பிரிவுப் பெயர்கள் கூடாது, ஏன்?

in பிரிவும் பிளவும்

பிரிவுப் பெயர்கள் கூடாது என்பதற்கு ஆதாரமாக குர்ஆனிலிருந்து 2:213, 6:159, 21:92,93, 23:53, 42:14, 45:17 ஆகிய வசனங்களை சமர்ப்பிக்கிறீர்கள். இந்த வசனங்களை ஆழ்ந்து நோக்கிய எனக்கு சில சந்தேகங்கள். 2:213வது வசனத்தில் வேதக்கட்டளை பின் வேறுபாடு கொண்டவர்களைக் கண்டிக்கிறான். நேர்வழி நடக்கும் இயக்கத்தார்கள் முகல்லீது மெளலவிகளைப்போல் வேத வசனங்களில் கருத்து வேறுபாடு கொள்ளவில்லையே. இந்நிலையில் அவர்களை எப்படிக் கண்டிக்க முடியும்?

 6:159 வசனத்தில் மார்க்கத்தைப் பலவாறாகக் கூறுபோடுபவர்களைக் கண்டிக்கிறான். IAC, JAQH ஆகியோர் மார்க்கத்தின் பிரிவை உண்டு பண்ணவில்லை என்பதே உண்மை. குர்ஆன் நபிவழியில் ஒருமித்தக் கருத்தைக் கொண்டு தனிப் பெயரில் செயல்படுகிறார்கள் அவ்வளவுதான், அதேபோன்று 21:92ல் நீங்கள் ஒரே சமுதாயத்தவர்கள் (உம்மதன் வாஹிதா) என்று கூறுவது உண்மை. இதை வைத்து தனி பெயரில் இறங்கிய நபி(ஸல்) அவர்களின் காலத்திலேயே ஒரே சமுதாயமான முஸ்லிம்கள் “அன்சாரிகள்”, “குறைஷிகள்”, “முஹாஜிரீன்கள்” போன்று தனித்தனி பெயர்களைச் சூட்டிக் கொண்டு வாழந்துள்ளார்கள். இதையெல்லாம் நபி(ஸல்) அவர்கள் கண்டிக்கவில்லை என்பதைக் கவனிக்கும்போது, குர்ஆன், ஹதீஸ் வழி நடப்போர் தனிப் பெயரிலும் செயல்படலாம் என்பது புலனாகின்றது.

21:93ல் வசனம் பிரிவைக் கண்டித்தாலும், 94ம் வசனம் (குர்ஆன், ஹதீஸை) விசுவாசங்கொண்டு நடப்போர் வெற்றியாளர்களே என்று சொல்கிறது. அதேபோன்று 23:53, 30:32, 42:4, 45:17, ஆகிய வசனங்கள் கூட எதைக் கண்டிக்கின்றது என்பதை அலசும்போது மார்க்கத்தின் வாழ்க்கை வணக்க வழிபாட்டின் (உதாரணமாக : ஒதுக்கப்படவேண்டிய மத்ஹபுகள்) பிரிவினையை உண்டுபண்ணும் அறிவிலிகளின் செயல்களை வன்மையாகக் கண்டிக்கின்றதேயல்லாமல் குர்ஆன் ஹதீஸைப் பற்றிப் பிடித்து தனிப் பெயரில் (சட்ட திட்டங்களில்லை) செயல்படுவதை கண்டிப்பதைக் காண முடியவில்லை. என் கருத்தில் தவறு இருப்பின் தெளிவு படுத்துங்கள்.
பரங்கிப்பேட்டை, கு. நிஜாமுத்தீன், செளதி அரேபியா.

தடுக்கப்பட்ட பிரிவுப் பெயர்கள் எவை, அடையாளம் தெரிந்து கொள்ளுவதற்காக அனுமதிக்கப்பட்ட பெயர்கள் எவை என்பதைத் தீர்க்கமாக நீங்கள் அறிந்துகொண்டால் குழப்பம் தீர்ந்துவிடும். அனுமதிக்கப்பட்ட அடையாளம் தெரிந்து கொள்ள இடப்படும் பெயர்கள் வழிகேட்டில் செல்லும் 72 பிரிவினரிலிருந்து பிரிந்து, வெற்றி பெறும் ஒரே கூட்டம் என்ற கருத்தில் இடப்பட்டவை அல்ல என்பதற்கு நீங்கள் குறிப்பிட்டுள்ள பெயர்களே தக்க சான்றாகும்.

முஹாஜிர்கள், அன்சாரிகள் என்ற பெயர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் புறப்பட்டவர்களையும், அவர்களுக்கு உதவி செய்தவர்களையும் குறிக்கும். அவர்களில் யாரும் நாங்கள்தான் வெற்றி பெற்ற கூட்டம் என்றோ, முஹாஜிர்கள், அன்சாரிகள் என இயக்கம் அமைத்துக் கொண்டோ அழைப்புப்பணி செய்ததாக வரலாறு இல்லை. அதேபோல் குறைஷ்கள், குறைஷி என்பவரின் மக்களை குறிக்குமே அல்லாமல் வெற்றி பெறும் கூட்டம் என்ற பொருளைத் தராது. குறைஷ் பெயரில் இயக்கம் அமைத்து அழைப்புப்பணி செய்ததாகவும் வரலாறு இல்லை. இப்பெயர்கள் அவர்களாகத் தங்களுக்குச் சூட்டிக்கொண்ட பெயர்களுமல்ல.

ஆனால் நீங்கள் குறிப்பிட்டுள்ள JAQH என்ற பிரிவுப் பெயரின் பொருள் என்ன? “குர்ஆன், ஹதீஸின்படி செயல்படும் ஜமாஅத்” என்று சொல்லுவார்கள். முஸ்லிம்கள் குர்ஆன், ஹதீஸ்படி செயல்படக் கடமைப்பட்டவர்கள் தானே, அப்படியானால், முஸ்லிம் என்று அல்லாஹ் இட்ட அழகிய பெயர் இருக்க JAQH என்று ஏன் பெயரிட்டீர்கள்? என்று கேட்டால் என்ன பதில் சொல்லுவார்கள்? “முஸ்லிம்” என்ற பெயரில் குர்ஆன், ஹதீஸுக்கு மாற்றமாகச் செயல்படும் பல பிரிவார் இருக்கிறார்கள். அவர்களிலிருந்து எங்களை வேறுபடுத்திக் காட்டவே எங்களுக்கு JAQH என்ற பெயரைச் சூட்டியுள்ளோம் என்று சொல்லப் போகிறார்கள். இதைத் தவிர வேறு நியாயமான எந்தக் காரணத்தையும் சொல்ல முடியாது. அதாவது, முஸ்லிம் சமுதாயத்திலிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டுகிறார்கள். சமுதாயத்தை மற்றவர்களைப் போல் இவர்களும் கூறு போடுகிறார்கள். இப்படிச் சமுதாயத்தைக் கூறு போடும் பெயர்களையே பிரிவுப் பெயர்கள் என அல்லாஹ் கண்டிக்கிறான். இப்படிப்பட்ட பெயர்களையே நீங்கள் குறிப்பிடும் வசனங்கள் அனைத்தும் குறிப்பிட்டுக் கண்டிக்கின்றன.

வழிகெட்ட 72 பிரிவினரையும் நரகத்திற்கு அனுப்பிவிட்டு, வெற்றி பெறும் ஒரே ஒரு கூட்டத்தை மட்டும் சுவர்க்கத்திற்குப் பிரித்து அனுப்பும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு. அது மறுமையில் செவ்வனே நடைபெறும். அதற்காக 72 கூட்டத்திலிருந்து வெற்றி பெறும் கூட்டம் தாங்களாக இவ்வுலகிலேயே தங்களைப் பிரித்துக் காட்டி அல்லாஹுவின் தனித் தன்மையில் பங்கேற்கப்போக வேண்டியதில்லை. இவ்வுலகில் தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக்கொண்டு வழிகேட்டில் இருக்கும் 72 பிரிவினரும், வெற்றிபெறும் ஒரு பிரிவினரும் முஸ்லிம் உம்மத்தைச் சார்ந்தவர்களே. “எனது உம்மத்து 73 பிரிவினர்களாகப் பிரிவார்கள்” என்று நபி(ஸல்) அவர்களே கூறி இருக்கும் நிலையில், அதாவது நபி(ஸல்) அவர்களை வழிகெட்டவர்களைத் தங்களுடன் இணைத்துச் சொல்லியிருக்க இவர்கள் அவர்களை விட்டும் தங்களைப் பிரித்துக்காட்ட முற்படுவது முறைதானா? முஸ்லிம் உம்மத்திலிருந்து அவர்களை இவ்வுலகிலேயே பிரித்துக் காட்ட இவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?

இன்று நமது இந்திய நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராகக் காணப்படும் பல விஷயங்களில் இவர்கள் எந்த முஸ்லிம்களிடமிருந்து தங்களை வேறுபடுத்தி JAQH என்று காட்டிக் கொள்கிறார்களோ. அவர்கள் முஸ்லிம்களின் தரப்பில் இருக்கிறார்களா? அல்லது முஸ்லிம்களுக்கு எதிரான தரப்பில் இருக்கிறார்களா? இதையாவது சிந்தித்து உணர வேண்டாமா? முஸ்லிம்கள் சிறுபான்மையினராக உள்ள இந்திய நாட்டில் முஸ்லிம்களிடையே பிரிவினையை உண்டாக்காமல், அனைவரையும் ஒன்றாக அணைத்துச் சென்றால் அது எவ்வளவு பெரிய பலமாக இருக்கும் என்பதை இவர்களால் உணர முடியவில்லையா? அல்லது அவர்களைத் தங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டாவிட்டால் நாளை மறுமையில் அல்லாஹ் தவறுதலாக இவர்களுக்குக் கிடைக்கும் சுவர்க்கத்திலிருந்து பாகம் பிரித்து அவர்களுக்குக் கொடுத்து விடுவான் என்று அஞ்சுகிறார்களா?

வழிகேட்டில் செல்லும் அவர்களின் வழிகேட்டைத் தெளிவாகப் புரிந்து, அவை குறித்து எச்சரிப்பதோடு அந்த வழிகேட்டில் இருந்து இவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை நாம் மறுக்கவில்லை. அதல்லாமல் முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்ளும் அவர்களிலிருந்து JAQH என்று தங்களைப் பிரித்துக் காட்டுவதால் அழிவைத் தரும் பெயர் புகழைத் தவிர வேறு என்ன லாபம் இவ்வுலகிலும், மறுமையிலும் கிடைக்கப் போகிறது. அதனால் முஸ்லிம் உம்மத்தில் மேலும் பிளவுகள் ஏற்பட்டு மாற்று மதத்தார்களிடம் மட்டுமில்லாமல், முஸ்லிம் பிரிவினைவாதிகளிடமும் தலைகுனிவு தான் ஏற்படுகிறது. அதல்லாமல் முஸ்லிம்கள் தங்கள் தங்கள் பிரிவுகளில் வலுவாக நிலைத்திருக்கவும் வழி வகுக்கிறது. முஸ்லிம் உம்மத் ஒன்றுபட்டு உயர வேண்டுமென்றால் பிரிவிப் பெயர்களை ஒழித்து “முஸ்லிம்” என்ற பெயரில் ஒரே தலைமையில் ஒன்றுபடுவதைத் தவிர வேறு வழியில்லை. ஆக JAQH பிரிவுப் பெயரே அன்றி – அது ஒரு அமைப்போ அல்லது இயக்கமோ அல்ல என்பதே உண்மையாகும்.

அடுத்து நீங்கள் குறிப்பிட்டுள்ள JAQH பற்றிப் பார்ப்போம். நீங்கள் குறிப்பிட்டுள்ள ஆயத்துகளில் கண்டிக்கப்படும் ஷிபா, சுன்னத் ஜமாஅத், ஹன்பி, ஷாபி, மாலிக், ஹம்பலி, அஹ்லஹதீஸ் JAQH போன்ற பிரிவுப் பெயர்களைச் சார்ந்தது IAC என்று நாம் ஒருபோதும் சொன்னதில்லை. வழிகேட்டிலிருப்பவர்களிலிருந்து பிரித்துக் காட்டும் நோக்கத்துடன் வைக்கப்பட்ட பெயர்கள் அல்ல IAC, IAM, ISM போன்றவை. ஆயினும் மார்க்கப்பணி செய்வதற்காக இவர்களாகத் தங்களுக்கு இட்டுக் கொண்ட பெயர்களாகும். அழைப்புப் பணி செய்கிறவர்கள் தங்களுக்கென்று ஒரு தனிப்பெயரை இட்டுக்கொள்ள மார்க்கத்தில் அனுமதி இருக்கிறதா? என்று பார்த்தால் அனுமதி இல்லை என்ற விடையே கிடைக்கும்.

 “எவர் அல்லாஹ் அளவில் (ஜனங்களை) அடைத்து(த் தாமும்) நற்கருமங்களைச் செய்து நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் உள்ளேன்” என்றும் கூறுகின்றாரோ, அவரை விட அழகான வார்த்தை கூறுபவர் யார்? (41:33)” என்று அல்லாஹ் கூறியிருப்பதிலிருந்தே, மார்க்கப் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறவர்கள் தங்களை முஸ்லிம்களிலிருந்து பிரித்துக் காட்டக் கூடாது என்பதை உணர முடிகிறது.

(விசுவாசிகளே!) உங்களில் ஒரு கூட்டத்தார் தோன்றி அவர்கள் (மனிதர்களை) நன்மையின்பால் அழைத்து, நல்லதை ஏவித் தீயச் செயல்களிலிருந்து (அவர்களை) விலக்கிக் கொண்டுலிருக்கவும், இத்தகையோர்தாம் வெற்றி பெற்றோர்.  (3:104)

இந்த குர்ஆன் வசனமும் அவர்களை ஜமாத்தாக இயங்க அனுமதி அளிக்கிறதேயன்றி அவர்கள் தனியொரு இயக்கப் பெயரில் செயல்படலாம் என்ற அனுமதி தரவில்லை. முஹாஜிர்கள், அன்சாரிகள், குறைஷிகள், ஹாஷிம்கள் என்ற பெயர்களை ஆதாரம் காட்டி தங்களின் இயக்கப் பெயர்களை நியாயப்படுத்துகிறவர்கள் தவறிழைக்கின்றனர் என்பதே உண்மையாகும்.

காரணம் அவர்கள் எடுத்துக்காட்டும் எந்தப் பெயரிலும் இயக்கம் அமைக்கப்பட்டு மார்க்கப் பிரச்சாரம் செய்து வந்ததற்கு எவ்வித ஆதாரமில்லை. அவர்களில் தலைவர், செயலர், பொருளாளர் என யாரும் பதவி வகித்ததாகவும் வரலாறு இல்லை.

அடுத்து நிதானமாகச் சிந்தித்துப் பாருங்கள். இப்படி ஒவ்வொருவரும் தனித்தனி இயக்கப் பெயர்களில் மார்க்கப் பிரச்சாரம் செய்வதற்கு ஒரு முடிவே இல்லை என்றால் இந்த இயக்கத்தினர் அனைவரும் என்று ஒன்று சேரப்போகிறார்கள்? ஒரே தலைமையின்கீழ் எப்போது இந்த உம்மத்தை ஒன்றிணைக்கப் போகிறார்கள். நீங்களும் ஒப்புக்கொள்ளும் ஒரே சமுதாயம் (உம்மத்தன் வாஹிதா) எப்போது ஏற்படப்போகிறது? உலக அழிவுதான் வரை இது சாத்தியமாகப் போவதில்லை. இயக்கங்களை ஒழித்துவிட்டு இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்கள் என்ற நிலையில் ஒரே தலைமையின் கீழ் ஒன்றுபட்டு செயல்படுவது கொண்டே இது சாத்தியமாகும். பல இயக்கங்களுக்கு அனுமதி இருக்கும் வரை சமுதாய ஒற்றுமைக்கு வழியே இல்லை.

இயக்க அமைப்புகளில் செயல்படுகிறவர்கள் இஸ்லாத்தின் ஒரு சில அங்கங்களைச் செயல்படுத்த முடியுமேயன்றி, நபி(ஸல்) அவர்களது காலத்திலும், சிறப்புக்குரிய நான்கு கலீஃபாக்களின் காலத்திலும் இருந்ததுபோல் இஸ்லாத்தை முழுமையாகச் செயல்படுத்துகிறவர்களாக ஒருபோதும் இருக்க முடியாது. இஸ்லாத்தை முழுமையாக செயல்படுத்துகிறோம் என்று அவர்கள் கூறுவது உண்மையாக இருக்க முடியாது.

முஸ்லிம் சமுதாயத்திற்கு ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தலைமை ஒருபோதும் இருக்கமுடியாது. சமுதாய ஒற்றுமையைக் குலைக்கும் இப்படிப்பட்ட இயக்க அமைப்புகளுக்கு குர்ஆன், ஹதீஸில் எப்படி ஆதாரம் இருக்கமுடியும்? சமாதிச் சடங்கு செய்வோர் முகல்லிதுகள் சம்பந்தமே இல்லாத குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் ஆதாரமாகக் காட்டித் தங்களின் தவறான நிலைகளை நியாயப்படுத்துவது போல், இவர்களும் சம்பந்தமே இல்லாத குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் ஆதாரங்களாகத் தருகின்றனர். அவை கொண்டு தங்கள் தவறான போக்கை நியாயப்படுத்துகின்றனர். அவை கொண்டு தங்கள் தவறான போக்கை நியாயப்படுத்துகின்றனர்.

மார்க்கத்தின் பெயரால் இயக்க அமைப்புகளுக்கு ஆதாரமில்லை என்பது ஒரு புறமிருக்க. அப்படி இயக்க அமைப்புகளில் செயல்படும் இயக்கங்களில் காணப்படும் உட்பூசல்கள், ஒரு இயக்கத்திற்கும் மற்றொரு இயக்கத்திற்கும் இடையில் காணப்படும் போட்டி பொறாமை இவை அனைத்தைக் கண்கூடாகக் கண்ட பின்பாவது படிப்பினை பெற வேண்டாமா?

இந்த உம்மத், முஸ்லிம்கள் என்ற நிலையில் ஒரே தலைமையில் ஒன்றுபடாத வரையில் இந்த சமுதாயத்தில் மறுமலர்ச்சியைப் பார்க்க முடியாது. அந்த ஒற்றுமைக்கு இந்தப் பிரிவுப் பெயர்களும், இயக்கப் பெயர்களும் முழுக்க முழுக்கத் தடையாக இருக்கின்றன என்பதை உங்களைப் போன்றவர்களும், மற்றவர்களும் உணர வேண்டும். இவ்வாறு நாம் எழுதுவது மார்க்கப் பணியில் தீவிரமாக தற்போது ஈடுபட்டுள்ள துடிப்புள்ள பல இளைஞர்களுக்குக் கசப்பாகவே இருக்கும் என்பதையும், அதனால் அவர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்புகள் வருகின்றன என்பதையும் நாம் நன்கு அறிவோம்.

அவர்களைத் திருப்திப்படுத்த சத்தியத்தை வளைத்து அவர்களின் ஆதரவைப் பெறுவதற்கு நாம் தயாராக இல்லை. நாம் சத்தியத்தை எழுதி வருவது மக்களின் நல் ஆதரவை எதிர்பார்த்து அல்ல. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை மனதில் கொண்டே செயல்பட்டு வருகிறோம். இன்றில்லாவிட்டாலும் நாளை அல்லது நமக்குப் பின்பாவது இந்த எழுத்துக்கள் முஸ்லிம் சமுதாயத்தின் ஒற்றுமைக்கு வழிவகுக்கும் என்று அல்லாஹ் மீது ஆதரவு வைக்கிறோம்.

அந்நஜாத்

{ 4 comments… read them below or add one }

aslam January 4, 2014 at 3:20 pm

உலக மக்களை முஸ்லிம்களின் கூட்டமைப்பு (ஜமாஅதுல் முஸ்லிமீன்) என்கின்ற ஒரே குடையிின் கீழ் வருமாறு அழைப்பு விடுத்துக்கொண்டிருக்கிறது ஜமாஅதுல்முஸ்லிமீன்.உலகத்துக்கு ஒரே தலைமைத்துவத்தை கொண்டு நபி(ஸல்)அவர்களால் நன்மாராயம் கூறப்பட்ட கூட்டமைப்பு எனும் ரஹ்மத்தில் இயங்கி வருகிறது அல்ஹம்துலில்லாஹ்

Reply

mohammad rukunudeen January 17, 2014 at 2:05 am

பிரிவு காலத்தில் முஸ்லிம்களுக்கு ஜமாஅதும் இல்லை அமீரும் இல்லை.முஸ்லிமாக வாழ வேண்டுமானால் மரணம் வரும்வரை தனிமை வாழ்வே நபிவழி.

Reply

hajira January 22, 2014 at 4:39 pm

Ma shaa allah good definition

Reply

Mahibal M. Fassy February 4, 2014 at 2:03 am

The importance of unity of Islamic Ummah, Allah explains:

2:256 لَا إِكْرَاهَ فِي الدِّينِ ۖ قَد تَّبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَيِّ ۚ فَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِن بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَىٰ لَا انفِصَامَ لَهَا ۗ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ
2:256. (இஸ்லாம்) மார்க்கத்தில் நிர்ப்பந்தமேயில்லை. ஏனென்றால் வழிகேட்டிலிருந்து (விலகி) நேர்வழி (அடைவது எவ்வாறென்று) தெளிவாகிவிட்டது. ஆகவே, எவர் ஷைத்தானை நிராகரித்துவிட்டு அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கின்றாரோ, அவர் நிச்சயமாக அறுபடாத பலமானதொரு கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ், (அனைத்தையும்) நன்கு செவியுறுபவனாகவும், மிக அறிந்தவனாகவும் இருக்கின்றான்.

3:103 وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا ۚ وَاذْكُرُوا نِعْمَتَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ كُنتُمْ أَعْدَاءً فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُم بِنِعْمَتِهِ إِخْوَانًا وَكُنتُمْ عَلَىٰ شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنقَذَكُم مِّنْهَا ۗ كَذَٰلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَهْتَدُونَ
3:103. மேலும், நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வுடைய (வேதம் என்னும்) கயிற்றை பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். (உங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு) நீங்கள் பிரிந்திட வேண்டாம். உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருளை நினைத்துப் பாருங்கள். நீங்கள் (ஒருவருக்கொருவர்) எதிரிகளாக(ப் பிரிந்து) இருந்த சமயத்தில் உங்கள் உள்ளங்களுக்குள் (இஸ்லாமின் மூலம்) அன்பை ஊட்டி ஒன்று சேர்த்தான். ஆகவே, அல்லாஹ்வின் அருளால் நீங்கள் சகோதரர்களாகி விட்டீர்கள். (அதற்கு முன்னர்) நீங்கள் நரக நெருப்புக் கிடங்கிற்கு அருகில் இருந்தீர்கள். அதிலிருந்தும் அவன் உங்களை காப்பாற்றிக் கொண்டான். நீங்கள் நேர்வழி பெறுவதற்காக அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்திக் காண்பிக்கின்றான்.

31:22 وَمَن يُسْلِمْ وَجْهَهُ إِلَى اللَّهِ وَهُوَ مُحْسِنٌ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَىٰ ۗ وَإِلَى اللَّهِ عَاقِبَةُ الْأُمُورِ
31:22. எவர் தன்னுடைய முகத்தை முற்றிலும் அல்லாஹ்வின் பக்கம் திருப்பி நன்மையும் செய்து கொண்டிருக்கிறாரோ அவர் நிச்சயமாக (அறுபடாத) மிக்க பலமானதொரு கயிற்றைப் பிடித்துக் கொண்டார். எல்லா காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கின்றது.

And prophet Muhammad, Sallallaahu Alaihi Wasallam, said:

2957. ‘எனக்குக் கட்டுப்பட்டவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவராவார். எனக்கு மாறு செய்கிறவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்தவராவார். தலைவருக்குக் கட்டுப்பட்டவர் எனக்குக் கட்டுப்பட்டவராவார். தலைவருக்கு மாறு செய்கிறவர் எனக்கு மாறு செய்தவராவார். தலைவர் ஒரு கேடயம். அவருக்குக் கீழிருந்து போரிடப்படும்; அவர் மூலம் பாதுகாப்பு பெறப்படும். அவர் (தன் தலைமையின் கீழுள்ள குடிமக்களுக்கு) இறை(யச்ச) உணர்வைக் கைக்கொள்ளும்படி கட்டளையிட்டு நீதியுடன் நடந்தால் அவருக்கு அதன் காரணமாக (பெரும்) நற்பலன் உண்டு. அதுவல்லாத(தீய)வற்றை அவர் கட்டளையிட்டால், அதனால் ஏற்படும் பாவம் அவரின் மீது(ம்) சாரும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.”
Volume :3 Book :56 (Sahih al Buhari)

Reply

Cancel reply

Leave a Comment

Previous post:

Next post: