விழிப்புணர்வு நேரமிது!

in பொதுவானவை

பொருளாதாரச் சீர்திருத்தம், தாராளமயம் என்கிற பெயரில் யாரும் எதை வேண்டுமானாலும் செய்து மக்கள் நலனையும், நாட்டு நலனையும் காற்றில் பறக்கவிட்டுக் கொள்ளையடித்துக் கொள்ளலாம் என்கிற நிலைமை ஏற்பட்டுவிட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது. அரசியல்வாதிகளுக்கும், அதிகார வர்க்கத்தினருக்கும் விலை நிர்ணயிக்கப்பட்டிருப்பதுடன், விலைபோகாதவர்கள் யாருமே இருக்க முடியாது என்கிற மனோநிலையும் தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதுதான் அதைவிடப் பெரிய ஆபத்தாகத் தெரிகிறது. 

எந்த ஒரு புதிய தொழில்நுட்பத்துக்கும், தொழிலுக்கும் அனுமதி வழங்கும்போது, அதனால் தேசத்துக்கு ஏற்பட இருக்கும் நன்மை தீமைகளையும், மக்களுக்கு ஏற்பட இருக்கும் சாதக பாதகங்களையும் சீர்தூக்கி முடிவெடுப்பதற்காகத்தான் ஓர் அரசும், அரசு இயந்திரமும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், நடைமுறையில் தேசத்தையோ, மக்களையோ பற்றிய கவலையே இல்லாமல் தொழில் நிறுவனங்களின் நன்மையை மட்டுமே கருத்தில்கொண்டு செயல்படும் மக்கள் பிரதிநிதிகளையும், மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் அதிகார வர்க்கத்தையும் இந்தியாவில் மட்டும்தான் காண முடியும் போலிருக்கிறது. 

செல்போன் என்கிற கைப்பேசி ஒரு விஞ்ஞானப் புரட்சி என்றும், பொருளாதார வளர்ச்சியின் அடையாளம் என்றும் மக்களை நம்ப வைத்தாகிவிட்டது. உலகிலேயே மிக அதிகமான கைப்பேசிகள் இந்தியாவில்தான் இருக்கப் போகின்றன. யாரைப் பார்த்தாலும் கைப்பேசியும் காதுமாகத்தான் இருக்கிறார்கள். ஒவ்வொரு தடவை கைப்பேசியில் பேசும்போதும் ஏதோ ஒரு நிறுவனத்துக்கு வருமானம் சேர்ந்துகொண்டே இருக்கிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றிய கவலை யாருக்குமே இல்லை. 

அரசு கைப்பேசியை அனுமதிக்கும் முன்னால், அதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை அந்த நிறுவனம் செய்தாக வேண்டும், போதிய பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடித்திருக்க வேண்டும் என்று வரைமுறைகளை விதித்து மக்கள் நலனைப் பாதுகாத்திருக்க வேண்டாமா? அடுத்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய சுகாதாரப் பிரச்னையாக, பல லட்சம் பயனாளிகளின் உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும் ஒன்றாகக் கைப்பேசிகள் மாறிவிடும் ஆபத்தைப் பற்றிச் சிந்தித்திருக்க வேண்டாமா? 

புதிது புதிதாகக் கைப்பேசி உரிமம் பல நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. “ஸ்பெக்ட்ரம்’ ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடும், அதனால் அரசுக்கு ஏற்பட்டிருக்கும் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பும்தான் சந்தி சிரிக்கிறதே. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டின் மூலம் உரிமம் பெற்ற பல நிறுவனங்கள் களமிறங்கிவிட்ட நிலையில், ஆங்காங்கே காளான்கள்போல உருவாகி வருகின்றன கைப்பேசி கோபுரங்கள். இந்த செல்போன் டவர்கள் எனப்படும் நுண்ணலை கோபுரங்கள் மூலம்தான் தடங்கல் இல்லாத சேவையைக் கைப்பேசி நிறுவனங்கள் அளிக்க முடியும். 

மூன்று மாதத்துக்கு முந்தைய புள்ளிவிவரப்படி, ஏறத்தாழ 5 லட்சத்து 62 ஆயிரம் நுண்ணலை கோபுரங்கள் இந்தியா முழுவதும் எழுப்பப்பட்டிருந்தன. இப்போது இன்னும் சில ஆயிரம் கோபுரங்கள் எழுப்பப்பட்டிருக்கலாம். இந்தக் கோபுரங்களிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சால் ஏற்படும் பிரச்னைகள் பற்றிச் சொல்லி மாளாது. இதெல்லாம் நமது தொலைத்தொடர்புத் துறைக்குத் தெரியாதா என்ன? 

நுண்ணலை கோபுரங்கள் அமைப்பதற்கான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு அவை மீறப்படாமல் பார்த்துக் கொள்வதுதானே ஓர் அரசின் கடமை. நமது தொலைத்தொடர்புத் துறை என்ன செய்திருக்கிறது தெரியுமா? நுண்ணலை கோபுரங்களை அமைக்கும் கைப்பேசி நிறுவனங்கள், தாங்களே பரிசோதனை செய்து, கதிர்வீச்சின் அளவு குறிப்பிட்ட அளவுதான் இருக்கிறது என்று ஒரு நற்சான்றிதழ் தங்களுக்குத் தாங்களே வழங்கிக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது. இதற்குப் பெயர் உத்தரவா இல்லை வேண்டுகோளா என்பது தெரியவில்லை. 

இதைக்கூட நமது கைப்பேசி நிறுவனங்கள் செய்யத் தயாராக இல்லை. மாதந்தோறும் தங்களது வாடிக்கையாளர் எண்ணிக்கையையும், நுண்ணலை கோபுரங்களின் எண்ணிக்கையையும் அதிகரிப்பதில் அக்கறை காட்டும் இந்த நிறுவனங்கள், தங்களது வியாபாரத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு வருவதைப் பற்றி ஏன் கவலைப்படப் போகிறார்கள்? ஆனால், அதை மேற்பார்வை பார்க்க வேண்டிய அரசும் அல்லவா தூங்கிக் கொண்டிருக்கிறது. 

நுண்ணலை கோபுரங்கள் குடியிருப்புப் பகுதிகளில் அமைக்கப்படக் கூடாது என்றும் அதனால் உடல்நிலையில் பல பாதிப்புகள் ஏற்படும் என்றும் நீதிமன்றத் தீர்ப்புகளும், சுகாதார ஆய்வுகளும் வந்த பின்னும் இதைத் தடுக்க யாரும் தயாராக இல்லை. முறையான அனுமதி பெற்றுத்தான் ஒரு நுண்ணலை கோபுரம் அமைக்கப்பட்டிருக்கிறது என்பதற்கான மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி அமைப்பின் அறிவிப்பு ஒவ்வொரு நுண்ணலை கோபுரத்திலும் கண்ணில் படும்படியாக இருத்தல் வேண்டும் என்று இதுவரை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. 

நுண்ணலை கோபுரங்கள் இருக்கட்டும். கைப்பேசிகள் எந்த அளவுக்குப் பாதுகாப்பானவை என்பதைப் பற்றி யாராவது கவலைப்படுகிறார்களா? புதிய புதிய மாடல்களை வாங்குவதில் அக்கறை செலுத்தும் வாடிக்கையாளர்கள், அனுமதிக்கப்பட்ட அளவுக்குக் கதிர்வீச்சு உள்ள கைப்பேசிதானா என்று பரிசோதிக்கவா செய்கிறார்கள்? பன்னாட்டு கைப்பேசித் தயாரிப்பாளர்கள் அவர்களது நாட்டு விதிமுறைக்கு ஏற்ப குறைந்த கதிர்வீச்சுள்ள கைப்பேசிகளை இந்தியாவில் தயாரிப்பதில்லை என்பது நம்மில் எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம்? 

பாவம், இந்தியக் குடிமக்கள். தங்களது பொன்னான நேரத்தைப் பேசிக் கழித்து, பணத்தையும் விரயமாக்கி, தங்களது உடல்நலத்தையும் பாதிப்புக்கு உள்படுத்திக் கொள்கிறார்கள். இவர்களும் கவலைப்படவில்லை, இவர்களைப் பற்றி அரசும் கவலைப்படவில்லை என்பதற்காக, நம்மால் வேடிக்கை பார்க்க முடியவில்லை. கைப்பேசிக் கதிர்வீச்சால் ஏற்பட இருக்கும் மிகப்பெரிய பாதிப்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டாக வேண்டும்!

தினமணி

{ 2 comments… read them below or add one }

ziaul haq March 28, 2011 at 8:03 pm

very nice articles.

Reply

abdul rahiman haneefa August 4, 2012 at 2:05 am

assalamu alaikkum

ellavarukkum poi chera vendiya miga mukkiyamana katturai ithu , indru neril kanum manithanidam salam chollivittu, phonil pesum manuithargale athigam.

asthapirullahil aleem

Reply

Cancel reply

Leave a Comment

Previous post:

Next post: