கொள்கையா? உறவா?

 அபூ ஷர்புன்னிஸா  

   

    இன்று பல்வேறு மதங்கள் உலகில் இருப்பதை நாம் அறிவோம். அவற்றில் ‘இஸ்லாம்’ பல விஷயங்களில் தனித்தன்மை பெற்று விளங்குவதை அறிவுடைய எவரும் புரிந்துக்கொள்ள முடியும். உதாரணத்திற்கு ஒன்றை இங்கே நாம் சுட்டிக்காட்டுகிறோம். பரம்பரை அடிப்படையில் ஒருவன் அல்லது ஒரு இனம் தன்னையோ அல்லது தங்களையோ உயர்வாகக் கருதிக்கொள்ள இஸ்லாம் அனுமதிக்கவே இல்லை. நடத்தையும், கொள்கையும் சரியாக அமையாத போது எவ்வளவு உயர்ந்தவரின் சந்ததியாக இருந்தாலும் அல்லாஹ் அந்த உறவுக்கு எந்த மதிப்பும் வழங்கமாட்டான் என்பதைத் திருக்குர்ஆன் தெளிவாக நமக்குச் சொல்கின்றது.

     மிகச்சிறந்த நபிமார்களில் ஒருவராகிய நூஹ் (அலை) அவர்கள் சத்தியத்தை எடுத்துச் சொன்னபோது, அவர்களின் கொள்கையை மிகப் பெரும்பாலோர் ஏற்காதது போன்று அவர்களின் மகனும் ஏற்கவில்லை. இறுதியில் இறைவனை ஏற்காத கூட்டத்தை அல்லாஹ் அழித்துவிட முடிவு செய்து, அதை நூஹ் (அலை) அவர்களுக்கும் தெரிவிக்கிறான். வெள்ளப் பிரளயம் ஏற்பட்டபோது நூஹ் (அலை) அவர்கள் தன் மகனை சத்தியத்தின்பால் வருமாறு அழைக்கின்றார்கள். இறுதிவரை அவன் ஏற்கவே இல்லை. அவன் வெள்ளப்பிரளயத்தில் மூழ்கடிக்கப்படுகிறான். அப்போது பெற்ற பாசத்தின் அடிப்படையில், “இறைவா! என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவன்” என்று மகனைக் காப்பாற்றக் கோருகிறார்கள்.

     அதற்கு அல்லாஹ், “உன் மகன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவனில்லை” என்று உறுதியாக கூறிவிடுகிறான். நபியின் மகனாக இருந்தாலும் ஓரிறைக் கொள்கையை ஏற்றால் மட்டுமே நபியின் மகனாக அல்லாஹ் ஏற்கிறான் என்பதை இதன் மூலம் அறியலாம்.

     அதே நபியின் மனைவியும் இந்தக் கொள்கையை ஏற்காத காரணத்தால் நபியின் மனைவி என்று சலுகை காட்ட அல்லாஹ் தயாராக இல்லை. மாறாக நரகில் அவள் நுழையவிருப்பதாகச் சொல்லிக் காட்டுகிறான்.

     இப்றாஹீம் (அலை) அவர்கள் மிகச் சிறந்த நபி. அவர்களின் தந்தை கொள்கையை ஏற்காத காரணத்தால், அவருக்குத் தனிச்சலுகை வழங்க அல்லாஹ் தயாராக இருக்கவில்லை என்பதையும் குர்ஆன் நமக்குப் போதிக்கின்றது!

     இது போன்ற ஏராளமான வசனங்களை குர்ஆன் நெடுகிலும் காணமுடிகின்றது. இதிலிருந்து பாடம் பெற்று, பரம்பரை அடிப்படையில் உயர்ந்து விடலாம் என்று எண்ணி ஏமாந்து விடாமல் நல் அமல்கள் மூலமும் ஓரிறைக் கொள்கையின் மூலமும் இறை நெருக்கத்தைப் பெறுவோமாக! ஆமீன்!

 

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த