உங்கள் தேர்வு! (கோபம்)

Post image for உங்கள் தேர்வு! (கோபம்)

in பொதுவானவை

(இறைவன் மீது பயபக்தியுடையோர்) தங்களின் கோபத்தை மென்று விழுங்கி விடுவார்கள். மனிதர்களின் குற்றங்களை மன்னித்து விடுவார்கள். அல்லாஹ் இத்தகைய நல்லோர்களை நேசிக்கின்றான். (அல்குர்ஆன் 3:134)

பொதுவாக இந்த உலகில் வாழும் நாம் ஒவ்வொருவருமே, விரும்பினாலும், விரும்பா விட்டாலும், பிற மனிதரோடு இணைந்தே வாழ வேண்டிய நிலையில் இருக்கிறோம். அந்தப் பிற மனிதன், நமது கணவனாக, மனைவியாக, நண்பனாக உறவினராக, சகபணியாளனாக, மாற்று மதத்தைச் சார்ந்தவர்களாக, இப்படி பல்வேறு வகையினராக இருக்கலாம். அவர்கள் அனைவருமே, நல்லவர்களாக இருந்திடுவதில்லை. அவர்களில் ஒருசிலர் தீயவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் நமக்கு தீங்கு விளைவிக்கும்போது, அவமானப்படுத்தும் போது ஆத்திரம் வரும். பழிவாங்க வேண்டும் என்று நமது உள்ளம் ஆர்ப்பரிக்கும். அதுதான் இயற்கையும் கூட.

ஆனால்… உலகில் ஒவ்வொருவருமே இப்படி பழிவாங்கும் எண்ணத்தோடு அலைந்தால் அல்லது திருப்பித்தாக்க ஆரம்பித்துவிட்டால், உலகில் உடலாலும்-மனதாலும் ஊனமுற்றவர்களே நிறைந்து காணப்படுவார்கள். உலகில் ஏற்படும், அத்தனை பிரச்சனைகளுக்கும் அடித்தளம் என்ன வென்று நீங்கள் யோசித்துப் பார்த்தால், சகிப்புத் தன்மை இல்லாததுதான் முக்கிய காரணம் என்பதை நாம் உணரலாம். எனவே தான், மேற்கண்ட இறைவசனத்தின் மூலம் இஸ்லாம் சகிப் புத் தன்மையை இறை நம்பிக்கையாளனின் பண்புகளில் ஒன்றாகக் குறிப்பிடுகிறது. கோபம் கூடாது என்று கூறவில்லை மாறாக கோபத்தை மென்று விழுங்கி விடுமாறு வலியுறுத்துகிறது.

கோபப்படும் மனிதர்கள் ஒவ்வொரு வரும் கொஞ்சம் சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டும். ஏனெனில் நடைமுறை வாழ்வில் உப்புக்கல்லுக்கும் பெறாத, சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் நாம் கோபப்பட்டு நம் உடலையும் மனதையும் வருத்திக் கொள்கிறோம். ஒரு வகையில் பார்த்தால் கோபம் என்பது கூட தற்காலிகமான ஒரு பைத்தியக்காரத்தனம்தான். கோபத்தின் உச்சகட்ட நிலையை அடைந்த ஒருவன், அதன் தொடர்ச்சியாக பல்வேறு வகையான முட்டாள்த் தனமான செயல்களில் ஈடுபடுவான். (உ.ம்) தட்டியவுடன் கதவு திறக்கவில்லை என்றால்… உடனே நாம் கதவையே திட்ட ஆரம்பித்து விடுவோம். இன்னும் சிலர் அந்தக் கதவையே எட்டி உதைப்பதும் கூட உண்டு. இது வெல்லாம் கோபம் என்ற பைத்தியக் காரத்தனத்தின் வெளிப்பாடு.

கோபத்தின் மூலம், நன்மையா? தீமையா? என்று சிந்தித்துப் பார்த்தால்…. நன்மையை விட தீமையே நிறைந்து காணப்படும். சே… அவசரப்பட்டு விட்டோமே… அந்த நேரத்தில் நாம் ஏன் அப்படி நடந்து கொண்டோம்? இந்தக் கேள்வியைத் தாண்டி வராத மனிதர்களே யாரும் இருக்க முடியாது. கோபத்தோடு ஒருவன் இடத்திலிருந்து எழுகிறான் என்றால் … அவன் நஷ்டத்தோடுதான் உட்கார வேண்டியது ஏற்படும். கோபத்தில் ஒருவனைப் பழிவாங்குவதைவிட, அவனை மன்னித்து விடுவதில் நமக்குப் பல்வேறு பயன்கள் உண்டு என்பதை முதலில் புரிந்துகொள் வேண்டும்.

நன்மையும் தீமையும் சமமாகிவிடாது. (ஆதலால், நபியே! தீமையை) நீங்கள் நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்ளுங்கள்.  அவ்வாறாயின் உங்களுடைய கொடிய எதிரியை அதே சமயத்தில் உங்களுடைய உண்மையான, மிக்க நெருங்கிய நண்பனைப் போல் காணபீர்கள். (41:34)

ஒருவனை மன்னிப்பதின் மூலம் அவனுடைய அன்பு, நன்றி உணர்வு போன்றவற்றை இலவச இணைப்பாகவும் பெற முடியும். இதற்கு மாற்றமாக நாம் கோபப்பட்டால் அதனால் நம்முடைய எனர்ஜி அதிக அளவில் செலவாகிறது. உடல் மற்றும் மன அமைதி கெடுகிறது என்பது மாத்திரமல்ல; எதிராளியின் தொடர் கோபம் மற்றும் பகைமைக்கும் ஆளாகிறோம். கோபத்தில் ஆத்திரப்பட்டு வார்த்தைகளைக் கொட்டுவதின் மூலம் எதிரிகளில் ஒருவனை அதிகமாக்குவது அறிவுடமையா? இல்லை பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை மூலம் புதிதாக ஒரு நண்பனை அடைது அறிவுடமையா? என்பதை நீங்களே சிந்தித்து முடிவு செய்து கொள்ளுங்கள்.

மனிதர்களுக்கு நேர்வழி காட்டும் நெறிநூலாகிய அல்குர்ஆன் கூறுகிறது: நிலைகுலையாது நின்று மன்னிக்கும் மாண்புடையோர், நிச்சயமாக இது உறுதி படைத்த நெஞ்சினரின் பணியாகவன்றோ உள்ளது? (42:43)

எனவே, அவர்களை மன்னித்து, புறக்கணித்து விடுவீராக! நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரை நேசிக்கின்றான். (5:13)

நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்; ஒருவன் உங்களை அவமானப்படுத்தினால், ஏளனம் செய்தால், குறை கண்டால், பலருக்கு மத்தியில் மானபங்கப்படுத்தினால், அதைப் பொறுத்துக் கொள்ளுங்கள். அதற்குப் பதில் தரும் வகையில் நீங்களும் அவனை ஏசவோ, அவமானப்படுத்தவோ வேண்டாம்! ஏனென்றால் அவன் உங்களுக்கு எதிராகப் பேசிய அந்த வார்த்தையே-செய்த அந்தச் செயலே அவனை அவமானப்படுத்தப் போதுமான ஒன்றாகும். (அபூதாவூத்)

அதெப்படி…. ஒருவன் நம்மை அவமானப்படுத்தும் போது நாம் மட்டும் சும்மா வாயைப் பொத்திக் கொண்டு அமைதி காப்பது? நாக்கைப் புடுங்கிக் கொள்கிற மாதிரி நாலு கேள்வி கேட்டால் தானே, மனது ஆறும்! என்று நீங்கள் கேட்கலாம்… உங்கள் மனதை ஆறுதலாக்க கூடிய இந்த நபி மொழியைக் கொஞ்சம் சிந்தியுங்கள்!

ஒருவன் இன்னொருவனைத் திட்டுகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். உடனே அது குறிபார்த்து எறியப்பட்ட அம்புபோல நேரே எதிராளியைப் போய் தாக்கி விடுவதில்லை. அந்த வார்த்தை சிலபல இடங்களுக்குப் பயணப் படுகிறது. முதலாவதாக அது வானத்தின் பக்கம் செல்கிறது. ஆனால் வானத்தின் கதவுகள் மூடப் பட்டிருக்கும். உடனே அது இந்த பூமிக்கு மீண்டும் திரும்புகிறது. இங்கே பூமியின் கதவுகளும் மூடப்பட்டு விடும். எனவே அந்த வார்த்தை இங்கும் அங்குமாக இடம் தேடி அலையும். எங்கேயும் அதற்கு இடம் கிடைக்காது. இதற்குப் பின் தான் அது எதிராளியிடம் செல்லும். சென்ற உடனேயே அது அவனைத் தாக்கி விடுவதில்லை. அதற்கு அவன் உரித்தானவனா என்று கொஞ்ச நேரம் நின்று யோசிக்கும். உரித்தானவன் என்றால் அது அவனைச் சென்றடையும். இல்லையயன்றால் …. சுவற்றில் எறியப்பட்ட பந்துபோல் எறிந்தவன் மீதே திரும்ப வந்து பாயும். நபி(ஸல்) அவர்கள் சொன்ன தெளிவான அந்த செய்தியானது அபூதாவூத் என்ற நபி மொழி நூலில் பதிவு செய்யப் பட்டுள்ளது.

நம்மீது எறியப்பட்ட சொல்லம்புகள், நமக்கானது இல்லை என்கிற போது அதை நினைத்து நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? அதற்காக கோபப்பட்டு நம் எனர்ஜியை நாம் ஏன் குறைத்துக் கொள்ள வேண்டும்? இத்தகைய மனோநிலை, நம் வீட்டில், சமூகத்தில், மக்கள் தொடர்பில் வந்து விட்டால் பிரச்சனைகள் தோன்றுமா? குழப்பங்கள் உருவாகுமா? சிந்தியுங்கள்?

நமக்குத் துன்பம் தருபவர்களைத் தேடிக் கண்டு பிடித்து பழி வாங்க வேண்டும் என்று நினைப்பது ஒரு நல்ல முஸ்லிமுக்குரிய அடையாளம் அல்ல! ஒரு நாய் கடித்து விட்டது என்பதற்காக அதைத் தேடிக் கண்டு பிடித்து கடிக்கவா செய்கிறோம்? அப்படிச் செய்பவன் அறிவாளியாக இருக்க முடியுமா? என்பதைச் சற்று சிந்தியுங்கள். அப்படியானால் எனக்குத் துன்பம் விளைவிப்பவனை, என்னை அவமானத்திற்கு உள்ளாக்குபவனை நான் என்ன தான் செய்வது? மன்னித்து விடுங்கள்!

பலவிதங்களிலும் நமக்கு உதவி செய்யக் கூடியது பல்; ஆனால் சில சமயங்களில் தவறி நமது நாக்கைக் கடித்து விடுவது உண்டு. அப்போது அதன் மீது ஆத்திரப்பட்டு தண்டனை கொடுத்துவிடவா செய்கிறோம்? ஏதோ தவறு நடந்து விட்டது என்று பொறுத்துக் கொள்கிறோம். அது போலத்தான் நமக்குத் துன்பம் விளைவிப்போரை பொறுத்துக் கொள்ள நாம் பழகிக் கொள்ள வேண்டும்.

ஒரு பிரச்சனை என்று வரும்போது நம்மிடம் தோன்றக் கூடிய முதல் விஷயம் டென்ஷன்!. பதறிய காரியம் சிதறும் என்பது பழமொழி. இந்த டென்ஷனுடனும், கோபத்துடனும் ஒரு பிரச்சனையை அணுகும்போது அந்த காரியம் சிந்திய காரியமாகிவிடும். மேலும் பிரச்சனைகளைத் தவறாக அணுகிடும்போது மேலும் சிக்கலாக்கிக் கொள்வது தான் மனிதர்களின் வழக்கம். ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒரு சரியான தீர்வு இருக்கிறது. அதை எப்படிக் கண்டுபிடித்துச் செயல்படுத்துவது என்பதில் தான் திறமை அடங்கியிருக்கிறது. எந்த பிரச்சனை என்றாலும் முதலில் கோபம் அல்லது உணர்ச்சி வசப்படக் கூடாது. யார் அல்லது எதன் மேல் தப்பு/ தவறு என்று எடுத்த உடன் முடிவுக்கு வரக்கூடாது. இதுதான் இதற்குத் தீர்வு என்று உடனடியாகத் தீர்மானிக்கக் கூடாது. எல்லா பக்கங்களில் இருந்தும் யோசிக்க வேண்டும்.

பிரச்சனைகளை கிரியேட்டிவாக அணுகுவது சிறப்புக்குரியது. கிரியேட்டிவாக பிரச்சனையை அணுகுவது என்பது, பிரச்சனையின் எல்லா கோணங்களையும் தெளிவாக ஆராய்ந்து அதற்குரிய சரியான தீர்வைக் கண்டடைவது தான் அது; கிரியேட்டிவ் திங்கிங். இதற்கு இறைநம்பிக்கை, இறையச்சம், நியாயம், நிதானம், லேட்டரல் திங்கிங் எனப்படும் பலமுகப் பார்வை இதெல்லாமே தேவைப்படும். நாம் சில வேளை தவறுகள் புரிந்து விட்டு இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுகிறோம். அதை இறைவன் மன்னித்து விட வேண்டும் என்றும் ஆசைப்படுகிறோம். என் இறைவன் என்னுடைய குற்றங்களை மன்னிக்க வேண்டும் என விரும்பக்கூடிய நாம், நமது சக மனிதர்களின் குற்றங்களை மன்னிக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பது முரண் இல்லையா….. என்பதை கொஞ்சம் சிந்தியுங்கள்.

இறுதியாக நம் மனப் பதிவுக்கான செய்திகளோடு இறுதி முடிவுக்கு வருவோம். இன்னல் தந்தவர்களுக்கும் நீங்கள் இன்பம் தர முயலுங்கள். இந்தக் கருத்தை இறைவனின் நெறிநூலாகிய அல்குர்ஆன் தெளிவாகக் குறிப்பிடுகிறது. நன்மையும் தீமையும் சமமாகி விடாது; நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்ளுங்கள். அப்போது, யார் உங்களுக்கு கடும் விரோதியாக இருந்தாரோ அவர் உங்களின் உற்ற நண்பராக மாறி விடுவார். (41:34)

எனவே, கோபமும் முகச்சுளிப்பும் நம்மைத் தனித் தீவுகளாக்கும். இதை நீங்கள் விரும்புகிறீர்களா? இல்லை பொறுமையும் சகிப்புத்தன்மையும் நம்மை தோப்புகளாக்கும். இதை நீங்கள் விரும்புகிறீர்களா? பதில் உங்கள் விருப்பம்.

”உங்களில் வீரன் யார் தெரியுமா என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். குத்துச் சண்டை யுத்தத்தில் எதிரியை வீழ்த்துபவன் வீரன் அல்ல; தனக்குக் கோபம் வரும்போது அதனை அடக்கி ஆள்பவனே உண்மையான வீரன் ஆவான்” என்று அதற்கு பதிலும் அளித்தார்கள்.

ரஹ் அலி, M.S.D..உடன்குடி

{ 2 comments… read them below or add one }

ஹபீப் April 28, 2013 at 8:13 pm

மாஷா அல்லாஹ். அருமையான ஆர்டிகிள். ஒவ்வொரு மனிதனும் படித்து, உணர்ந்து, பழகவேண்டிய கருத்துகள். ரஹ் அலி (தங்கள் முழுபெயர் இதுதானா) அவர்களுக்கு அல்லாஹ் அருள்செய்யட்டும்.

தங்கள் ஈமெய்ல் முகவரி ப்ளீஸ்

ஜசாக்கல்லாஹ் க்ஹைர்.

Reply

k.shameena May 1, 2013 at 1:20 am

assalamu alaikum (varah) tamil ha nalla vizhakkam thandhirukinga so niraiya per theriyadhadha therunjuka oru ariya vaaipa iruku. rompa nantri. enaku oru doubt veru madhathinudaiya oruvarai thirumanam seiya vendum entral kandipaaga sunnath seidhu kolla venduma.

Reply

Leave a Comment

Previous post:

Next post: