நல் அமல்கள் நஷ்டமடையுமா?

in பொதுவானவை

அல்லாஹ்வின் விதிவிலக்குகளை வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் பின்பற்ற வேண்டும் என்று முதலில் எனக்கும், பின்பு உங்களுக்கும் உபதேசம் செய்கிறேன்.

ஒவ்வோர் ஆத்மாவும், தான் செய்த நன்மைகளும்; இன்னும், தான் செய்த தீமைகளும் அந்த(த் தீர்ப்பு) நாளில் தன்முன்கொண்டு வரப்பட்டதும், அது தான் செய்த தீமைக்கும் தனக்கும் இடையே வெகு தூரம் இருக்க வேண்டுமே என்று விரும்பும்;. அல்லஹ் தன்னைப்பற்றி நினைவு கூறுமாறு உங்களை எச்சரிக்கின்றான்;. இன்னும் அல்லஹ் தன் அடியார்கள் மீது கருணை உடையோனாக இருக்கின்றான். அல்குர்ஆன் 3:30

நாம் செய்த அமல்கள் எல்லாம் எந்த தரத்தில் உள்ளன. நம் அமல்கள் நம் மோசமான செயல்களினால் நஷ்டமடையுமா? தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளினால் நல் அமல்கள் எல்லாம் பாதிக்கப்படுமா? ஏனென்றால் நம் தவறான செயல்களினால் அல்லஹ்வின் முன் நிற்கும்போது, கைசேதப்பட்டு விடக்கூடாதே; அல்லாஹ் நம்மை இழிவுபடுத்தி விடக்கூடாதே; தோல்வியைத் தழுவிடக்கூடாதே என்பதற்காகத்தான்.

ஒரு வியாபாரம் செய்கிறோம் என்றால், வார முடிவிலோ மாத முடிவிலோ கணக்குப் பார்ப்போம். இலாபமா? நஷ்டமா? என்பது தெரிந்துவிடும். இலாபம் என்றால் இன்னும் அதிகம் இலாபம் சம்பாதிக்க முயற்சி செய்வோம். நஷ்டம் என்றால் இலாபம் அடைய முயற்சி செய்து பார்ப்போம். இன்னும் நஷ்டம்தான் என்றால் அந்த வியாபாரத்தை விட்டுவிடுவோம். ஆனால் நம்முடைய அமல்களை கணக்கு பார்ப்பதில்லை. இலாபமா? நஷ்டமா? என்று சிந்தித்து பார்ப்பதுமில்லை. நஷ்டம் என்றால் (நவூதுபில்லாஹ்) இன்னும் என்ன செய்யவேண்டும்? வியாபாரத்தில் நஷ்டம் என்றால் அந்த நஷ்டத்தை வாழ்நாள் முழுவதும் சொல்லிக்கொண்டே இருப்போம். ஆனால் நம்முடைய அமல்களில் கோட்டை விட்ட பின்பும் சுதாரிக்கவில்லை என்றால் மறுமை நாளில் தோல்வியை சந்திக்க நேரிடும்.

எனினும் (மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அவசரப்படுவதையே பிரியப்படுகிறீர்கள். ஆகவேதான் (இம்மையைப் பற்றிக் கொண்டு) மறுமையை விட்டு விடுகிறீர்கள். அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) செழுமையாக இருக்கும். தம்முடைய இறைவனளவில் நோக்கிய வையாக இருக்கும். ஆனால், அந்நாளில் வேறு சில முகங்களோ (துக்கத்தால்) சுண்டியிருக்கும். இடுப்பை ஒடிக்கும் ஒரு பேராபத்து தம்மீது ஏற்படப் போவதாக அவை உறுதி கொண்டிருக்கும். அல்குர்ஆன் 75:20-25

வேலை நேரங்களிலும் ஓய்வு கிடைக்கும் நேரங்களிலும் தேவையில்லாத சர்ச்சைகளிலும் வீண் விவாதங்களிலும், அவதூறுகளிலும், புறம் பேசுவதிலும் ஈடுபடுகிறோம். நம்மை படைத்த இறைவனை சந்திக்கும்போது, இந்த செயல்கள் நம்மை பஞ்சை பராரியாக ஆக்கிவிடக்கூடாதே, (நவூதுபில்லஹ்) பஞ்சை பராரி யார் என்றால் நல்அமல்கள் செய்தும் அல்லஹ்வின் முன்னிலையில் ஏழையாக நிற்பது.

வறியவன் (பஞ்சை பராரி) என்பவன் யார்? என்று நபி அவர்கள் வினவினார்கள். மக்கள் கூறினர்: எவரிடம் திர்ஹமோ, வேறு எந்த பொருளோ இல்லையோ அவரே எங்களில் வறியவர் ஆவர் என்று கூறினர்.நபி அவர்கள் பதிலளித்தார்கள். ஒருவன் மறுமை நாளில் தொழுகையுடனும், நோன்புடனும், ஜகாத்துடனும் அல்லஹ்விடம் ஆஜராவான். அவற்றுடன் அவன் உலகில் எவரையேனும் திட்டியிருப்பான், எவர்மீதாவது இட்டுக்கட்டி அவதூறு கூறியிருப்பான்; எவரேனும் ஒருவரின் செல்வத்தைப் பறித்துப் தின்றிருப்பான்; எவரேயேனும் கொன்றிருப்பான்; எவரேயேனும் நியாமின்றி அடித்திருப்பான். எனவே அந்த அநீதிக்குள்ளானவர்கள் அனைவரிடையேயும் அவனது நன்மைகள் பங்கிடப்படும். பிறகு அவனது நன்மைகள் தீர்ந்துபோய், அநீதிக்கு உள்ளானவர்களின் உரிமைகள் இன்னும் எஞ்சியிருந்தால் அவர்களின் பாவங்கள் அவனது கணக்கில் எழுதப்பட்டு விடும். பிறகு அவன் நரகத்தில் வீசி எறியப்படுவான். அத்தகையோரே உண்மையில் வறியவன் ஆவார். அறிவிப்பவர்: அபூ†ுரைரா(ரழி) நூல்: முஸ்லிம்

இன்னும் சிலர் அல்லஹ்வும் அவன் தூதரும் காட்டித்தராத முறையில் உழைக்கின்றார்கள். தங்கள் எண்ணத்தில் பெரும் இலாபம் அடைவதாக எண்ணிக் கொள்கிறார்கள். ஆனால் பெரும் நஷ்டமடைந்தவர்களாக இருக்கின்றனர்.

அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும். அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும். அல்குர்ஆன் 88:2,3

‘(தம்) செயல்களில் மிகப் பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று (நபியே!) நீர் கேட்பீராக. யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான். அல்குர்ஆன் 18:103,104

பாவத்திற்குமேல் பாவம் செய்து கறைகளின் மேல் கறைகள் படிந்து நாம் வாழ்வில் முன்னேறிச் செல்கிறோம். நாம் நம்மில் இருக்கும் கறைகளை மாற்ற முயற்சி செய்ய மாட்டோமா? இதே ரீதியில் சென்றால் நம்முடைய இறுதி முடிவு எப்படி இருக்கும்? நம்மை படைத்த இறைவனை சந்திக்கும்போது பாவங்களுக்காக வெருண்டு ஓடுவோமா? இல்லை வெற்றி பெறுவோமா? எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களை மன்னித்து விடு அல்லாஹ் உன்னை தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்?

எனவே, (அந்நாளில்) எவருடைய (நன்மையின்) நிறை கனத்ததோ- அவர் திருப்தி பொருந்திய வாழ்வில் இருப்பார். ஆனால் எவனுடைய (நன்மையின்) நிறை இலேசாக இருக்கிறதோ- (அவர் பெரும் நஷ்டவாளியாவார்) அல்குர்ஆன் 101:6-8

அல்லாஹ் நம் அனைவரையும் நன்மைகள் அதிகம் செய்து வெற்றிபெறும் சிறிய கூட்டத்தினரோடு சேர்த்து வைப்பானாக.

S.A.N. மங்களூர்

Leave a Comment

Previous post:

Next post: