786 ஒரு விளக்கம்

Post image for 786 ஒரு விளக்கம்

in சமூகம்

முஸ்லிம்கள் எந்த ஒரு நல்ல காரியத்தையும் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்றோ பிஸ்மில்லாஹி என்றோ கூறித்துவக்கவேண்டும் என்பது நபிகள் நாயகம் (ஸல்)அவர்களின் பல பொன்மொழிகள் மூலம் நமக்கு தெரிகின்றது. இந்த முறையை இஸ்லாமியர் அனைவரும் செயல்படுத்தியும் வருகின்றனர்.

பிற்காலத்தில் உலகின் பல பகுதிகளுக்கும் கடிதத் தொடர்புகள் பரவலாக்கப்பட்டன. தங்கள் கடிதங்களில் பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம் என்று எழுதினால் அதற்கு மரியாதை செய்யப்படாது. தூய்மையற்ற பலரது கைகளில் அது கிடைக்கவேண்டிய நிலை ஏற்படலாம் என்பதை கருத்தில்கொண்டு பிஸ்மில்லாஹ் என்று எழுதுவதற்கு சில முஸ்லிம்கள் தயங்கவும் செய்தனர். மாற்று வழி ஒன்றை யோசித்துக்கொண்டிருந்தனர்.

ஒவ்வொரு எழுத்திற்கும் ஒரு எண்ணை குறியீடாக மாற்றிக்கொள்ளும் நியூ மராலஜி என்ற முறை மேலை நாடுகளில் தோன்றி அது பல நாடுகளையும் அது ஈர்த்தபோது அதனை அடிப்படையாகக் கொண்டு பிஸ்மில்லாஹ்வில் உள்ள ஒவ்வொரு எழுத்திற்கும் ஒரு எண்ணை குறியீடாக ஆக்கி அதனை மொத்தமாகக்கூட்டி அந்தக் கூட்டுத் தொகையான 786ஜ பிஸ்மில்லாஹ்வுக்கு பதிலாக எழுதத் துவங்கினர்.

நாளடைவில் அதுவே இஸ்லாத்தின்  சின்னம்  என்று  கருதும்  அளவுக்கு மக்கள்  இதயங்களில்  ஆழமாக பதிந்து விட்டது. தங்களில் வீடுகளில் முகப்புச் சுவர்களிலும், திருமண அழைப்பிதழ் களிலும்,  துண்டுப் பிரசுரங்களிலும்,  சுவரொட்டிகளிலும்,  புத்தகங்களிலும்   எழுதப்படாமல்  இருப்பதில்லை என்னும்  அளவுக்கு  முக்கிய இடத்தை  786  பிடித்துகொண்டது. இது  786  உடைய சுருக்கமான கதை.

தூய்மையற்ற பலரது கையில் கிடைக்கக்கூடும் என்பதற்காக இப்படி ஒரு மாற்று வழி  தேவைதானா என்று குர்ஆன், ஹதீஸ் ஒளியில் ஆராயும்போது இது தேவையில்லை என்ற முடிவுக்கே நாம் வரமுடியும்.

சுலைமான்(அலை) அவர்கள் தனது அண்டை நாட்டின் ராணிக்கு இஸ்லாத்திபால் அவளை அழைக்கும் எண்ணத்தில் கடிதம் ஒன்று எழுதுகிறார்கள். அந்த கடிதத்தின் துவக்கமாக பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம் என்று எழுதினார்கள் என்பதை திருக்குர்ஆனின்(27:30) என்ற வசனம் கூறுகிறது. இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத ஒரு பெண்ணுக்கு சுலைமான்(அலை) அவர்கள் முழுமையாக பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம் என்று எழுதியதிலிருந்து அதனை அல்லாஹ் தன் திருமறையில் எடுத்துச் சொன்னதிலிருந்து எவருக்கும் எழுதுகின்ற கடிதத்திலும் பிஸ்மில்லாஹவை எழுதலாம் என்பதை தெளிவாகின்றது.

இத்தாலி நட்டின் அதிபர் கைஸருக்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் “திஹ்யத்துல்கலபி” என்ற  சஹாபி மூலம் இஸ்லாமிய அழைப்பை அனுப்பியபோது அதன் துவக்கத்தில் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்று எழுதச் செய்திருந்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்.

நபித்தோழர் காலித் இப்னு வலீத் (ரழி) அவர்கள் ஈரான் நாட்டின் மன்னன் ருஸ்தம் என்பவருக்கு  இஸ்லாமிய அழைப்பு விடுத்து எழுதிய கடிதத்தை “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்” என்றே துவங்கியிருந்தார்கள். (அபூவாயில்(ரலி) ஷரஹுஸ்ஸுன்னா)

மேற்கூறிய இறைமறைக் கூற்றும், நபிவழியும், நபித்தோழர் வழியும் பிஸ்மில்லாஹ்வை தூய்மை யற்றவர்களுக்கு எழுதுவதனால் அதன் கண்ணியம் குறைந்துபோய்விடும் என்ற வாதத்தை நிராகரித்து விடுகின்றன.

