|
|
|
தவணை முறை வியாபாரம் |
மூமின்களே! உங்களில் ஒருவருக்கொருவர் பொருந்திக்கொள்ளும் முறையில் ஏற்படுகிற வர்த்தகம் அல்லாமல், ஒருவர் மற்றொருவரின் பொருளைத் தவறான முறையில் உண்ணாதீர்கள். (4:29)
நபி(ஸல்) அவர்கள் ஒரு வியாபரத்தில் இரு வியாபாரங்கள் செய்வதைத் தடை செய்தனர். (அபூஹுரைரா(ரலி) திர்மிதீ, அபூதாவூத், நஸயீ
இன்று பரவலாக நாடெங்கும் தவணை முறை வியாபாரம் நடந்துக்கொண்டிருப்பதை பார்க்கிறோம். இவ்வியாபாரம் நடைபெறாத ஊரே இல்லை எனக்கூறலாம்.
வியாபாரத்தில் நம்பிக்கை நாணயம் அவசியம் என இஸ்லாம் வலியுறுத்துகிறது. இதன் அடிப்படையில் இப்படித்தான் வியாபாரம் செய்யவேண்டும் எப்படியும் செய்யலாம் என்பது கூடாது என்று வியாபாரத்திற்கான வழிமுறைகள் வகுத்துத் தரப்பட்டுள்ளது.
ரொக்கத்திற்கு வியாபாரம் செய்வதை இஸ்லாம் ஆகுமாக்கியது போன்றே தவணைக்கு வியாபாரம் செய்வதையும் ஆகுமாக்கியுள்ளது. தவணைக்கு வியாபாரம் செய்வதைல் சிக்கல் பிரச்னை ஏற்படாமலிருக்க தவணைக் காலம், பொருளின் விலை முதலியவற்றை தெளிவாக முடிவு செய்துகொண்டதன் பிறகே எதையும் விற்கவோ, வாங்கவோ செய்யவேண்டும் என வழியுறுத்துகிறது.
மேற்காணும் ஹதீஸில் ஒரு வியாபாரத்தில் இரு வியாபாரங்கள் கூடாது என்பதன் பொருள் வருமாறு:
ஒருவர் தமது பொருளை ரொக்கமானால் 100 ரூபாய்க்கும், 2 மாதத் தவணை என்றால் 150 ரூபாய்க்கும் தருவதாகக் கூறும்போது ரொக்கமா? தவணையா? என்று எந்த முடிவும் செய்துகொள்ளாமல் பொருளை அடுத்த நபரிடம் விற்று விடுவது கூடாது. இவ்வாறே ஒருவர் எனது மாட்டை உமக்கு இரண்டாயிரம் ரூபாய்க்குத் தந்து விடுகிறேன், நீர் உன் ஆட்டை எனக்கு ஆயிரம் ரூபாய்க்குத் தந்துவிடும் என்று கூறி நிபந்தனை வைத்து வியாபாரம் செய்கிறார் என்றால் இத்தகைய வியாபாரமும் கூடாது.
அவ்வாறின்றி ஒருவர் தமது பொருளை ரொக்கமானால் ரூபாய் 100 க்கும் 2 மாதத் தவணை என்றால் ரூபாய் 150 க்கும் தருவதாகக் கூறும்போது, வாங்குபவர் இரண்டில் ஒரு விலைக்கு சம்மதித்து வாங்கிக்கொள்வாரானால் இதில் சிக்கலோ, பிரச்னையோ எற்பட வழியில்லை.
இம்முறையில் வியாபாரம் செய்தால் "ஒரு வியாபாரத்தில் இரு வியாபாரங்கள்" செய்த நிலை ஏற்படாது. காரணம் இவர் ஒரு வியாபாரத்தில் ஒரு வியாபாரம் மட்டும்தான் செய்திருக்கிறார். இரு வியாபாரங்கள் செய்யவில்லை. ஆனால் ஒரு பொருளுக்கு ரொக்கத்துக்கு ஒரு விலையும், தவணைக்கு ஒரு மற்றொரு விலையும் என்பதாக இரு விலை கூறியிருக்கிறார். ஆனால் ரொக்கமோ, தவணையோ இரண்டில் ஒன்றுக்குத்தான் வியாபாரம் செய்திருக்கிறார். இவ்வாறு ரொக்கத்திற்கு ஒரு விலையும், தவணைக்கு மற்றோர் விலையுமாக விற்பதை இஸ்லாம் தடை செய்யவில்லை.
மேலும் எப்பொருளையும் மார்கட் விலையைவிட கூடுதலாக விற்பது கூடாது என்று இஸ்லாம் கூறவில்லை. காரணம் சரக்குகளை எல்லா வியாபாரிகளும் ஒரே அமைப்பில் கொள்முதல் செய்வதில்லை. ஒருவர் கடனுக்கும், மற்றொருவர் ரொக்கத்திற்கும், ஒருவர் சரக்கை ஒருவர் அடுத்தள்ள இடத்திலுருந்தும், மற்றொருவர் தூரத்திலிருந்தும் கொள்முதல் செய்திருப்பார்கள். ஆகவே தவணை முறை வியாபாரம் செய்வது ஆகும்.