கூடுதல் குறைவின்றி அறிவிக்கும் நபிமார்களின் பணி

Post image for கூடுதல் குறைவின்றி அறிவிக்கும் நபிமார்களின் பணி

in பொதுவானவை

நபிமார்கள் , அல்லாஹ்வால் “வஹீ” மூலம் அறிவிக்கப்பட்டவற்றை எவ்வித கூடுதல் குறைவு இன்றி அப்படியே மக்களிடம் அறிவித்தார்கள்; அவற்றின்படி அவர்களும் செயல்பட்டார்கள். அல்லாஹ்வின் கட்டளைப்படி தங்களது பணிக்காக மக்களிடம் எவ்விதக் கூலியையும் கேட்கவில்லை; எதிர்பார்க்கவும் இல்லை. நபிமார்கள் அனைவரும் ஆகுமான (ஹலாலன) வழியில் உழைத்தே தங்களின் உலக வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டார்கள். மக்களிடம் கையேந்தவில்லை.

நபிமார்கள், தங்களின் எவ்விதச் சுயகருத்தையும் மார்க்கத்தில் புகுத்தாமல், அல்லாஹ்வின் அறிவிப்புக்களை அப்படியே கூடுதல் குறைவு இல்லாமல் மக்களுக்கு அறிவித்தார்கள். அதுபோல் நபிமார்களின் வாரிசுகளாக இருக்கும் உண்மை உலமாக்கள் அல்குர்ஆனில் இருப்பவற்றையும், நபி(ஸல்) அவர்களின் உண்மை நடைமுறைகளான ஆதார பூர்வமான ஹதீஸ்களையும் மட்டுமே மக்களுக்கு மார்க்கமாக எடுத்துச் சொல்ல வேண்டும். நபிமார்கள் எப்படி ஆகுமான வழியில் சொந்த உழைப்பைக் கொண்டு தங்களின் உலகத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டார்களோ அதே போல், உண்மையான உலமாக்கள் ஆகுமான வழியில் தங்கள் சொந்த உழைப்பைக் கொண்டு தங்களின் உலகத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளவேண்டும்.

நபிமார்களின் எப்படி தங்களின் மார்க்கப் பணிக்கான கூலியை நாளை மறுமையில் எதிர்பார்த்து தூய மனதுடன் செயல்பட்டார்களோ அதுபோல், உண்மையான உலமாக்கள் தங்களின் மார்க்கப் பணிக்கான கூலியை நாளை மறுமையில் எதிர்பார்த்து தூய மனதுடன் செயல்படவேண்டும். நபிமார்கள் எப்படி அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து மக்களிடம் கூலி கேட்காமல் செயல்பட்டார்களோ அதுபோல் உண்மையான உலமாக்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி, அல்லாஹ்வின் கட்டளைக்கு அடி பணிந்து மக்களிடம் கூலி கேட்காமல் மார்க்கப் பணி புரிய வேண்டும். நபிமார்கள் எப்படி தாங்கள் மார்க்கப் பணிக்கு அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என ஆணவம் கொள்ளாமல் தன்னடகத்துடன் செயல்பட்டார்களோ அதுபோல், உண்மை உலமாக்கள் தன்னடகத்துடன் மார்க்கப்பணி செய்ய வேண்டும்.

உண்மையான உலமாக்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும், அல்குர்ஆனையும் ஏற்று தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்பவர்களை, அவர்களை மனப்பூர்வமாக ஏற்று அதன்படி செயல்பட்டாலும், அல்லது பெயரளவில் தாங்கள் நம்பிக்கை வைத்துள்ள வழிகேட்டு ஆலிம்களின் வழி காட்டல்படி செயல்பட்டாலும், அவர்கள் அனைவரையும் ஒரே உம்மத்தாக ஓரே சமுதாயமாக அரவணைத்துச் செல்ல வேண்டும். அவர்களில் ஏற்றத்தாழ்வு கற்பித்து, பிளவுபடுத்தி சமுதாயத்தைப்பல பிரிவுகளாக்கி சின்னாபின்னப் படுத்தக்கூடாது.

மேலே நாம் எடுத்துக் காட்டியுள்ள நபிமார்களின் மேலான உயர்வான குணங்கள் அனைத்தும் இந்த மவ்லவிகளிடம் காணப்படுகிறதா? குறைந்த அளவில் ஒன்றிரண்டாவது காணப்படுகிறதா? இல்லையே! மார்க்கப் பணியை முழுக்க முழுக்க தங்களுடைய வயிற்றுப் பிழைப்புக்காக அல்லவா செய்கின்றனர். நாக்கூசாமல் பேரம் பேசி கூலி வாங்கிக் கொண்டே மார்க்கப் பணிகளைச் செய்கின்றனர். தமக்குப் பின்னர் தமது சமுதாயத்தில் இப்படிப்பட்ட அலங்கோலங்கள் அரங்கேறும் என அஞ்சியோ என்னவோ மேற்படி ஹதீஸின் இறுதிப் பகுதியில் நபிமார்கள் திர்ஹத்தையோ, தீனாரையோ அனந்தரமாக விட்டுச் செல்லவில்லை என நெற்றிப் பொட்டில் அடிப்பதுபோல் எச்சரிக்கை செய்துள்ளார்கள் நபி(ஸல்) அவர்கள்.

அன்று புழக்கத்தில் இருந்த வெள்ளிக்காசுகள் திர்ஹம் என்றும் தங்கச் காசுகள் தீனார் என்றும் அழைக்கப்பட்டன. நபிமார்களுடைய வாரிசுகள் திர்ஹம், தீனார் போன்ற காசு பணத்திற்காக மார்க்கப்பணி செய்யக் கூடாது என அல்லாஹ் அல்குர்ஆனில் கடுமையாக எச்சரித்துளளான்.இந்த நிலையில் கூலிக்காக சம்பளத்திற்காக மார்க்கப்பணி செய்கிறவர்கள் நபிமார்களின் வாரிசுகளாக இருக்க முடியுமா? ஒரு போதும் முடியாது. கோணல் வழிகளை அவர்கள் விடாப்பிடியாகப் பிடித்து சாதிப்பதற்கு ஒரே காரணம் அவர்கள் உலக ஆதாயத்தை, வயிற்றுப் பிழைப்பை நோக்கமாகக் கொண்டு மார்க்கப் பணி புரிவதால், கோணல் வழிகளை மார்க்கமாகச் சொன்னால் தான் மக்களின் ஆதரவு கிடைக்கும். அது கொண்டு உலகில் செல்வாக்கு, வசதியான வாழ்வு, வாய்க்கு ருசியான சாப்பாடு என அனைத்தும் தாராளமாகக் கிடைக்கும் என்ற காரணம்தான்.

அல்குர்ஆனில், ஆதாரப்பூர்வமான ஹதீஸில் உள்ளதை உள்ளபடி எடுத்துச் சொன்னால், அல்குர்ஆனில் அல்லாஹ் பல இடங்களில் கூறியிருப்பது போல் மிக, மிக சொற்பமானவர்களே காது கொடுத்து கேட்பார்கள்; தங்களை ஆதரிப்பார்கள். அப்படி ஆதரித்தாலும் அல்லாஹ் அல்குர்ஆனில் கட்டளையிட்டுள்ளதற்கு மாறாக மார்க்கப் பணிக்கு இவர்களுக்கு கூலி -சம்பளம் கொடுக்க முன் வர மாட்டார்கள். நேர்வழி நடக்கும் சொற்பத் தொகையினரால், தங்களுக்கு ஆதாயம் இல்லை; வழிகேட்டில் சென்று நரகில் விழும் பெருந்தொகையினரால் மட்டுமே தங்களுக்கு ஆதாயம் என்ற அற்ப உலக ஆசை காரணமாகவே, வழிகேடுகளை நேர்வழியாகப் போதிக்கத் துணிகிறார்கள்; மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்ட சாபக்கேடே இவர்களின் இந்த வழிகேட்டு நிலை. எனவேதான் மார்க்கத்தைப் பிழைப்பாகக் கூடாது என அல்லாஹ் மிகக் கடுமையாகத் தடுத்துள்ளான்.

Leave a Comment

Previous post:

Next post: