மன்னிக்கப்படாத பாவம்

in இணைவைத்தல்

அல்லாஹ், தான் சிருஷ்டித்த படைப்புகள் அனைத்தையும் விட மேலானவனாக மனிதனை  ஆக்கி, அவனுக்கு உலகிலுள்ள எல்லாவற்றையும் வசப்படுத்திக் கொடுத்தான். அவன் நேர்வழி  பெற வேண்டும் என்பதற்காக தன் தூதர்களை அனுப்பி, நன்மை தீமை பாவம் புண்னியம் என்பதை  அறிவித்துக்கொடுத்தான்; அவற்றின் பிறதி பலனையும் விளக்கி காண்பித்தான்; மனிதனை  சோதிக்க வேண்டுமென்பதற்காக, நல்லவைகளையும் தீயவைகளையும் செய்யக்கூடிய  இயல்புடையவனாக அவனை ஆக்கியுள்ளான்.

    எனவே மனிதன்  தெரிந்தோ தெரியாமலோ செய்து விடுகின்ற பாவங்களைத் தான் மன்னித்து விடுவதாக அல்லாஹ்  கூறுகின்றான். இப்பாவங்கள் எவ்வளவு பெரியதாக இருப்பினும் அதற்காக பரிகாரம் கோரக்  கூடியவர்களுக்கு அதை பொறுத்து மன்னித்து விடுவதாகவும் கூறுகின்றான். ஒருவன் தான்   செய்த பாவங்களுக்காக உலகில் பாவமன்னிப்பு கோரி பச்சாதாபப் படுவானாயின்,  அப்பாவங்கள்  அனைத்தயும் அல்லாஹ் மன்னித்து விடுகின்றான். சில பாவங்களுக்காக  மன்னிப்புக் கோராமல் இறந்து விடுபவனுடைய பாவங்களை மறுமையில் அல்லாஹ் நாடினால்  அவைகளை மன்னித்தருளவும் செய்யலாம்; மன்னிக்காமலும் இருக்கலாம். இது அல்லாஹ்வின்  நாட்டத்தை பொருத்தாகும்.

    ஆனால் ஒரே ஒரு  பாவத்தை மட்டும் அல்லாஹ் மறுமையில்மன்னிப்பதே இல்லை. எல்லா பாவங்களையும் தான்  மன்னித்து விடுவதாக கூறிவிட்டு, ஒரு பாவத்தை மட்டும் மன்னிப்பதில்லை என   கூறும்போது அது மகா கொடிய பாவன் என்பது புலனாகிறது. இந்த பாவத்தை செய்யக்  கூடியவன் சதா நரகத்திலேயே இருப்பான் எனவும் அல்லாஹ் கூறுகின்றான். அவ்வாறாயின்  இவ்வளவு பெரிய கொடிய பாவம் எது? அதை ஏன் அல்லாஹ் மன்னிப்பதில்லை என்பதை ஒவ்வொரு  முஸ்லிமும் அறிய வேண்டியது மிக இன்றியமையாத ஒன்றாகும்.

        அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்:     நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவேமாட்டான்; இது  அல்லாத (பாவத்)தைத்தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை   வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு  தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்.  (அல்குர்ஆன் 4:116)

    மற்றோர்  இடத்தில்:     எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு  அல்லாஹ்சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம்  நரகமேயாகும். (அல்குர்ஆன்5:72) ஷிர்க் என்னும் அல்லாஹ்விற்கு இணைவைத்தல்  அல்லாஹ்வால் மன்னிக்கப் படாத கொடிய  பாவமாகும் என்பது  இந்த இறை   வசனங்கள்  மூலம் தெரிய  வருகின்றது.

    ஷிர்க்  என்றால் என்ன?     இவ்வளவு பெரிய கொடும்பாவமான ஷிர்க் என்பதன் பொருள் என்ன? அதை  ஏன் அல்லாஹ் மன்னிப்பதைல்லை? என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் அறிவதுகட்டாயக்  கடைமையாகும். அவ்வாறு அறியும் போதுதான் ,அதை விட்டு விலகி, உண்மையாகவும்  தூய்மையாகவும் அல்லாஹ்வை வணங்க முடியும்.

     ஷிர்க்  என்பது சிலைகளை வனங்குவதும், கோவில்களுக்குச் சென்று அவைகளுக்கு வழிபடுவதும்  மட்டும்தான் என முஸ்லிம்களில் பலர் கருதி வருகின்றனர். இதனால் ஷிர்க்கான பல  செயல்களை செய்து விட்டு அவைகள் ஷிர்க் அல்ல என்றும் எண்ணுகின்றனர். இந்த  தப்பெண்ணத்தால் பலர் பாதிக்கப்பட்டு ஷிர்க்கான செயல்களை செய்து தங்களை  நரகநெருப்பிற்காக சித்தப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் நினைத்துக்    கொள்கிறார்கள் இஸ்லாமிய பெயர் வைத்துக்கொண்டு சமுதாயத்தில் ஒருவனாக ஆகிவிடுவதால்  மட்டும் ஷிர்க்கை விட்டு தூய்மையாகி விடலாம் என்று. எனவே இவர்களிடம் ஷிர்க்கான  செயல்களைச் செய்யாதீர்கள் விட்டு  விடுங்கள் என்று கூறும்போது,    நாங்கள் என்ன ஹிந்துக்களா? நாங்கள் ராமனை வணங்குகிறோமா? கிருஷ்ணணை வணங்குகிறோமா?   எங்களைப் பார்த்து ஷிர்க்கான செயல்கள் புரிகிறோம் என்று கூறுகின்றீர்களே? என்று  கேட்கின்றனர். ராமன், கிருஷ்ணன் போன்றவர்களை வணங்குவது மட்டும்தான் ஷிர்க் என்று  இவர்கள் நினைத்துக் கொண்டார்கள். இதற்குக் காரணம் ஷிர்க்கைப் பற்றிய அவர்களின்  அறியாமையே ஆகும்.

    ஷிர்க் என்பது  அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும் செய்யவேண்டிய வணக்க வகைகளில் எதையாவது அல்லாஹ்  அல்லாதாருக்குச் செய்வது, படப்பினங்களில் எதையாவது, எவரையாவது அல்லாஹ்வுக்கு  நிகராக்குவது, இதுதான் ஷிர்க்காகும். அதாவது தவ்ஹீத் என்னும் ஏக இறைக்கொள்கைக்கு  நேர் முரணானதுதான் ஷிர்க் முஸ்லிம்கள் அனைவருக்கும்  லாயிலாஹா இல்லல்லாஹ்  என்னும் கலிமாவை மொழிந்திருக்கிறார்கள். இக்கலிமாவின் பொருள் வணக்கத்திற்கு  தகுதியானவன் அல்லாஹ்  ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை என்பதாகும். இந்த  கலிமத்துத் தவ்ஹீதை நம்பி அதன்படி செயல்படுவதுதான் ஏக இறை நம்பிக்கையாகும்.

    இதற்கு நேர்  மாறுபட்டதுதான் ஷிர்க் அதாவது வணக்கதிற்கு தகுதியற்ற அல்லாஹ் அல்லாத யாருக்காவது,  வணக்க வகைகளில் எதையேனும் செய்வது, அல்லாஹ் அல்லாத மற்ற படைப்பினங்கள் அனைத்தும்  வணக்கத்திற்கு தகுதியற்றவைகளாகும். வணக்கங்களில் எதையேனும் ராமனுக்கோ,  கிருஷ்ணனுக்கோ செய்தாலும்சரி, அல்லது முஹையத்தீன் அப்துல் காதிருக்கோ, நாகூர்  சாஹிபிற்கோ செய்தாலும் சரி, எல்லாம் ஷிர்க்காவே கருதப்படும். ஏனெனில்  படைக்கப்பட்டவர்கள் என்ற விஷயத்தில் இவர்கள் எல்லோரும் சமமானவர்களே.  மலக்கானாலும்,நபியானலும், வலியானாலும், சாதாரண மனிதர்களானாலும் எல்லோரும்  படைக்கப்பட்டவர்கள் தான். எனவே இவர்கள் யாரும் எந்த வணக்கதிற்கும்  தகுதியற்றவர்களாவார்கள்.

    வணக்கம்  என்பது பயபக்தியோடு அல்லாஹ்வை நேசித்து அவனை வணங்குவதாகும். அல்லாஹ்விற்குச்  செலுத்தும் ஒவ்வொரு வழிபாட்டுக்கும் வணக்கம் என்று சொல்லப்படும். இவ்வணக்கம், நபி  (ஸல்) அவர்கள் காட்டித் தந்தது போன்று செய்யப்பட வேண்டும். அவர்கள் கான்பித்தந்து  செய்யுமாறு கட்டளையிட்டுள்ள வணக்கம் பல வகைப்படும். தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ்,  கலீமத்துத் தவ்ஹீதை மொழிதல், ஈமானின் கடமைகளை நம்புதல், திக்ர் செய்தல், குர்ஆன்  ஓதுதல், அறிவு தேடுதல் இவைகள் எல்லாம் வணக்கங்களாகும். இவ்வாறே அழைத்து உதவி  தேடுதல், நேர்ச்சை செய்தல், அறுத்துப் பலியிடுதல் இவைகள் வணக்கங்களாகும்.

    இது போன்ற  வணக்கங்களில் எதையாவது அல்லாஹ் அல்லாதவர்களுக்குச் செய்வதுதான் ஷிர்க் என்னும்  மன்னிக்கப்படாத பெரும்பாவமாகும். அழைத்து உதவி தேடுதல் வணக்கத்தின் வகையைச்  சேர்ந்ததாகும்.எனவே அல்லாஹ் ஒருவனை மட்டுமே கஷ்ட துன்ப நேரங்களில் அழைக்க வேண்டும்.  அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பது ஷிர்க்காகும் என்பதை அறிகிறோம்.

    உதாரணமாக  இறந்துபோன அதுவும் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் புதைக்கப் பட்டுள்ளவர்களை  கஷ்ட துன்ப நேரங்களில் அழைப்பது, அதாவது யாமுஹையத்தீனே, யாஷாஹூல்ஹமீதே என்னைக்  காப்பாற்றுங்கள் என்று கூறி அழைப்பது ஷிர்க் என்னும் மன்னிக்கப்படாத பெரும்  பாவமாகும்.

    நேர்ச்சை  செய்வது வணக்கத்தின் வகையைச் சார்ந்ததாகும்.இது அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே செய்ய  வேண்டும்.அல்லாஹ் அல்லாதாருக்கு நேர்ச்சை செய்வது ஷிர்க்காகும். (அல்லாஹ்விற்காக  நேர்ந்து அதை கப்ரில் கொண்டு போய் கொடுப்பதும் ஷிர்க்கானதுதான்) அதாவது எனக்கு  நோய் குணமானால் முஹையத்தீன் அப்துல் காதிருக்கு ஒரு கடாய் அறுத்துக் குர்பானி(பலி)  கொடுப்பேன், என் காலில் உள்ள வாதம் குணமானால் நாகூர் சாஹிபிற்கு வெள்ளியில் கால்  செய்து கொடுப்பேன் என்றெல்லாம் நேர்ச்சை செய்வது மன்னிக்கப்படாத ஷிர்க் என்னும்  பெரும் பாவமாகும்.

    இப்போது நமது  சமுதாயத்தில் பெரும்பாலானவர்கள் புரிந்து வரும் செயல்களை சிறிது சிந்தித்துப்  பாருங்கள்! இறந்தவர்களை அழைத்து உதவி தேடுகிறார்கள்! கப்ருகளுக்குச் சென்று அழுது  மன்றாடி கஷ்டங்களைப் போக்க வேண்டுகிறார்கள்! தங்கள் கஷ்டங்கள் நீங்க, கபுரடியில்  குறிப்பிட்ட நாட்கள் தங்குகிறார்கள்! இறந்த அவ்லியாக்களை அழைத்து அபயம்  கோருகிறார்கள்! எதிரிகள் எங்களைத் தாக்கி விடாமலிருக்க உதவுங்கள் என்று கபுரில்  அடக்கம் செய்யப்பட்டவர்களிடம் வேண்டுகிறார்கள்! யாஸாஹிபன்னாஹூரி குன்லி நாஸிர் –  நாகூர் ஸாஹிபே! எனக்கு உதவுங்கள்!என்ற பொருள் கொண்ட பாடல்களைப் படிக்கிறார்கள்!

    முஹ்யித்தீன்  அப்துல்காதிர் ஜீலானி(ரஹ்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டப் பட்டுக் கூறப்பட்டுள்ள  என்னை ஆயிரம் தடவை இருட்டறையிலிருந்து அழைக்கக் கூடியவனுக்கு ஹாழிராகி உதவுகிறேன்  என்ற பொருள் கொண்ட யாகுத்பா என்றகவிதையைப் பாடுகின்றார்கள். மண்ணறையில் அடக்கம்  செய்யப்பட்டவர்களை இருட்டறையிலிருந்து ஆயிரம் தடவை அழைக்கிறார்கள்! இவ்வாறு  அழைக்கும் போது அவர் விஜயம் செய்து, இவர்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக  நம்புகிறார்கள்! குழைந்தை பெறும்போது, கஷ்ட நேரத்திலும் யாமுஹ்யித்தீனே! என்னைக்  காப்பற்றுங்கள்! என்று கூறுகிறார்கள். எனக்கு நோய் குணமானால் இந்த  வலியுல்லாஹ்வுக்கு அறுத்துப் பலியிடுவேன் என்று வேண்டுகிறார்கள். சில நேரங்களில்  அதனை செய்தும் விடுகிறார்கள்.

    இவைகள்  எல்லாம் ஷிர்க்கான செயல்களாகும். இது போன்ற நம்பிக்கை உடையவர்களே நிச்சயமாக இணை  வைப்பவர்களாவர்கள். இந்த தவறான நம்பிக்கை கொண்டவர்களின் அமல்கள் அனைத்தையும்  அல்லாஹ் பயனற்றதாக ஆக்கிவிடுகிறான். இவர்கள் இந்த தவறான நம்பிக்கையிலிருந்து விலகி,  உலகில் வாழும்போதே தவ்பா செய்யவில்லையானால், மறுமையில் அவர்களுக்கு மன்னிப்பே  இல்லை. நிரந்தர நரகத்தையே அடைவார்கள்.

    இணைவத்தலின்  தீய விளைவுகள்:     அவர்களின் நல்ல அமல்களும் பயனற்றதாகிவிடும் என்று நாமாகக்  கூறவில்லை. அல்லாஹ் தன் திருமறையில் அவ்வாறுதான் குறிப்பிடுகின்றான். பின்னர்  அவர்கள் இணைவைப்பார்களானால், அவர்கள் செய்து வந்ததெல்லாம் அவர்களை விட்டு அழிந்து  விடும்! (அல்குர்ஆன் 6:88)

    மூமினாக, ஏக  இறை நம்பிக்கை உடையவனாக ஷிர்க்கான எந்தச் செயலும் செய்யாமல் உலகில் வாழ்ந்தவன் வேறு  ஏதேனும் குற்றங்கள் புரிந்து, அதற்கு உலகிலேயே பாவ மன்னிப்புத் தேடாமல  மரணித்துவிட்டால், அல்லாஹ் அவனை மன்னித்தும் விடலாம். தண்டிக்கவும் செய்யலாம்.  அப்படியே அல்லாஹ் அவனைத் தண்டிக்கும்போது நரகத்தில் நிரந்தரமாக அவனை வைப்பதில்லை.

    அல்லாஹ்  தனக்கு (எதனையும்) இணையாக்கப்படுவதை மன்னிக்கமாட்டான். (இணைவைத்தல் அல்லாத)  மற்றவைகளை, தான் நாடியவர்களுக்கு மன்னிக்கின்றான்.(அல்குர்ஆன் 4:116)

    ஏக தெய்வ  நம்பிக்கை உடையவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைக்காதவர்கள்.மற்ற தவறுகள்  புரிந்திருப்பின் இறுதி கட்டத்திலாவது சுவர்க்கத்தில் நுழைவார்கள்.ஆனால் ஷிர்க்கான  நம்பிக்கை உள்ளவர்கள் சுவர்க்கத்தின் வாடையைக்கூட பெற முடியாது. அல்லாஹ்  சுவர்க்கத்தை அவர்கள் மீது ஹறாமாக்கிவிட்டான்.

    அல்லாஹ்வின்  அடியார்களில் யார் எதனையும் அவனுக்கு இணையாக்கவில்லையோ அவரைத் தண்டிக்காமலிருப்பதை  அல்லாஹ் தன்மீது கடமையாக்கிக் கொண்டான்.(ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்)

    சிறிது  சிந்தித்துப் பாருங்கள்! ஷிர்க்கான காரியங்கள் புரிவோரின் முடிவு  எவ்வளவு  பயங்கரமானது என்று எண்ணிப் பாருங்கள். இறைவன் ஷிர்கை எவ்வளவு வெறுக்கிறான்  என்பதையும் உணர்ந்து பாருங்கள்! நாம் ஷிர்க்கான காரியங்களைச் செய்யாமலிருப்பதில்  எவ்வளவு எச்சரிக்கையுடனிருக்க வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!

    பொருளற்ற  வாதம்     ஷிர்க்கான செயல்களைச் செய்து வருவோரிடம் ஏன் இவ்வாறு செய்து  வருகின்றீர்கள்? இது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கே முரணாயிற்றே? என்று நாம்  கேட்கும் போது, நாங்கள் அழைத்து வரும் அவ்லியாக்களை  தெய்வமாகவா நாங்கள்  கருதுகிறோம்? அவர்கள் எங்களுக்காக அல்லாஹ்விடம் பரிந்துரைக்குமாறும், அல்லாஹ்விடம்  பெற்று தருமாறும் தானே வேண்டுகிறோம்! இது எப்படி ஷிர்க்காகும் என்று கேட்கின்றனர்.  அந்தோ பரிதாபம்! இவர்கள் அல்லாஹ்வைப் புரிந்து கொள்ளவில்லை. இவர்கள் அல்லாஹ்வை  கொடுங்கோல் மன்னனுகன்றோ ஒப்பிட்டு விட்டார்கள்! அல்லாஹ் மிக நேர்மையானவன். அவன்  அடியார்கள் மீது மிகவும் இரக்கம் கொண்டவன். தன் அடியார்கள் அனைவரின் அழைப்பையும்   ஒரே நேரத்தில் நிவர்த்திக்கவும் செய்கின்றான். இன்னொருவர் மூலம் அடியார்களின்  பிரச்சினைகளைத் தெரிந்து கொள்ளும் நிலையில் அவன்  இல்லை. இன்னொருவர்  சொல்லிக் கொடுத்துத் தெரிந்து கொள்ள அவன் அறியா தவனுமில்லை. அந்த இன்னொருவர்  அவனை விட இரக்கம் கொண்டவருமில்லை.

    ஒரு  எழுத்தாளர் தன் புத்தகத்தில் குறிப்பிடுகின்றார்:     அவ்லியாக்களை அல்லாஹ்விடம் நமக்காக பரிந்து பேசுகின்ற  வக்கீல்களாக கருதிக் கொண்டு நாம் எவ்வளவு பெரிய அறிவிலிகள் என்பதையல்லவா  வெளிப்படுத்துகின்றோம்! அல்லாஹ் எல்லாம் அறிந்தவன். மையிருட்டில் நடமாடும் கறுப்பு  எறும்பின் காலடி ஓசைகளையும் நன்கு அறிந்தவன். எல்லோருடைய உள்ளக் கிளர்ச்சிகளையும்  உணர்பவன், அத்தகைய ஆற்றலுள்ளவனை ஒரு சாதாரண நீதிபதியுடன் ஒப்பிட்டு பேசமுடியுமா?  உலகிலுள்ள நீதிபதிக்கு ஒரு மனிதனின் உள்ளக் கிடக்கையை உணரும் சக்தி இல்லை. அதற்காக  வக்கீல்கள் தேவைப்படுவது இயற்கை. அந்த வக்கீல்கள், தமது கட்சிக்காரனின் வாதங்களை  பக்குவமாக நீதிபதியிடம் எடுத்துக் கூறுவார்கள். உலக நீதிபதிகள், வக்கீல்களின்  சாதுர்யப் பேச்சினால்பொய்யை மெய்யாகவும், மெய்யைப் பொய்யாகவும் நம்பி தீர்ப்புக்  கூற சந்தர்ப்பமுண்டு. இது போல நாம் நினைக்கிறபடி இந்த அவ்லியா வக்கீல்கள்  அல்லாஹ்விடம் வாதாடி, நமது அயோக்கிய தனங்களையெல்லாம் அப்பழுக்கற்றவை என்று  அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டி நமது கட்சியை ஜெயிக்கச் செய்து விடுவார்களா? எந்தக்  கணிப்பிலே நாம் அவ்லியாக்களை நமது வக்கீல்களாக மாற்றி அல்லாஹ்விடம் பரிந்துரை  செய்யத் துணிகிறோம்?

    ஒரு மனிதன்  தனக்கும், அல்லாஹ்வுக்குமிடையில் தரகர்களை ஏற்படுத்திக்கொள்வதை அல்லாஹ் ஒரு  போதும் விரும்புவதில்லை. இவ்வாறு தரகர்களை ஏற்படுத்திய ஒரே காரணத்திற்காகத்தான்  அக்கால மக்கா முஷ்ரிகீன்களை  நபி (ஸல்) அவர்கள் எதிர்த்துப் போராடினார்கள்.  இக்காரணத்திற்காகவே அம்மக்களை காபிர்கள் என்று அல்லாஹ் கூறினான். ஏனெனில் அம்மக்கள்  அல்லாஹ்வை நம்பி இருந்தனர். அல்லாஹ்தான் தங்களுக்கு உணவளிப்பவன் என்பதையும்  ஏற்றிருந்தனர். அல்குர்ஆனின் 43:9, 43:87, 29:61, 31:25, 23:84, 23:86, 23:88,  10:31 வசனங்கள் இதனை நமக்கு தெளிவாக்குகின்றன. அல்லாஹ்வை நம்பியிருந்த அன்றைய  மக்கள் காபிர்கள் என்று அழைக்கப் பட்ட காரணம், அவர்கள் அல்லாஹ்வை நேரடியாக  அணுகமுடியாது! இடைத்தரகர்கள் வேண்டும் என்ற நம்பிக்கை கொண்டிருந்ததுதான்.

    அவர்களிடம்  இவ்வாறு நம்பும் நீங்கள் ஏன் அல்லாஹ்வை மாத்திரம் வணங்கக் கூடாது என்று  கேட்கப்பட்டால், அதற்கவர்கள்: இவர்கள் அல்லாஹ்விடத்தில் எஙளுக்காகப் பரிந்து  பேசுகின்றனர் எனக் கூறினார்கள் (அல்குர்ஆன்10:18)

    இதே  போன்றுதான் இன்றைய முஸ்லிம்கள் பலரின் பதிலும் இருக்கின்றது. அன்று வணங்கப்பட்டு  வந்த சிலைகள் அல்லாஹ்வுக்கு வழிபட்டு வந்த நல்லோர்களின் உருவமேயாகும். நல்லோர்கள்  இறந்துவிடுவார்களானால் அவர்களுக்கு சிலை செய்து வணங்கி வந்தார்கள் அன்றைய மக்கள்.  (அறிவிப்பவர்: ஆயிஸா(ரழி) நூல்: புகாரீ, முஸ்லிம்)

    இன்று  முஸ்லிம்களில் பலர் நல்லோர்கள் இறந்த பின் அவர்களுக்கு கப்ரு, தர்ஹா கட்டி அங்கே  வழிபாடு நடத்தி வருகின்றனர். சிலை-கப்ரு என்று சொற்களில் தான் வேறுபாட்டைக் காண  முடிகிறதேயன்றி மற்ற செயல்கள் எல்லாம் ஒன்றாகவே உள்ளன. கொள்கைகளும் ஒன்றாகத்தான்  உள்ளன.

    அவர்களிடம்  கோவில்கள், இவர்களிடம் தர்ஹாக்கள். அங்கே சிலைகள் இங்கே கப்ருகள். அங்கே  பூசாரிகள். இங்கே லெப்பை, சாப்புமார்கள். அங்கே தேர், இங்கே கூடு. அவர்களிடம்  திருவிழாக்கள் இவர்களிடம் கந்தூரிகள்.அங்கேயும் உண்டியல்கள், இங்கேயும்  உண்டியல்கள், இதற்கெல்லாம் மூல காரணமாக உண்டி வளர்ப்பதற்காக வைக்கப்பட்ட  உண்டியல்கள்.

    இப்போது  சிறிது சிந்தித்து பாருங்கள். இந்நோக்குடன் கப்ருக்குச் செல்லும் முஸ்லிமிற்கும்  இதே நோக்கத்தில் சிலைகளை வணங்கியவர்களுக்குமிடையில் ஏதாவது வேறுபாடு இருக்கின்றதா?  அல்லாஹ் நம்மை அழைத்து, என்னை அழையுங்கள்! நான்தான் தேவைகளைப் பூர்த்தி செய்யக்  கூடியவன். என்னைத் தவிர உங்கள் கஷ்டங்களை துன்பங்களைப் போக்கப் கூடியவன்  யாருமில்லை என்று தன் திறுமறையில் பல இடங்களில் கூறி இருக்கும்போது, இவர்கள்   செய்து வரும் ஷிர்க்கான செயல்களை அல்லாஹ் எப்படி மன்னிப்பான்?

    உங்கள் இறைவன்  கூறுகிறான், நீங்கள் என்னையே அழையுங்கள்! (நான் உங்களின் பிரார்த்தனைகளை)  அங்கீகரித்துக் கொள்வேன். எவர்கள் என்னை வணங்காது பெருமையடிக்கின்றனரோ, அவர்கள்  நிச்சயமாக சிறுமைபட்டவர்களாக நரகில் நுழைவார்கள் (அல்குர்ஆன்40:60)

    இஸ்லாத்தின்  பெயரிலே வயிறு வளர்க்கின்ற சில வேஷதாரி மெªலவிகளின் பித்தலாட்டத்தின் காரணத்தாலும்,  மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் போலி ஷேக்மார்களின் சதிமோசத்தாலும்  சமுதாயத்திற்குள் ஏராளமான ஷிர்க்கான செயல்கள் ஊடுருவி உருமாறி காட்சியளிக்கின்றன.

    தங்களை காதிரி  என்றும், ஷாதுலி என்றும் கூறிக்கொள்ளும் எத்தனையோ நய வஞ்சக ஷேக்மார்கள்  சமுதாயத்தில் மலிந்து விட்டனர். இந்த வேடதாரிகளின் வேஷம் கலையக் கூடிய நாள்  நெருங்கி விட்டது. சமுதாயம் விழித்துக் கொள்ளத் துவங்கி விட்டது.

    உங்களைக்  கடலிலும், கரையிலும் காப்பாற்றக் கூடியவன் நான்தான்.என்னை அணுகுவதற்கும், நான்  உங்கள் துஆக்களை அங்கீகரிப்பதற்கும் யாருடைய உதவியும் சிபாரிசும் தேவையில்லை என்று  அல்லாஹ் குர்ஆனில் பல இடங்களில் கூறியுள்ளான். ஆனால் இன்று முஸ்லிம்களில் சிலர்  யாகுத்பா போன்ற தவறான பாடல்களை வணக்கமெனக் கருதி பயபக்தியோடு பாடி வருகின்றனர்.  இறந்து போனவர்களை அழைத்து என்னுடைய தலைவரே! எனக்கு அபயம் அளித்து உதவக்கூடியவரே!  என்னுடைய தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியவரே! எதிரிகள் என்னைத் தாக்காமலிருக்க  எனக்குப் பாதுகாப்பு அளியுங்கள். என்ற பொருள் கொண்ட கவிதைகளை மவ்லிது என்ற  பெயரில் ஓதி வருகின்றனர். புதிய புதிய சினிமா மெட்டுகளில் நடத்தப்படும் இந்தக்  கச்சேரிக்கு தலைமை தாங்குகின்ற போலி அறிஞர்கள் எத்தனை?

    அந்தோ  பரிதாபம்! அல்லாஹ்விடம் கேட்க வேண்டியவற்றை அல்லாஹ் அல்லாதவர்களிடம், அதுவும்  இறந்தவர்களிடம் கேட்பது ஷிர்க்கா? இல்லையா? என்று சிந்தித்துபாருங்கள்! அல்லாஹ் ஏன்  இணைவைத்தலை மன்னிப்பதில்லை என்பதை இப்போது புரிந்திருப்பீர்கள். இத்தகைய கொடிய  பாவத்திலிருந்தும் விடுபட்டு, ஓரிறைக் கொள்கையில் உறுதியாக நில்லுங்கள்!  பிறருக்கும் சொல்லுங்கள்! அல்லாஹ் நம் அனைவரையும் நேர் வழியில் நடத்திடப்  போதுமானவன்.

S.கமாலுத்தீன் மதனி

{ 3 comments… read them below or add one }

syed mohd buhari October 17, 2010 at 12:42 am

please read and send all

Reply

hameed December 19, 2011 at 8:39 pm

Very useful artical for every one.

Reply

Shariff October 15, 2018 at 6:16 am

Alhamdulillah.

Reply

Cancel reply

Leave a Comment

Previous post:

Next post: