ஓதுவோம் வாருங்கள்! -1

Post image for ஓதுவோம் வாருங்கள்! -1

in அனாச்சாரங்கள்,மூடநம்பிக்கை

இன்றைக்கு மவ்லிது பற்றிய வாதப்பிரதிவாதங்கள் தமிழகத்தில் விறுவிறுப்படைந்தள்ளன. பல்லாண்டுகாலமாக தமிழகம், கேரளம், இலங்கையில் இரண்டாவது கருத்துக்கு இடமினிறி புனிதமான ஒரு வணக்கமாகக் கருதப்பட்டு வந்த “மவ்லிது” இன்று படாத பாடு படுகின்றது.

மார்க்க அறிஞர்களில் ஒரு பிரிவினர், “மவ்லிது ஓதலாம்! ஓத வேண்டும்!” என்று ஒரு புறம் கூப்பாடு போடுகின்றனர். மார்க்க அறிஞர்களில் மற்றொரு பிரிவினர், “மவ்லிது ஓதக்கூடாது!” என்று எதிர் முழக்கம் செய்கின்றனர். இருதரப்பினமே தங்களின் கருத்துக்கு ஆதாரங்களை எடுத்துவைத்து, அதனை நியாயப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

“இஸ்லாத்தைப் போதிக்கிறேன்” என்று புறப்பட்டுவிட்ட சில பத்திரிக்கைகள் “மவ்லிது ஓதலாம்! ஓத வேண்டும்!” என்று தொடர் கட்டுரைகள் எழுதத் துவங்கி விட்டன.

எந்த உலமாக்களால் மவ்லிது மீது பக்தி ஊட்டப்பட்டதோ, எவர்களால் “மவ்லிது புனிதமானது” என்ற எண்ணம் வளரத் துவங்கியதோ எவர்கள் இன்றளவும் அதற்குத் துணை போய்க்கொண்டிருக்கிறார்களோ அந்த உலமாக்கள் சபை – அதாவது தமிழ் மாநில ஜமாஅத்துல் ஊலமா சபை – தமிழகத்தின் எல்லா அரபிக்கல்லூரிகளுக்கும்” மவ்லிதில் ஆட்சேபனைக்குரிய வாசகங்கள் உண்டா? என்று விளக்கம் கேட்டிருக்கின்றனர். ‘மவ்லிது’ மறுபரிசீலனை செய்யப்படவேண்டிய ஒன்றுதான்” என்ற சிந்தனை உலமாக்களில் பலரிடம் ஏற்பட்டுள்ளது என்பதற்கு இதுவே போதிய சான்றாக அமைந்துள்ளது.

பொது மக்களைப் பொருத்த வரை, அவர்களில் பாமரத்தனத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள விரும்பாதவர்களும், பெண்களின் ஒரு பகுதியினரும், “மவ்லிது ஓதக்கூடாது!” என்போரை இஸ்லாத்திற்கு அப்பாற்பட்டவர்களாகவும், இஸ்லாத்திற்கே எதிரிகளாகவும் கருதுகின்றனர். எனினும் படித்தவர்கள், சிந்தனையாளர்கள் ஓரளவு “மவ்லிது என்பது சிலரது வயிற்றுப்பிழைப்புக்கான கண்டுபிடிப்பு என்ற அளவுக்கு உணரத் துவங்கியுள்ளனர்.

இந்த நிலையில் “மவ்லிது” பற்றி தெளிவாக, மிகவும் விரிவாக, அதுபற்றிய எல்லாவிதமான ஐயங்களையும் நீக்கும் விதமாக – மக்கள் மத்தியில் எடுத்து வைப்பது நமது கடமையாகிறது.

குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் ஆராயும்போது “மவ்லிது என்பது பல தவறான விளைவுகளையே மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது” என்று கருதுகிறோம். “மவ்லிது தோற்றுவிக்கப்பட்ட நோக்கம் சரியானதல்ல. அதில் இடம் பெற்றுள்ள கவிதைகளில் பல இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்க்கின்ற நச்சுக் கருத்துக்களை உள்ளடக்கியதாக உள்ளன. பல பொய்யான கற்பனைகளையே அதிக அளவில் மவ்லிது தன்னகத்தே கொண்டுள்ளது” என்று உறுதியான முடிவுக்கே வரமுடிகின்றது.

மாற்றுத் தரப்பினரின் ஆதாரங்கள்
எனினும், மாற்றுத்தரப்பினர்கள் “மவ்லிது ஓதவேண்டும்! ஓதலாம்! என்பதற்கு எடுத்து வைக்கின்ற ஆதாரங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக எடுத்து வைத்து, அவற்றில் உள்ள பலவீனங்களையும், தெளிவுபடுத்திவிட்டு பின்னர், “மவ்லிது ஏன் ஓதக்கூடாது?” என்பதற்கான ஆதாரங்களை மக்கள் முன்னே வைக்கிறோம். இறுதியாக, “சுப்ஹான மவ்லிது” “முஹ்யித்தீன் மவ்லிது” “ஷாஹுல்ஹமீது மவ்லிது” பெற்றுள்ள இஸ்லாத்திற்கு முரணான கருத்துக்களை அரபி மூலத்துடன் உங்கள் முன்னே வைக்கிறோம். சிந்தனை உள்ள எவரும் தாமாகவே மவ்லிது பற்றி சரியான முடிவுக்கு வரும் அளவுக்கு விளக்க இருக்கிறோம் (இன்ஷா அல்லாஹ்). எதிர் தரப்பினரின் ஆதாரங்களை வரிசையாக அலசுவோம்.

முதலாவது ஆதாரம்
கடந்த காலங்களில் எவ்வளவோ அறிஞர்கள், மகான்கள் வாழ்ந்திருக்கின்றனர். அவர்களெல்லாம் பெரிய ஆலிம்கள், அவர்கள் மவ்லிது மஜ்லிஸில் பக்தியோடு அமர்ந்து ஓதி இருக்கின்றனர்.

இதுதான் எதிர்தரப்பினரின் மிகப்பெரும் அஸ்திரம். எந்தப் பிரச்சனையை சொல்லப் போனாலும் ரெடிமேடாக இதனையே ஆதாரமாக எடுத்து வைக்கின்றனர். பொது மக்கள் மட்டுமின்றி, ஒரு சில ஆலிம்கள் கூட இதனைக் காரணமாகக் காட்டியே, மவ்லிதை நியாயப்படுத்த முயற்சிக்கின்றனர்.

இப்படி நம்புவதற்கு ஒரு முஸ்லிமுக்கு அனுமதி உண்டா? அல்லாஹ்வும் அவனது திருத்துதாதரும் “குருட்டுத் தனமாக பெரியோர்கள் சொன்னார்கள், செய்தார்கள்” என்று நம்பிக்கைக் கொள்வதையும், அதனடிப்படையில் செயல்படுவதையும், அனுமதிக்கின்றார்களா?என்பதை குர்ஆன், நபிவழி மூலம் நாம் ஆராய்வோம்.

நபிமார்களில் பலரிடம் கூறப்பட்டப்பதில்:
முந்தைய நபிமார்கள் சத்தியத்தை எடுத்துரைக்கும் போதெல்லாம் அன்றைய மக்களால் இதே பதில் தான் சொல்லப்பட்டது. இதைச் சொல்லித்தான் தங்களின் தவறான வழிமுறைகளை, சரியானவை என்று நியாயப்படுத்தினர். பிறரையும் நம்பவைத்தனர்.

ஃபிர்அவ்ன் என்ற கொடியவனிடம் சத்தியத்தின் தூதுவரான மூஸா(அலை) அவர்களையும் ஹாரூன்(அலை) அவர்களையும் அனுப்பியபோது, ஃபிர்அவ்னும் அவனது அடிவருடிகளும் இதனையே சொன்னதாக அல்லாஹ்  திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.

“எங்கள் மூதாதையர் எதைச் செய்ய நாங்கள் கண்டோமோ அதிலிருந்து எங்களைத் திருப்பிவிடவும், இந்தப் பூமியில் உங்கள் இருவருக்கும் பெருமையை உண்டாக்கிக் கொள்வதற்குமா நீங்கள் எங்களிடம் வந்தீர்கள்? ஆனால் நாங்கள் எங்கள் முன்னோர்களைத்தான் பின்பற்றுவோமே தவிர உங்களிருவரையும் நம்புபவர்கள் அல்லர்” என்று அவர்கள் (ஃபிர்அவ்னின் கூட்டத்தினர்) கூறினார்கள். (அல்குர்ஆன் 10 : 78)

“ஸமூத்” என்ற பலம் பொருந்திய கூட்டத்தினரிடம் ஸாலிஹ்(அலை) அவர்களை தனது தூதராக அனுப்பி, அவர்கள் உண்மையை எடுத்துரைத்தபோது, ஸமூத் கூட்டத்தினர் இதே பதிலைக் கூறியதாக அல்லாஹ் திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.

“ஸாலிஹே! இதற்கு முன்பு நீ எங்களால் நம்பப்படுபவனாக இருந்தாய்! எங்கள் முன்னோர்கள் எவற்றை வணங்கிக் கொண்டிருந்தனரோ, அவற்றையே நாங்களும் வணங்குவதை நீ தடுக்கின்றாயா? மேலும், (நாங்கள் எங்கள் முன்னோர் வழியில்தான் செல்வோம்)எங்களை எதன் பால் அழைக்கிறாயோ அதில் நாங்கள் மிகப்பெரிய சந்தேகத்திலிருக்கிறோம்” என்று அவர்கள் (ஸமூது கூட்டத்தினர்) கூறினார்கள். (அல்குர்ஆன் 11 : 65)

மிகப்பெரும் நபிமார்களில் ஒருவராகிய இப்ராஹிம்(அலை) அவர்கள் தன் சமூகத்தாரிடம், ஏன் இவற்றை வணங்குகிறீர்கள் என்ற போது அன்றைய காபிர்கள் சொன்னதும் இதனைத்தான்.

“எங்கள் முன்னோரை இவ்வாறே செய்துவர நாங்கள் கண்டோம்” என்று அவர்கள் கூறினார்கள். (அல்குர்ஆன் 26:74)

எல்லா நபிமார்களும் சத்தியத்தை சொன்ன நேரங்களில் இதைச் சொல்லித்தான் சத்தியத்தை அணைத்துவிட முயன்றிருக்கின்றனர் என்பதையும் திருக்குர்ஆனில் அல்லாஹ் தெளிவாக கூறுகிறான்.

நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்படும் போது அவர்கள் “இவர் ஒரு மனிதரேயன்றி வேறில்லை; உங்கள் முன்னோர் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டும் உங்களைத் தடுத்துவிடவே இவர் விரும்புகிறார்” என்று கூறுகிறார்கள். (அல்குர்ஆன் 34: 43)

மேற்கூறப்பட்ட அல்லாஹ்வின் வசனங்களை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள்! இன்றைக்கு மிகப்பெரும் ஆதாரமாக சிலர் கருதிக் கொண்டு எதனைக் கூறுகின்றனரோ, அதனை அன்றே ஃபிர்அவ்னும், ஸமூது கூட்டத்தினரும், ஏன் எல்லாக் காபிர்களும் கூறி இருக்கின்றனர் என்பதை மேற்கூறிய திருவசனங்கள் நமக்கு நன்றாக விளக்குகின்றன.

நபி(ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த மக்கத்துக் காபிர்களும், இந்தப் பதிலை ஆயுதமாகப் பயன்படுத்தித்தான் சத்தியத்தின் குரல்வளையை நெறிக்க முற்பட்டனர். இதைச் சொல்லியே அவர்கள் இஸ்லாத்தின் பால் வெறுப்பை ஏற்படுத்திக் கொண்டனர். இதனை அல்லாஹ் தன் திருக்குர்ஆனில் பல இடங்களில் நமக்கு எடுத்துச் சொல்கிறான். அவற்றில் சில வசனங்களைக் கீழே காண்போம்.

“அல்லாஹ் இறக்கி வைத்த இந்த வேதத்தைப் பின்பற்றுங்கள்!” என்று அவர்களிடம் கூறப்படும்போது அவர்கள்; அப்படியல்ல, எங்களுடைய முன்னோர்கள் எந்த வழியில் நடக்கக் கண்டோமோ அந்த வழியையே நாங்களும் பின் பற்றுவோம் என்று கூறுகின்றனர். (அல்குர்ஆன் 2:170, 31:21)

“அல்லாஹ் இறக்கிவைத்த (இந்தவேதத்)தையும், இந்தத் தூதரையும் நோக்கி வாருங்கள்!” என்று அவர்களிடம் கூறப்படும்போது , “எங்கள் முன்னோரை எதில் கண்டோமே அதுவே எங்களுக்குப் போதுமானது” என்று அவர்கள் கூறுகிறார்கள். (அல்குர்ஆன் 5 :104)

அவர்கள் (காபிர்கள்) வெறுக்கத்தக்கவைகளைச் செய்யும் போது, (அதனை நியாயப்படுத்திட) “இவ்வாறே எங்கள் முன்னோர்கள் செய்யக் கண்டோம். மேலும் அல்லாஹ் எங்களுக்கு இதனை ஏவி இருக்கிறான்” என்கின்றனர். (அல்குர்ஆன் 7:28)

“எங்கள் முன்னோர்களை ஒரு மார்க்கத்தில் கண்டோம். நிச்சயமாக நாங்களும் அவர்களின் அடிச்சுவட்டிலேயே செல்வார்கள்” என்று அவர்கள் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 43 : 22)

மேலே நாம் எடுத்துக் காட்டிய திருக்குர்ஆன் வசனங்கள் மூலம், இன்றைக்கு மிகப்பெரும் ஆதாரமாக எடுத்து வைப்பவை அன்றைக்கு காபிர்கள் எடுத்து வைத்த வாதமேயன்றி வேறில்லை.

யூத, கிறித்துவர் வழி தவறிய காரணம்
யூதர்களும், கிறித்தவர்களும் அல்லாஹ்விடமிருந்து வேதங்கள் கொடுக்கப்பட்டிடிருந்தனர். அந்த வேதங்கள் அவர்களுக்கு சரியான வழி காட்டிட போதுமானவைகளாக இருந்தும், அவர்கள் வழி கெட்டதற்கான காரணம் இந்த தவறான வாதம் தான். திருக்குர்ஆன் மிக அழகாக இதனைச் சொல்லி காட்டுகின்றது.

வேதமுடையவர்களே! தவ்ராத்தையும், இஞ்சீலையும், உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையும் நிலைநாட்டும் வரை, நீங்கள் எதிலும் சேர்ந்தவர்களில்லை” என்று (நபியே) நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் 5 : 68)

அவர்களிடம் வேதங்களிலிருந்தும், அதனை அவர்கள் நிலைநாட்டாமல். அதன்வழி செல்லாமல், முன்னோர் வழி என்று கண்முடிச் சென்றதே அவர்கள் வழி கெட்டுப் போனதற்கான காரணமாகும். அதனால்தான் யூத, கிறித்தவர்களிடம் நேரடியாக பின்வருமாறு சொல்லி விடும்படி தனது தாதர்(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் உத்தரவிடுகிறான்.

வேதமுடையவர்களே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில், ஆதாரமற்றவைகளைக்(கூறி) வரம்பு மீறாதீர்கள்! (உங்களுக்கு) முன்னர், தாங்களும் வழி கெட்டுப் பிறரையும் வழிகெடுத்த கூட்டத்தினரின் மனோ இச்சைகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்!” என்று (நபியே) நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் 5 : 77)

தாங்களும் வழி கெட்டுப் பிறரையும் வழி கெடுத்து விட்ட முன்னோர்களைப் பின்பற்ற வேண்டாம் என்று வேதமுடையோருக்கு அல்லாஹ் உணர்த்துகின்றான்.

“நீங்கள் செய்கின்ற காரியங்களுக்கு குர்ஆனிலிருந்தும், ஹதீஸ்களிலிருந்தும் ஆதாரம் காட்டுங்கள்!” என்று நாம் அவர்களிடம் கூறும்போது “முன்னோர்கள் சொன்னார்கள்” என்று பல்லவியைப் பாடுகின்றனரே, அப்படியானால் முன்னோர்கள்தான் இவர்களுக்கு சட்டமியற்றும் அதிகாரம் படைத்த இறைவனா? முன்னோர்கள்தான் இவர்களுக்கு இறைதூதர்களா? யூத, கிறித்தவ சமுதாயம் தான் தங்கள் முன்னோர்களைப்பற்றி , மத குருமார்களைப் பற்றி இத்தகைய நம்பிக்கை வைத்திருந்தனர். அதனால் வழி தவறினர் என்பதை அல்லாஹ் தெளிவாகச் சொல்லி காட்டுகிறான்.

“அவர்கள் தங்களின் பாதிரிளையும், மத குருமார்களையும் கடவுள்களாக ஆக்கிக் கொண்டனர்”. (அல்குர்ஆன் 9 : 31)

இந்தத் திருவசனத்திற்கு விளக்கம் தரப் புகுந்த அலலாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், மத குருக்கள் ஒன்றைக் “கூடும்” என்றால் அதனைக் கூடும் என்று கருதுவதும், ஒன்றை மதகுருக்கள் “கூடாது” என்றால் கூடாது என்று கருதிக் கொள்வதும், அவர்களைக் கடவுள்களாக ஆக்கியதாகும்” என்றனர். அறிவிப்பவர் : அதீ இப்னு ஹாதம்(ரழி) நூல் : அஹ்மத்

மார்க்கத்தில் ஒன்றை ஆகுமானது என்று ஆக்கவும், வேறொன்றை ஆகாது என்று தடுக்கவும் அல்லாஹ்வுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. அல்லாஹ்வின் அனுமதியோடு அல்லாஹ்வின் தூதருக்கும் உரிமையுண்டு. வேறு எவரும் ஒரு காரியத்தை நம்மீது கடமையாக்க அல்லது ஹராமாக்க (தடை செய்ய) அதிகாரம் படைத்தவர்கள் அல்ல. அவ்வாறு அதிகாரம் இருப்பதாக நம்புவது அவர்களை வணங்கியதற்கு நிகராகும். இதைத்தான் முன்பு வேதம் கொடுக்கப்பட்டவர்கள் செய்தனர். அல்லாஹ்வின் கோபத்திற்கும் ஆளாயினர்.

எந்த முன்னோராக இருந்தாலும் குர்ஆன் ஹதீஸ்களுக்கு ஒத்திருப்பவைகளை மட்டுமே ஏற்க வேண்டும். மற்றபடி “முன்னோர்கள் சொன்னார்கள்” என்ற பதில் அந்த வல்ல நாயனின் விசாரணை மன்றத்தில் எடுபடாது. இறைவனால் ஏற்கவும் படாது. திருக்குர்ஆனில் அல்லாஹ் அதனைத் தெளிவாகச் சொல்கிறான்.

“யாரைப் பின்பற்றினார்களோ அந்தத் தலைவர்கள் நம்மைப் பின்பற்றியோரைக் கைவிட்டு விடுவார்கள். இன்னும் அவர்கள் வேதனையைக் காண்பார்கள். அவர்களிடையே இருந்த தொடர்புகள் யாவும் அறு பட்டுவிடும். (அல்குர்ஆன் 2 : 166)

இந்தத் திருவசனம் முன்னோர்களைக் கண்மூடிப் பின்பற்றி, நடந்தவர்கள் மறுமையில் தப்ப முடியாது என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி தெரிவித்து விடுகின்றது. மேலும் எவர்களைப் பின்பற்றி வழிகெட்டனரோஈ அவர்கள் மீதே மறுமையில் பழியைப் போடவும் இவர்கள் துணிவார்கள். அல்லாஹ் கூறுகிறான்.

நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்த நாளில் “ஓ, கைசேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே! இந்த தூதருக்கும் வழிப்பட்டிருக்க வேண்டுமே! என்று கூறுவார்கள். “எங்கள் இறைவா நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும் எங்கள் பெரியோர்களுக்கும் வழிப்பட்டோம். அவர்கள்எங்களை வழிகெடுத்து விட்டார்கள்” என்றும் அவர்கள் கூறுவார்கள். “எங்கள் இறைவா! (நாங்கள் வழி கெடுவதற்கு காரணமாக இருந்த) அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக! மேலும் அவர்களைப் பெருஞ்சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக! (என்றும் கூறுவர்). (அல்குர்ஆன் 33 : 66, 67, 68)

மேலே நாம் எடுத்துக் காட்டியுள்ள மூன்று வசனங்களையும் பலமுறை ஆம்ந்த சிந்தனையுடன் படித்துப் பாருங்கள்! மறுமை வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டதுதான், ஒரு முஸ்லிம் இந்த உலகில் வாழ்கிறான், வாழ வேண்டும். அந்த மறுமை வாழ்வு பாழாவதற்கு மூல காரணம் முன்னோர்களைக் கண்மூடிப் பின்பற்றுவதுதான். எனவே “காலம் காலமாக முன்னோர்கள், பெரியோர்கள் செய்து வந்தார்கள்” என்ற கூற்று அர்த்தமற்றது என்பதை நபிவழியிலும் ஆதாரம் இருந்தால் அதனை நாம் ஏற்க வேண்டும் இல்லை எனில் அதனைத் தூக்கி எறிந்து விட வேண்டும்.        (வளரும்)

 

இப்னு மர்யம்

{ 2 comments }

mohamed hamdan January 13, 2013 at 8:40 pm

RIGHT TIME TO POST THANKS

basheer January 15, 2013 at 10:18 pm

Dear Brothers….Please copy this article and try to send many brothers and sisters….InshaAllah

Comments on this entry are closed.

Previous post:

Next post: