நபித் தோழர்களுக்கு இவ்வளவு மகத்துவம் ஏன்! 

Post image for நபித் தோழர்களுக்கு இவ்வளவு மகத்துவம் ஏன்! 

in பொதுவானவை

புகாரீ, முஸ்லிம் ஆகிய இரு பெரும் நபிமொழி நூல்களிலும் இடம் பெற்றுள்ள ஓர் அறிவிப்பு கூறுகின்றது. “என் தோழர்களைக் குறை சொல்லாதீர்கள். எவனுடைய கரத்தில் என் உயிர் இருக்கின்றதோ அவன் மீது சத்தியமாக! உங்களில் ஒருவர் உஹது மலையளவு தங்கத்தை தருமம் செய்தாலும் என் தோழர்களில் ஒருவர் ஒரு முத்து (இரு கைகளில் குவிந்திருக்கும்) அளவு செய்த தருமத்திற்கு அல்லது அதில் பாதியளவு செய்த தருமத்திற்கு ஈடாக முடியாது”.

நபித் தோழர்களுக்கு இவ்வளவு மகத்துவம் கிடைத்தது எதனால்? அவர்களிடத்தில் நம்மால் புரிந்துகொள்ள முடியாத ரகசியமான ஒரு புனிதம் இருந்ததால்தான் இந்த மகத்துவம் அவர்களுக்குக் கிடைத்ததா? இல்லை; மாறாக அதற்கு அறிவுப்பூர்வமான காரணம் ஒன்று உள்ளது. அதனை திருக்குர்ஆனில் அல்லாஹுதஆலாவே நமக்குச் சொல்லிக் காட்டுகின்றான்.

உங்களில் எவர் (இஸ்லாத்தின்) வெற்றிக்கு முன்பு அதற்காகச் செலவு செய்து போரிட்டார்களோ அவர்கள் வெற்றிக்குப் பின்பு செலவழித்து போரிட்டவர்களுக்குச் சமமாகமாட்டார்; வெற்றிக்கு முன்பு செலவிட்டுப் போரிட்டவர்கள், வெற்றிக்குப் பின்னர் செலவிட்டுப் போரிட்டவர்களை விட மிக உயர்ந்த அந்தஸ்துடையவர்கள் ஆவர். (57:10)

மக்காவை வெற்றி கொள்வதற்கு முன்னால் நாயகம்(ஸல்) அவர்கள் எதார்த்தத்தில் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் உலக ரீதியாக அவர்களுடைய உயர் அந்தஸ்து இன்னும் நிரூபிக்கப்படாமலிருந்தது. அப்படிப்பட்ட நிலையில் இறை தூதரைப் புரிந்து கொள்ளவும் அவர்களை இனம் கண்டு கொண்டு அவர்களுக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொள்ளவும் பிரத்தியேகமான ஒரு அறிவாற்றல் தேவைப்பட்டது. வெளித் தோற்றத்தைக் கண்டு ஏமாந்து விடாமல் ஊடுருவிப் பார்த்து உண்மையை விளங்கிக் கொள்ளும் விசேஷ ஆற்றல் தேவைப்பட்டது; அப்படியே உண்மையை விளங்கிக் கொண்டாலும் கூட அண்ணாலருடன் ஒத்துழைத்திட பெரும் துணிச்சல் தேவைப்பட்டது. ஏனெனில், சத்தியவாதியான நாயகத்துடன் ஒருவர் ஒத்துழைப்பது என்பது அந்த நேரத்தில் சமுதாயம் முழுவதையும் பகைத்துக் கொண்டு அதில் அவர் ஒதுக்கப்பட்டவராக, தீண்டத் தகாதவராக நம்மைத் தாமே ஆக்கிக் கொள்வதாக இருந்தது. அத்தகைய கடினமான சூழ்நிலையில் இந்தத் தியாகத்திற்கு ஒருவர் முன்வந்தாலும் அப்போதைய நிலையை மனத்திற்கொண்டு பார்க்கும்போது அவருக்கு அதற்கான பலன் எதிர்காலத்தில் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உத்திரவாதமும் கூட இல்லாதிருந்தது.

இறைத்தூதர்களை நிராகரித்தவர்கள் அவர்களின் வெளிப்படையான நிலைமையைக் கொண்டு இறைத் தூதர்களையும் அவர்களைப் பின்பற்றியவர்களையும் பார்த்து “உங்களிடம் எந்த மேம்பாடும் சிறப்பும் இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லையே” என்றுதான் சொன்னர்கள். இறைத்தூதர்கள் “நாங்கள் கொண்டு வந்திருக்கும் இறைச்செய்தி உண்மையானதே என்பதைக் காட்டும் (அறிவின் தெளிவான) சான்று உங்களுக்குப் புலப்படவில்லையா? என்று கேட்டார்கள்.

இந்த உலகத்தில் தனிச்சிறப்புகள், வசதி வாய்ப்புகள், செல்வாக்கு ஆகியன சத்தியவாதிகளுக்கு இல்லாதிருந்த நிலையை-இந்த வெளித் தோற்றத்தை பார்த்து முடிவெடுக்கும் போக்குதான் சத்தியவாதிகளைப் புரிந்து கொள்ள எல்லாக் காலங்களிலும் தடையாக இருந்து வந்திருக்கின்றது. நபி நூஹ்(அலை) அவர்கள் தமது பிரச்சாரத்தை தன் சமூகத்தாரிடையே செய்து வந்தபோது இதே காரணத்தால் நூஹ்(அலை) அவர்களுக்கு நமக்கில்லாத தனிச் சிறப்பு எதுவும் வெளிப்படையில் இருப்பதாகவோ, வசதி வாய்ப்புகள், உலகியல் பலம், செல்வாக்கு எதுவும் இருப்பதாகவோ தெரியாததால் அந்தச் சமூகத்து மக்கள் அவர்களிடமும் இப்படித்தான் கேட்டார்கள்! அவர்களது கேள்வியையும் நபி நூஹ்(அலை) அவர்களின் பதிலையும் அல்லாஹ் பின் வருமாறு திருக்குர்ஆனில் எடுத்துரைக்கின்றான்.

நாம் நூஹ்(அலை) அவர்களை அவரது சமூகத்தாரிடம் அனுப்பினோம். அவர் (அம்மக்களிடையே சென்று) நான் “நீங்கள் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்கக் கூடாது” என்று பகிரங்கமாக உங்களை அச்சுறுத்தி எச்சரிக்கக் கூடியவனாவேன்” துன்புறுத்தும் ஒரு நாளின் வேதனை உங்களைப் பிடித்துக்கொள்ளும் என்று நான் அஞ்சுகின்றேன்” என்று கூறினார்கள். அவரது சமூகத்தவரில் அவரை நிராகரித்த பிரமுகர்கள் கூறினார்கள்: “உம்மை எங்களைப் போன்ற ஒரு மனிதராகவே நாங்கள் காண்கிறோம், எங்களில் அப்பாவிகளான கீழ்த்தட்டு மக்கள் மட்டுமே உங்களைப் பின்பற்றுவதைக் காண்கிறோம். மேலும் உங்களுக்கு எங்களை விட எந்தச் சிறப்பும் இருப்பதாக எங்களுக்குப் புலப்படவில்லை: மாறாக நீங்கள் பொய்யர்கள் என்றே நாங்கள் எண்ணுகின்றோம்.” (11:26-27)

(இந்த வாதங்களைக் கேட்ட) நபி நூஹ்(அலை) அவர்கள் கூறினார்கள். “என் சமூகத்தவரே! நான் என் ரப்பிடமிருந்து எனக்குக் கிடைத்திருக்கும் ஓர்(அறிவின்) சான்றை அடிப்படையாகக் கொண்டே இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளேன். (11:28)

ஆனால் இந்த சிந்தனைப் பூர்வமான சான்றை ஆதாரத்தை அந்த மக்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. பொது மக்கள், சத்தியத்தின் பக்கம் அழைப்பவர்களை உலக செல்வாக்கு உடையவர்களாகப் பார்த்தால் மட்டுமே அவர்களை ஏற்றுக்கொள்ள முன்வருகிறார்கள். ஆனால் சத்தியவாதிகள் அறிவாதாரத்தின்-இறையாதாரத்தின் அடிப்படையில்தான் நிற்கின்றார்கள், உலக செல்வாக்கின் அடிப்படையில் நிற்பதில்லை.

நாயகம்(ஸல்) அவர்களின் வாய்மையைப் புரிந்து கொள்ள இந்த அறிவாதாரத்தைத் தவிர வேறெந்த உலக பலமும் செல்வாக்கும் சிறிதும் இல்லாதிருந்த ஒரு காலகட்டத்தில்தான், நபித்தோழர்கள் அண்ணலாரின் வாய்மையைப் புரிந்துகொண்டு அவர்களுக்குப் பக்கபலமாக நின்றார்கள், தங்கள் உலக லாபங்களைக் குறித்தோ தங்கள் எதிர்காலத்தைப் பற்றியோ அவர்கள் சிறிதும் கவலை கொள்ளவில்லை. மக்கள் ஆதரவு கிடைக்குமோ கிடைக்காதோ என்று எண்ணி சஞ்சலமும் அடையவில்லை, அவர்கள் இறை திருப்தியை மட்டுமே குறிக்கோளாய்க் கொண்டார்கள், மறுமை வெற்றியைக் கருத்தில் கொண்டு, நாயகம்(ஸல்) அவர்களுக்கு வெளிப்படையாக தமது ஆதரவை தெரிவித்துப் போராட்டக் களத்தில் குதித்தார்கள், பல சோதனைகளையும் வேதனைகளையும் தாங்கி இஸ்லாத்தை ஓங்கச் செய்திட தமது முழு ஒத்துழைப்பையும் நல்கினார்கள், தம்முடைய இந்தத் தனிப்பெரும் தியாகப் பண்பின் காரணத்தால்தான் நபித்தோழர்கள் அல்லாஹ்விடத்தில் இவ்வளவு பெரிய அந்தஸ்தை அடைந்தார்கள்.

அபூசாலிஹ்

Leave a Comment

Previous post:

Next post: