்வழி முறைகளைக் கடைப்பிடித்து, எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்ற பாகுபாடின்றி, அனைவரும் மார்க்க அறிவு பெற, எல்லா பகுதிகளிலும் மார்க்கத்தை தெரிந்து கொள்ள குர்ஆன், ஹதீஸ் பயிற்சி வகுப்புகளை ஆரம்பித்து நடத்தி வாருங்கள். தெரிந்த மொழியிலுள்ள குர்ஆன், ஹதீஸ் மொழிபெயர்ப்புகளை அதற்காகப் பயன்படுத்துங்கள். படிக்க தெரியாதவர்கள் பிறர் படிப்பதைப் காது தாழ்த்திக் கேளுங்கள்.இந்த முயற்சி நல்ல பலனைத் தருகிறது. முஸ்லிம் சகோதர, சகோதரிகளைச் சுய சிந்தனையாளர்களாக மாற்றுகிறது என்பதை அனுபவத்தின் மூலம் அறிந்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறோம்.திருக்குர்ஆனின் பக்கமும் நபி மொழிகளையும் படித்து அதன்படி நமது வாழ்வையும் அமைத்துக்கொள்ள வேண்டும். நமக்கு அறிமுகமான, உறவினரான, ஒவ்வொரு முஸ்லிமிடமும் தினசரி குர்ஆனைப்பற்றி பேசும் பழக்கத்தை இன்ஷாஅல்லாஹ் நாம் ஏற்படுத்திக் கொள்வோமாக!