அல்லாஹ்வுக்கும், அவனது தூதர் சுலைமான்(அலை) அவர்களுக்கும், அண்ணல் நபி(ஸல்) அவர்களுக்கும், அவர்களின் அன்புத் தோழர்  காலித்  இப்னு வலீத் (ரலி)  அவர்களுக்கும்  தெரியாத கண்ணியத்தை  786 என்று  எழுதுவோர் எங்கிருந்து கற்றனர் என்பதுதான்  நமக்கு தெரியவில்லை.

ஒரு முஸ்லிமை சந்திக்கும்போது அஸ்ஸலாமு அலைக்கும் என்று முகமன் கூறவேண்டும் என்பது யாவரும் அறிந்த ஒன்றாகும். எழுத்து மூலமாக ஸலாம் கூறவேண்டி வரும்போது அதனையும் எண் 632 என்று ஏன் எழுதுவதில்லை? 786 என்ற எண் பிஸ்மில்லாஹ்வுக்கு மட்டும் தான் வரும் என்பதில்லை. இன்னும் எத்தனையோ சொற்றொடர்களுக்கு இந்த எண்வரும் அவற்றில் சில விபரீதமான பொருள் தரக்கூடியதாகக் கூட இருக்கலாம். தாயத்து, தட்டு வியாபாரிகள் இதற்கு வக்காலத்து  வாங்கினாலும் நபிவழி செல்வோர் இதனை தவிர்த்து, பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்பதை முழுமையாக எழுதவேண்டும்.

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்பதை சுருக்கமான முறையில் 786 என்று சொல்கிறோம் என்று கூறுபவர்கள் ஏன் அவரவர் தங்கள் பெயரை ஏன் முழுமையாக எழுத வேண்டும். அதற்கு உரிய  எண்களைக்கூட்டி கைதிகளுக்கு  உள்ளதுபோல் ஏன் எண்  வடிவில் எழுதக்கூடாது?

ஏனெனில் அப்துல்லாஹ், அப்துர்ரஹ்மான் போன்ற பெயர்களை அப்படியே எழுதும்போது அந்தப்  பெயர்களிலும் அல்லாஹ்வுடைய பெயர் இருக்கத்தானே செய்கிறது! அதற்கும் எண்களைக் குறிப்பிட்டுக் கொள்வதுதானே பொருத்தமானது ஏன் செய்யவில்லை?

சிலர்  786 என்று  எழுதும்போது எங்கள் எண்ணத்தில் பிஸ்மில்லா இருக்கின்றது எனவே எழுதலாம் என்கின்றனர். அப்படி எழுதவேண்டிய அவசியம் என்ன வந்துவிட்டது என்பது நமது முதல் கேள்வி? 247336 என்று ஒருவன் எழுதிவிட்டு எனது எண்ணத்தில் “பகரா” சூரா உள்ளது, அதற்கான நன்மை எனக்குக் கிடைத்துவிடும் என்றால் இவர்கள் ஏற்றுக் கொள்வார்களா?

ஒவ்வொரு எழுத்துக்கும் 10 நன்மை தரக்கூடிய ஒரு சொல்லை என்ன அவசியத்துக்காக சுருக்கவேண்டும். இந்த 786ஜ பிறை வடிவுக்குள் அமைத்து அந்த வட்டத்துக்குள் நட்சத்திரம்  அமைப்பதும்  வழக்கத்தில்  உள்ளது அது  இஸ்லாத்தின்  சின்னமாகவும்  ஆக்கப்பட்ட்டுள்ளது.

பிறை வடிவுக்குள் இப்படி நட்சத்திரம்  வருவது விஞ்ஞான ரீதியில் சாத்தியமானது தானா? பிறைக்குள் நட்சத்திரத்தை யாரேனும் பார்த்திருக்கின்றீர்களா? விஞ்ஞானத்திற்கு வித்திட்ட இஸ்லாத்தின் சின்னமே அஞ்ஞானமா?

   S.M.மீரான் ஆலிம், மதுக்கூர்

{ 2 comments… read them below or add one }

A.Abdulrajak May 2, 2017 at 2:12 pm

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்பதை தமிழில் இறைவனின் திருப்பெயரால் அவன் அருளாளன் மற்றும் அன்பாளன் என தமிழ் அறிந்த அன்பர்களுக்கு எழுதி அனுப்பலாம் . இதனால் யாரும் கோபித்து கொள்ள மாட்டார்கள் . அரபியில் எழுதும் போது தான் இது வேறு பாஷை மேலும் அர்த்தம் புரியவில்லை என குழப்புவார்கள் . அதே போல் மற்ற மதத்தினர் நமக்கு வணக்கம் என்று சொல்லும் போது நாம் தமிழில் அவர்களுக்கு பதிலாக சாந்தியும் , இறைவன் அருளும் உங்கள் மீது உண்டாகட்டும் என சொல்லலாம் .அவர்கள் வழி அவர்களுக்கு .நம் வழி நமக்கு .

Reply

A.Abdulrajak May 2, 2017 at 2:17 pm

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்பதை தமிழில் அருளாளனும் ,அன்பாளனுமாகிய இறைவனின் திரு பெயரால் எனவும் ஆரம்பித்து கடிதம் எழுதலாம் .

Reply

Cancel reply

Leave a Comment

Previous post:

Next post: