லுஹாத் தொழுகை

in தொழுகை

லுஹாத் தொழுகை

லுஹாத் தொழுகை உபரித் தொழுகைகளில் ஒன்றாக லுஹாத் தொழுகையை நபி(ஸல்) அவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளார்கள். லுஹாத் தொழுகையை தானும் தொழுததுடன் தோழர்களுக்கும் உபதேசித்துள்ளார்கள்.

1 என்னுடைய நண்பர் நபி(ஸல்) அவர்கள் எனக்கு ஒவ்வொரு மாதமும் மூன்று நாள் நோன்பு நோற்குமாறும் இரண்டு ரக்அத் லுஹாத் தொழுகையை தொழுமாறும். இரவில் தூங்குவதற்கு முன்னால் வித்ரு தொழுகையை தொழுமாறும் எனக்கு உபதேசித்துள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ, அஹமத்

2 ஒவ்வொரு மாதமும் மூன்று நோன்பை நோற்குமாறும், லுஹாத் தொழுகை தொழுமாறும் வித்ரு தொழுகை தொழாமல் தூங்கக்கூடாது எனக்கு என்று எனது சிநேகிதர் நபி(ஸல்) அவர்கள் உபதேசித்துள்ளார்கள். அறிவிப்பவர்: அபுதர்(ரலி) நூல்: முஸ்லிம்

3 நபி(ஸல்) அவர்கள் லுஹாத் தொழுகை தொழுவார்களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் நபி(ஸல்) அவர்கள் பயணத்திலிருந்து திரும்பி வந்தாலேயன்றி (வேறு நேரங்களில்) தொழமாட்டார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ்பின் ஷகீக(ரலி) நூல்: முஸ்லிம்

4 நபி(ஸல்) அவர்கள் லுஹாத் தொழ நான் பார்த்ததில்லை ஆனால் நான் தொழுவேன். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், முஅத்தா, அஹமத்

லுஹாத் தொழுகையை தொழுமாறு உபதேசித்த நபி(ஸல்) அவர்கள் அதனுடைய நேரத்தையும் குறிப்பிட்டுள்ளோர்கள்.
5 (காலைநேரத்தில்) நபி(ஸல்) அவர்கள் குபாவாசிகளிடம் (புறப்பட்டு) வந்தபோது அவர்கள் தொழுவதை கண்டார்கள். அவ்வாபீன்களின் (இறைவனிடம் மீளுபவர்கள்) தொழுகை வெப்பமேறிய மணல் அதனால் ஒட்டக குட்டிகளின் கால்கள் சுட்டோரிக்கும் உள்ள நேரமேயாகும் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஜைதுபின் அர்கம் நூல்: முஸ்லிம், திர்மிதி

லுஹாத் தொழுகையின் நேரம் சூரியன் உச்சிக்குவருமுன் உள்ள நேரமாகும். அதாவது முற்பகலாகும் என்பதை நபி(ஸல்) அவர்கள் உவமையின் மூலமாக விளக்கியுள்ளார்கள். அது ஃபஜர் மற்றும் லுஹர்ருக்கு இடைப்பட்ட நேரமாகும் எண்ணமுடிகிறது.

லுஹாத் தொழுகை எத்தனை ரத்அத்கள் தொழலாம் என்பதை காண்போம்.
6 லுஹாத் தொழுகை இரண்டு ரக்அத்கள் தொழலாம் நபி(ஸல்) அவர்கள் எனக்கு இரண்டு ரக்அத்கள் தொழுமாறு எனக்கு உபதேசம் செய்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்

7 உடல் பருமனாக இருந்த ஓர் அன்ஸாரித் தோழர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து உங்களிடம், சேர்ந்து (நின்று) என்னால் தொழ இயலவில்லை என முறையிட்டார். மேலும் அவர்களுக்காக உணவு சமைத்து, விருந்திற்காக தம் இல்லத்திற்கு அழைத்தார். நபி(ஸல்) அவர்கள் தொழுவதற்காக பாயின் ஓர் ஓரத்தில் தண்ணீர் தெளித்து பதப்படுதினார். நபி(ஸல்) அவர்கள் அதன் மீது இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். நபி(ஸல்) அவர்கள் லுஹாத் தொழுவார்களா? என்று அனஸ்(ரலி) இடம் கேட்டேன் அதற்கவர்கள் அன்றைய தினம் தவிரவேறு எப்போதும் தொழ நான் பார்த்ததில்லை என விடையளித்தார்கள் என்று இப்னுல் ஜாரூத் குறிப்பிட்டார். அறிவிப்பவர்: அனஸ்(ரலி) நூல்: புகாரி

8 நீங்கள் காலை விழிக்கும் போது உங்களுடைய ஒவ்வொரு உருப்புகளுக்கும் தர்மம் இருக்கிறது. எனவே ஒவ்வொரு தடவை (ஸுப்ஹானல்லாஹ்) என்று தஸ்பீஹ் சொல்வதும் ஸதாகவாகிறது. ஒவ்வொரு தடவை (அல்ஹம்துலில்லா) என்று சொல்வதும் ஸதகாவாகிறது. ஒவ்வொரு தடவை (லாயிலாஹ இல்லல்லாஹ்) சொல்வதும் ஸதகாவாகிறது. ஒவ்வொரு தடவை (அல்லாஹ{ அக்பர்) என்று சொல்வதும் ஸதகாவாகிறது. நன்மையை ஏவுவதும் ஸதகாவாகிறது தீமையைத் தடுப்பதும் ஸதகாவாகிறது. இவை அனைத்திற்கும் லுஹாவின் இரண்டு ரக்அத்துகள் தொழுவது போதுமானதாகி விடுகிறது. அறிவிப்பவர்: அபூதர்(ரலி) நூல்: முஸ்லிம், அபூதாவூத்

லுஹாத் தொழுகையை நான்காக தொழலாம்
9. நபி(ஸல்) அவர்கள் நான்கு ரக்அத் லுஹாத் தொழுகை தொழுவார்கள் மேலும் மாஷா அல்லாஹ் அதைவிடவும் அதிகப்படுத்தியும் தொழுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்கள்: முஸ்லிம், அஹமத் லுஹாத் தொழுகையை எட்டு ரக்அத்களாக தொழலாம்.

10 மக்கா வெற்றியின் போது நபி(ஸல்) அவர்கள் எனது இல்லத்திற்கு வந்து குளித்து விட்டு எட்டு ரக்அத்கள் (லுஹாத் தொழுகை தொழுதார்கள். அதை விட சுருக்கமாக வேறு எந்த தொழுகையையும் அவர்கள் தொழ நான் பார்த்ததில்லை ஆயினும் அவர்கள் ருகூவையும், ஸ{ஜுதையும் முழுமையாக செய்தார்கள். அறிவிப்பவர்: உம்முஹானி(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

மேலும் அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்கள் லுஹாத் தொழுகை எட்டு ரக்அத்களாக தொழுதார்கள் என்று அறிவிக்கும் செய்தி ஹிப்னுஹிப்பானில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

11. நான் நபி(ஸல்) அவர்கள் பயணத்தில் எட்டு ரக்அத்கள் லுஹாத் தொழுகையை தொழுததை நான் பார்த்தேன். அறிவிப்பவர்:அனஸ்பின்மாலிக்(ரலி) நூல்கள்: அஹமத், இப்னுகுஸைமா, ஹாகிம்

உபரியான லுஹாத் தொழுகை பற்றி நபி(ஸல்) அவர்களின் அதை தொழுவதினால் ஊந்தக்கூடிய உபதேசங்கள் அத்தொழுகையின் நேரம் மற்றும் ரக்அத்துகளின் எண்ணிக்கை ஆகியவை கண்டோம். அன்னை ஆயிஷா(ரலி) அவர்களின் ஹதீஸ்கள் வாசகர்களுக்கு வித்தியாசமாக தெரியலாம். காரணம் நபி(ஸல்) அவர்கள் லுஹாத் தொழுகை தொழுததாக நான் பார்த்ததில்லை என்கிறார்கள். ஆனால் மற்றுமொரு ஹதீஸ்களில் நபி(ஸல்) அவர்கள் நான்கு ரக்அத்துகள் எட்டுரக்அத்துகள் லுஹாத் தொழுததாக அறிவிக்கிறார்கள், எப்படி அவர்கள் பார்க்காமல் லுஹாத் தொழுகையின் தொழுகையின் எண்ணிக்கை அறிவிக்கிறார்கள் என்று ஐயம் ஏற்படலாம். அன்னை ஆயிஷா(ரலி) அவர்களின் ஹதீஸ்கள் முரண்பாடில்லாமல் புரிய வேண்டுமெனில் அறிஞர்களில் சிலர் நபி(ஸல்) அவர்கள் முற்பகல் நேரத்தில் வீட்டில் இல்லாமைதான் ஆயிஷா(ரலி) அவர்கள் பார்க்காததற்கு காரணம் என்கின்றனர். ஆனால் இமாம் பைஹகீ(ரஹ்) அவர்கள் விளக்கும்போது அன்னை ஆயிஷா(ரலி) அவர்களின் ”நான் நபி(ஸல்) அவர்கள் தொழுததாக பார்க்கவில்லை என்பதற்கு தொடர்ந்து தொழுததாக நான் பார்க்கவில்லை என்று தான் விளங்கவேண்டும் என்றும் ”ஆனால் நான் தொழுவேன்” என்று அன்னை ஆயிஷா(ரலி) அவர்களின் கருத்துக்கு நான் தொடர்ந்து தொழுவேன் என்று விளங்க வேண்டும் என்று கூறுகிறார். நூல்: ஃபத்ஹுல்பாரி,  ஹதீஸ்எண் 1177 இமாம் பைஹகீ(ரஹ்) அவர்களின் கருத்தை வலுஊட்டும் வண்ணமாக அன்னை ஆயிஷா(ரலி) அவர்களின் ஹதீஸே ஆதாரமாக உள்ளது.

12. நபி(ஸல்) அவர்கள் லுஹாத் தொழுகை தொழுவார்களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் நபி(ஸல்) அவர்கள் பயணத்திலிருந்து திரும்பி வந்தாலேயன்றி (வேறு நேரங்களில்) தொழமாட்டார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஷகீம்(ரலி) நூல்: முஸ்லிம்

மேற்கண்ட ஹதீஸ் லுஹாத் தொழுகையை நபி(ஸல்) அவர்கள் தொழுததை பார்த்துள்ளார்கள் என்பதை தெளிவாகிறது இந்த அடிப்படையில் தான் அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் லுஹாத் தொழுகையின் எண்ணிக்கையை அறிவித்துள்ளார்கள் என்பதை ஐயமில்லாமல் விளங்கி கொள்ளலாம்.

Comments on this entry are closed.

Previous post:

Next post: