மனிதனின் முறை தவறிய நிலை!

Post image for மனிதனின் முறை தவறிய நிலை!

in அல்குர்ஆன்

அல்லாஹ் தன்னை வணங்குவதற்காகவே மனிதர்களை படைத்திருக்கிறான். மேலும் தன்னை வணங்குவதற்குத் தேவையான அனைத்து வாழ்வாதாரங்களையும் அவர்களுக்கு வழங்கியுள்ளான். அல்லாஹ் கூறுகிறான்:

51:56 وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ
51:56. இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.
51:57 مَا أُرِيدُ مِنْهُم مِّن رِّزْقٍ وَمَا أُرِيدُ أَن يُطْعِمُونِ
51:57. அவர்களிடமிருந்து எந்த பொருளையும் நான் விரும்பவில்லை. எனக்கு அவர்கள் உணவு அளிக்க வேண்டுமென்றும் நான் விரும்பவில்லை.
51:58 إِنَّ اللَّهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِينُ
51:58. நிச்சயமாக அல்லாஹ்தான் உணவு அளித்துக் கொண்டிருப்பவன்; பலம் மிக்கவன்; உறுதியானவன்.

மனித உள்ளங்கள் இயல்பாகவே அல்லாஹ்வின் மீதுள்ள நேசத்தால்அவனே வணக்கத்திற்கு தகுதியானவன் என்று ஏற்றுக் கொள்ளும். அவனை மட்டுமே வணங்கி அவனுக்கு எதையுமே இணையாக்காது. ஆனால்மனித, ஜின்களிலுள்ள ஷைத்தான்கள் ஏமாற்றுவதற்காக அலங்காரமான கூற்றுக்களை சிலர் மற்ற சிலருக்கு அறிவிப்பதன் மூலம் அந்த உள்ளத்தை கெடுத்தும் மாற்றியும் விடுகின்றனர். ஆகவே அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்குவது மனித இயல்பிலேயே குடிகொண்டிருக்கிறது. மேலும் வணக்க வழிபாடுகளில் இணைவைத்தல் இடையில் ஏற்பட்டதாகும் என்பது தெளிவாகிறது. அல்லாஹ் கூறுகிறான்:

30:30 فَأَقِمْ وَجْهَكَ لِلدِّينِ حَنِيفًا ۚ فِطْرَتَ اللَّهِ الَّتِي فَطَرَ النَّاسَ عَلَيْهَا ۚ لَا تَبْدِيلَ لِخَلْقِ اللَّهِ ۚ
30:30. ஆகவே, நீர் உம்முகத்தை தூய (இஸ்லாமிய) மார்க்கத்தின் பக்கமே முற்றிலும் திருப்பி நிலை நிறுத்துவீராக! எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய (நிலையான) இயற்கை மார்க்கமாகும்; அல்லாஹ்வின் படைத்தலில் மாற்றம் இல்லை.

நபி ஸல் அவர்கள் கூறினார்கள், பிறக்கின்ற எல்லா குழந்தைகளுமே இயல்பாக அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும் என்ற உணர்வில்தான் பிறக்கின்றன. அவர்களின் தாய், தந்தையர்களேஅவர்களை யூதர்களாகவோ அல்லது கிறித்தவர்களாகவோ அல்லது நெருப்பை வணங்குபவர்களாகவோ ஆக்கி விடுகின்றனர். அறிவிப்பாளர்:அபூஹுரைரா  நூல்: புகாரி 1385

ஆதம் அவர்களின் சந்ததிகளின் அடிப்படையும் தவ்ஹீதாகத்தான் இருந்தது என்பதை இந்த ஹதீஸின் மூலம் அறியலாம். இந்த நிலை ஆதம் அவர்கள் மற்றும் அவர்களின் சந்ததியினரிடம் நீண்ட காலம் இருந்து வந்தது. இதுபற்றி அல்லாஹ் கூறுகிறான்:
2:213 كَانَ النَّاسُ أُمَّةً وَاحِدَةً فَبَعَثَ اللَّهُ النَّبِيِّينَ مُبَشِّرِينَ وَمُنذِرِينَ
2:213. (ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்; அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்;

வணக்கவழிபாட்டில் இணைவைத்தலும், சரியான கொள்கையில் முறை தவறிய நிலையும் நூஹ் அவர்களின் சமூகத்திலேயே முதன் முதலில் தோன்றியது. எனவேதான் அல்லாஹ் நூஹ் அவர்களை முதல் தூதராக அனுப்பினான்.

4:163  إِنَّا أَوْحَيْنَا إِلَيْكَ كَمَا أَوْحَيْنَا إِلَىٰ نُوحٍ وَالنَّبِيِّينَ مِن بَعْدِهِ ۚ
4:163. (நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம்.

இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறுகிறார்கள்: ஆதம் அவர்களுக்கும் நூஹ் அவர்களுக்கும் மத்தியில் பத்து தலை முறையினர் இருந்தனர். அவர்கள் அனைவரும் அல்லாஹ்வை மட்டுமே வணங்குபவர்களாக இருந்தார்கள். அறிஞர் இப்னுல் கய்யிம் அவர்கள் இகாஸத்துல் லஹஃபான் என்ற நூலில் (2/102) கூறுகிறார்கள், இப்னு அப்பாஸ் அவர்களின் இந்தக்கூற்று மிகச் சரியானதாகும். இதனை உபைப் பின் கஅப் அவர்களின் சூரத்துல் பகராவின் கிராத்தினைக் கொண்டும் உறுதிப்படுத்தலாம் உபைப் பின் கஅப்  அவர்களின் கிராஅத்தில்  فَاخْتَلَفُوا  என்ற வாசகம்கூடுதலாக உள்ளது. இதன் பொருள் கருத்து வேறுபாடு கொண்டார்கள். உபைப் பின் கஅப் அவர்களின் கிராஅத்திற்கு சூரா யூனுஸின் பத்தொன்பதாவது வசனம் சான்றாக உள்ளது. இந்த தகவல்களை வைத்து இப்னுல் கய்யிம் அவர்கள், மக்கள் அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மாறுபட்டதே நபிமார்கள் அனுப்பப்படுவதற்கு காரணமாக இருந்தது என்றுகூறுகிறார்கள். அரபுகளின் நிலையும் இப்படித்தான் இருந்தது.

அமர் பின் லுஹை அல்குஜாயின் வருகைக்கு முன்னர் வரை அரபுகள் இப்ராஹீம் அவர்களின் மார்க்கத்திலேயே நிலைத்திருந்தனர். அவன் அரபுலகத்திற்கு வந்து இப்ராஹீம் அவர்களின் தூய மார்க்கத்தை அப்படியே மாற்றி அமைத்து விட்டான். அரபு நாடுகளில் சிலை வழிபாட்டினை கொண்டு வந்து திணித்தான். குறிப்பாக ஹிஜாஸ் பகுதியில் சிலை வழிபாடு பிரத்யேகமான முறையில் அரங்கேறியது. அல்லாஹ்வை தவிர்த்து இந்த சிலைகளுக்கு வணக்கங்கள் செலுத்தப்பட்டன. இவ்வாறாக ஷிர்க் புனித பூமியிலும் அதனை சுற்றிய இடங்களிலும் பரவியது. இதே நிலை இறுதி நபியான முஹம்மத் அவர்கள் நபியாக அனுப்பப்படும் வரை தொடர்ந்தது. நபி அவர்கள் அந்த மக்களை தவ்ஹீத் மற்றும் நபி இப்ராஹீம் அவர்களின் மார்க்கத்தை பின்பற்றுவதின் பக்கம் அழைத்தார்கள். அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக முழு முயற்சியை மேற்கொண்டார்கள். அதன் பலனாக தவ்ஹீத் கொள்கையும், நபி இப்ராஹீமின் மார்க்கமும் மீண்டும் உயிர் பெற்றது. அந்த சமூகம் வணங்கி வந்த சிலைகளை உடைத்தார்கள். அல்லாஹ் நபி அவர்களின் மூலம் சன்மார்க்கத்தை பரிபூரணமாக்கினான். மேலும் அகிலத்தாரின் மீது தனது அருட்கொடையை முழுமையாக்கினான்.

இந்தச் சமுதாயத்தில் சிறப்பித்து கூறப்பட்ட ஆரம்பத் தலைமுறையினர் இந்த வழிமுறையை பின்பற்றியே வாழ்ந்து சென்றனர். பின்னர் வந்த தலைமுறையினரிடம் அறியாமை பரவியது. மற்ற மதங்களின் கலாச்சாரங்கள் இஸ்லாம் மார்க்கத்தில் ஊடுருவின. வழிகேட்டின் பக்கம் அழைக்கும் அழைப்பாளர்களாலும், அவ்லியாக்கள் மற்றும் நல்லடியார்களை கண்ணியப்படுத்துகிறோம், அவர்களை நேசிக்கிறோம் என்ற பெயரில் அவர்களின் கப்றுகள் கட்டிடங்களாக கட்டப்பட்டதனாலும் இந்த சமுதாயத்திலுள்ள அதிகமானவர்களிடம் வணக்க வழிபாடுகளில் இணைவைத்தல் திரும்பிவந்தது. அல்லாஹ்வைத் தவிர்த்து வணங்குவதற்காக சிலைகள் உருவாக்கப்பட்டன. அங்கு பிரார்த்தித்தல், நிர்பந்த நிலையில் உதவிக்கு அழைத்தல், அறுத்துபலியிடுதல் மற்றும் நேர்ச்சை போன்ற வணக்க வழிபாடுகளின் மூலம் அல்லாஹ்வை தவிர்த்து வணங்கப்படுகின்ற சிலைகளாக அந்த கப்றுகள் ஆக்கப்பட்டன. இவ்வாறு தாங்கள் செய்த இணைவைப்பிற்கு வஸீலா தேடுதல், அன்பை வெளிப்படுத்துதல் என்று பெயர் வைத்தனர். ஏனெனில்அவர்களின் பார்வையில் இந்தக் காரியங்கள் அந்த நல்லடியார்களை வணங்குவதாக இருக்கவில்லை. இதே கருத்தினைத்தான் ஆரம்ப கால இணைவைப்பாளர்களும் கொண்டிருந்தார்கள் என்று அல்லாஹ் பின்வரும் வசனத்தில் கூறுவதை இவர்கள் மறந்து விட்டனர்.

مَا نَعْبُدُهُمْ إِلَّا لِيُقَرِّبُونَا إِلَى اللَّهِ زُلْفَىٰ
எங்களை அவர்கள் நெருக்கத்தால் அல்லாஹ்வுக்கு சமீபமாக்கி வைப்பார்கள் என்பதற்காகவேயன்றி அவர்களை நாங்கள் வணங்கவில்லை (என்றுகூறுகின்றனர்) (39:3)

மக்களில் முற்காலத்திலும், தற்காலத்திலும் இவ்வாறான இணைவைப்பவர்களில் அதிகமானோர் அல்லாஹ்வை மட்டுமே படைத்து ஆளுபவனாக ஏற்கும் தவ்ஹீதுர் ருபூபிய்யாவை (படைத்துப் பரிபாலிப்பதில் இறைவனை ஒருமைப்படுத்துதல்) ஏற்றிருக்கின்றனர். அவனை மட்டுமே வணங்க வேண்டும் என்ற உலூஹிய்யாவில் அவனுக்கு இணை வைக்கின்றனர். அல்லாஹ் கூறுவது போல:

   12:106 وَمَا يُؤْمِنُ أَكْثَرُهُم بِاللَّهِ إِلَّا وَهُم مُّشْرِكُونَ

மேலும் அவர்களில் பெரும்பாலோர் அவர்கள் இணைவைக்கிறவர்களாகவே தவிர அல்லாஹ்வை விசுவாசிப்பதில்லை. (12:106)

பிர்அவ்ன், நாத்திகர்கள் மற்றும் தற்காலத்தில் வாழும் கம்யூனிஸ்டுகள் போன்ற சொற்பமானவர்களே அல்லாஹ்வை படைத்தாள்பவனாக ஏற்கும் தவ்ஹீதுர் ருபூபிய்யாவை மறுக்கின்றனர். இவர்கள் தங்களின் அர்த்தமற்ற வாதத்தினாலேயே அல்லாஹ்வை படைத்து ஆளுபவனாக ஏற்பதை வெளிப்படையாக மறுக்கின்றனரே தவிர தங்களின் உள்ளத்தில் அவனை உறுதியாக நம்புகின்றனர். அல்லாஹ் கூறியது போல:

 27:14وَجَحَدُوا بِهَا وَاسْتَيْقَنَتْهَا أَنفُسُهُمْ ظُلْمًا وَعُلُوًّا ۚ 

அவர்களுடைய இதயங்கள் அதனை (உண்மையென) உறுதிகொண்ட நிலையில் அநியாயமாகவும் அகம்பாவத்தாலும் அதனை அவர்கள் மறுத்தார்கள். (27:14)

ஒவ்வொரு படைப்புக்குப் பின்னும் ஒரு படைப்பாளன் இருப்பது அவசியம் என்பதை அவர்கள் தங்களின் அறிவைக்கொண்டு நன்றாகவே அறிந்து வைத்திருக்கின்றனர். நுணுக்கமாக மற்றும் கட்டுக்கோப்பாக இந்த பிரபஞ்சத்தை இயக்குவதற்கு ஆற்றலுடையவன், அதனை நேர்த்தியாக நிர்வாகம் செய்பவன் ஒருவன் இருந்தே ஆக வேண்டும் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதற்குப் பின்பும் எவர் இதனை மறுக்கின்றாரோ அவர் தனதுஅறிவை இழந்தவராக இருக்க வேண்டும்; அல்லது விதண்டாவாதத்தால் தனது அறிவை பயன்படுத்தாதவராக இருக்க வேண்டும். இந்த நிலையில் உள்ளவர்களின் வாதங்கள் ஏற்கப்படாது.

Asshaikh Salih Bin Fawzan Al-Fawzan
Translator :H. Hasan Ali Umari

Leave a Comment

Previous post:

Next post: