உணரப்படாத தீமை: வட்டி

in சமூகம்

இன்றைய உலகில் பணம் அதிகமாக சேர்க்கவேண்டும் என்ற பேராசையால் பல தீமைகள் மனித வர்க்கத்தால் தீமை என்றே உணரப்படவில்லை. இவற்றில் சினிமா, வட்டி, வரதட்சனை போன்றவை முதலிடம் வகிக்கின்றன. இன்னும் சில தீமைகள் தீமை என்று தெளிவாக அறிந்தும் பணத்தின் மீதுள்ள பேராசையால் அரசாங்கமே அத்தீமைகளை அங்கீகாரம் செய்துள்ளது. அவற்றுள் முக்கியமானவை லாட்டரி, குதிரைப் பந்தயம், விபச்சாரம், குடி போன்றவையாகும். இத்தகைய அரசாங்கத்திற்கு சமூக நலனைவிட பணமே பெரிதாகத் தெரிகின்றது.

    தனி மனிதன் சூதாட்டத்தில் ஈடுபட்டால் அது குற்றம், ஆனால் அரசாங்கமே அதை லாட்டரி, குதிரைப் பந்தயம் என்ற பெயரில் செய்தால் அது குற்றமில்லை. இரட்டை வேடம் குளறுபடி ஆகியவற்றின் மொத்த உருவமே இன்றைய அரசாங்கம்.

    அரசாங்கமும் தனிமனிதனும்  வட்டியை ஒரு தீமையாகவே கருதுவதில்லை. ஆனால் சமுதாயத்தில் இது எவ்வளவு பெரிய சுயநலவாதிகளையும், பேராசைக்காரர்களையும், சகோதர மனப்பான்மை அற்றவர்களையும், பொருளாதார வீழ்ச்சியையும் உருவாக்குகிறது என்பதை யாரும் உணருவதில்லை ஏன்? அரசாங்கத்திற்கும் இது மிகப்பெரிய இழப்பாகும்.

    இத்தகைய சமுதாயத் தீமையாகிய வட்டியை விட்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்கள் விலகாமல் இருப்பது மிகவும் வேதனைக்குறியதே. இதற்கு முக்கிய காரணம் பலர் இதை ஒரு பெரும் பாவமாகக் கருதவில்லை என்பதேயாகும். ஆனால் இறைமறையும், நபி மொழியும் இதை மிகப்பெரும் பாவமாகக் கருதி மனித குலத்தை எச்சரிப்பதை பாருங்கள்.

    ஒட்டுமொத்தமாக எல்லா வட்டியும் ஹராம் என்று கூறும் வசனம்:

         يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ لاَ تَأْكُلُواْ الرِّبَا أَضْعَافًا مُّضَاعَفَةً وَاتَّقُواْ اللّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

    ஈமான் கொண்டோரை! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக்கொண்டால்) வெற்றியடைவீர்கள். (3:130)

    الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لاَ يَقُومُونَ إِلاَّ كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ذَلِكَ بِأَنَّهُمْ قَالُواْ إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبَا وَأَحَلَّ اللّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا فَمَن جَاءهُ مَوْعِظَةٌ مِّن رَّبِّهِ فَانتَهَىَ فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللّهِ وَمَنْ عَادَ فَأُوْلَـئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ

   யார் வட்டி(வாங்கித்) தின்றார்களோ, அவர்கள் (மறுமையில்)  ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல்  (வேறுவிதமாய்)  எழமாட்டார்கள்;  இதற்குக் காரணம் அவர்கள், “நிச்சயமாக வியாபாரம் வட்டியைத் போன்றதே” என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்; ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது  என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின்பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும்  தங்கிவிடுவார்கள். (2:275)

    يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ اتَّقُواْ اللّهَ وَذَرُواْ مَا بَقِيَ مِنَ الرِّبَا إِن كُنتُم مُّؤْمِنِينَ   ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையான மூஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டுவிடுங்கள். (2:278)

    فَإِن لَّمْ تَفْعَلُواْ فَأْذَنُواْ بِحَرْبٍ مِّنَ اللّهِ وَرَسُولِهِ وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُؤُوسُ أَمْوَالِكُمْ لاَ تَظْلِمُونَ وَلاَ تُظْلَمُونَ

    இவ்வாறு நீங்கள் செய்யவில்லையென்றால் அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது. நீங்கள் தவ்பா (இப்பாவத்திலிருந்து) மீண்டுவிட்டால், உங்கள் பொருள்களின் அசல்-முதல் உங்களுக்குண்டு. (கடன்பட்டோருக்கு) நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள்- நீங்களும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள். (2:279)

    உண்மை முஸ்லிம் அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் போர் புரிய துணிவானா என்பதை வட்டி தொழில் செய்யும் முஸ்லிம்கள் உணர்வார்களா? உணர்ந்து விட்டால் அவர்களைப் பார்த்து அல்லாஹ் கூறுகிறான்: நீங்கள் தவ்பா (இப்பாவத்திலிருந்து) மீண்டுவிட்டால், உங்கள் பொருள்களின் அசல்-முதல் உங்களுக்குண்டு. (கடன்பட்டோருக்கு) நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள்- நீங்களும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்.

    மேலும் பலர் வட்டியும், வியாபரமும் ஒன்றுதான் என்றும் திருமறையில் வட்டியைப்பற்றி கூறிய வசனம் இக்காலத்திற்கு பொருந்தாது. அது அன்றைய நிலையில் உள்ள கொடும் வட்டியைத்தான் குறிக்கும். அதுவும் இரட்டிப்பு (கூட்டு) வட்டிதான் தடை செய்யப்பட்டுள்ளது என்று பணத்தின் மீது கொண்ட பேராசையால் தாமாகவே தாம் செய்யும் தவறுகளை நியாயப்படுத்திக் கொள்கின்றனர். இன்னும் சிலர் வட்டி வாங்குவது தான் பாவம். கொடுப்பது பாவமில்லை என்றும் வட்டியை அடிப்படையாகக் கொண்ட வங்கியில் வேலை செய்வது கூடும் என்றெல்லாம் கருதுகின்றனர்.

    வட்டி வங்குவது, வட்டி கொடுப்பது, வட்டிக் கணக்கை எழுதுவது வட்டியின் சாட்சிகள் ஆகியோரை நபி(ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள். அவர்கள் அனைவரும் பாவத்தில் சமமானவரே. அறிவிப்பாளர்: ஜாபிர்(ரழி) ஆதாரம்: முஸ்லிம், திர்மிதீ, முஸ்னத் அஹ்மத்

    இறைவன்  நான்கு பேர்களை  சுவர்க்கத்திற்கோ  அல்லது  அதனுடைய  சுகத்தை  அனுபவிப்பதற்கோ விட மாட்டான். அவர்கள்

1.  குடிப்பதை வழமையாகக் கொண்டவர்கள்.

2. வட்டி வாங்கித் தின்றவர்கள்.

3. அநாதைகளின் சொத்தை அநியாயமாக அபகரித்தவர்கள்.

4. பெற்றோரைத் துன்புறுத்தியவர்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரழி) ஆதாரம்: ஹாக்கிம்)

    வட்டி என்றால் என்ன?

    بِالْبَيِّنَاتِ وَالزُّبُرِ وَأَنزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ   

    தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும் மனிதர்களுக்கு அருளப்பட்டதை (நபியே!) நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம். (16:44)

    மேலே உள்ள இறைவசனத்தின் மூலம் குர்ஆனில் வரும் வட்டிக்கு விளக்கம் தர அங்கீகாரம் பெற்ற நபி(ஸல்) அவர்கள் அதைப்பற்றி கூறுவதை கீழே காண்போம். பலவித கொடுக்கல் வாங்கலில்  நபி(ஸல்) அவர்கள் இவையெல்லாம் கூடும், இவையெல்லாம் வட்டி (ஹராம்) கூடாது என்று கூறியுள்ளதால் குறுகிய கண்ணோட்டத்தில் அணுகாமல் எல்லா ஹதீஸ்களையும் கருத்தில் கொண்டு அதைப்பற்றி அறிய முற்படவேண்டும்.

     வட்டி எல்லாம் தவணை முறையில்தான். கைக்குகை மாற்றும் பொருட்களில் வட்டி இல்லை. (உஸாமத்துபின் ஜைத் (ரழ) நூல்: புகாரி, முஸ்லிம்

    தங்கத்தை தங்கத்திற்கு பதிலாகவும், வெள்ளியை வெள்ளிக்கு பதிலாகவும், மணிக்கோதுமையை மணிக்கோதுமைக்கு பதிலாகவும்,  தொலிக்கோதுமையை  தொலிக்கோதுமைக்கு பதிலாகவும், பேரிச்சம் பழத்தை பேரிச்சம் பழத்திற்கு பதிலாகவும், உப்பை உப்பிற்கு பதிலாகவும் சம எடையில், சம தரத்தில், கரத்திற்கு கரம் விற்றுக்கொள்ளுங்கள். இவ்வினங்கள்  பேதப்படுமானால் கரத்திற்கு கரம் நீங்கள் விரும்பிய பிரகாரம் விற்றுக் கொள்ளுங்கள். எவர் கூடுதலாகக் கொடுக்கவோ அல்லது கூடுதலாக வாங்கவோ செய்த போதினும் அது வட்டியாகும். விற்பவரும் வாங்குபவரும் சமமானவரே. (உபாதாத்துப்னிஸ்ஸாமித் நூல்: முஸ்லிம், திர்மிதி)

    நபி (ஸல்) அவர்களிடம் பிலால் (ரழி) அவர்கள் பர்னீ வகையைச் சார்ந்த பேரீச்சம் பழத்தை கொண்டு வந்தனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் இது உமக்கு எங்கிருந்து கிடைத்தது? என்று வினவினர். அதற்கு அவர்கள் என்னிடம் தரத்தில் குறைந்த பேரிச்சம் பழம் இருந்தது. அதில் நான் இரண்டு மரக்கால் கொடுத்துவிட்டு அதற்கு பகரமாக ஒரு மரக்கால் பர்னீ பேரிச்சம்பழம் வாங்கினேன் என்றார்கள். அப்பொழுது நபி(ஸல்) அவர்கள் ஆ! இது வெளிப்படையான வட்டி முழுக்க முழுக்க வட்டி, இவ்வாறு செய்யாதீர், இவ்வாறு நீர் செய்ய நாடினால் முதலில் (உமது) பேரிச்சம் பழத்தை விற்றுவிட்டு பின்னர் இதனை வாங்கிக் கொள்வீராக! என்று கூறினார்கள். (அபூ ஸயீது  நூல்: புகாரி, முஸ்லிம், முஸ்னத் அஹ்மத்)

    நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக வட்டிப் பொருள் வளர்ந்த போதிலும், உண்மையில் அதன் இறுதிப் பலன் நாசம்தான். (இப்னுமஸ்ஊத் (ரழி). திர்மிதி, நஸயீ)

    வட்டித்தொழில் செய்து சாப்பிட்டவர் மறுமையில் தட்டழிந்து தடுமாறும் பைத்தியக்காரராகவே எழுப்பப்படுவார். (இப்னு அப்பாஸ் (ரழி). இப்னு அபீஹாத்திம் )

    நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களுக்கு ஒரு காலம் வரும். அக்காலத்தவர் தமது சம்பாத்தியம் ஹலாலானதா? ஹராமானதா? முறையானதா? முறையற்றதா? என்பனவற்றைப் பொருட்படுத்தாது இருப்பர். (அபூஹுரைரா (ரழி) புகாரி)

    வட்டி வாங்குபவரையும் வட்டி கொடுப்பவரையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள். (அறிவிப்பவர்: இப்னுமஸ்வூத்(ரழி) ஆதாரம்:முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ

    மக்கள் மீது நிச்சயமாக ஒரு காலம் வரும். அக்காலத்தில் வட்டி உண்பவனைத் தவிர வேறெவரும் இருக்கமாட்டார்கள். அவ்விதம் வட்டி உண்ணாதிருப்பவர்மீது வட்டி உண்பவரின் மூச்சாவது படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) ஆதாரம்: அபூதாவூத், நஸயீ

    இத்தகைய பெரும்பாவமான வட்டியிலுருந்து விலகி இன்றைய உலகில் நாம் வாழமுடியாது. அப்படி வாழமுற்பட்டால் நாமும்  நமது சமுதாயமும் மிகப்பெரும் பொருளாதர  வீழ்ச்சியை சந்திக்க நேரிடும் என்று அஞ்சவேண்டியதில்லை. ஏனெனில் அல்லாஹ்வும் அவனது தூதரின் வாக்கும் எக்காலத்திலும் பொய்யாகாது.

يَمْحَقُ اللّهُ الْرِّبَا وَيُرْبِي الصَّدَقَاتِ  அல்லாஹ் வட்டியை (எந்த பரகத்தும் இல்லாமல்) அழித்து விடுவான். இன்னும் தான தர்மங்களை பெருகச் செய்வான். (2:276)

    நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: இறைவன் எனது உள்ளத்தில் போட்டான். நிச்சயமாக எந்த நபரும் அவரது ரிஜ்கு முடியாதவரை ஒருபோதும் மரணிக்க  முடியாது. ஆகவே, அல்லாஹ்வை பயந்து ரிஜ்கை சம்பாதிக்கும் வகையில் ஹலாலான (ஆகுமான) சிறந்த முறையைக் கடைபிடிப்பீர்களாக! (இப்னுமஸ்வூத்(ரழி) நூல்: பைஹகீ, ஸ்ரஹுஸ்ஸுன்னா)

    எனவே நாம் எவ்வளவு அதிகமாக கஷ்டப்பட்டு உழைத்தாலும், இறைவனால் நமக்கு அளித்த ரிஜ்க்கு மேல் அடைய முடியாது. அடையுமுன் யாரும் மரணிக்க முடியாது. ஆகவே வட்டி என்ற ஹராமை தவிர்த்து ஹலாலான வழியிலேயே முயற்சி செய்வோம். நமக்குள்ள ரிஜ்க்கு நம்மை வந்தே அடையும் என்ற நபி(ஸல்) அவர்களின் வார்த்தையில் உறுதிகொண்டு உழைப்போமாக.

 அப்துல்லாஹ்
 

{ 2 comments… read them below or add one }

ksbatcha November 19, 2010 at 1:51 pm

asslamu allikum
good collection what about bank interstpl pl mail me

bank intrest hallal or haram.mail me

Reply

ReadIslam.net November 19, 2010 at 9:15 pm

Assalamu Alalikum Wa Rahmatullahi Wa Barakatuh
click here to get answer
http://www.islam-qa.com/en/search2/riba/AllWords/t,q,a

Reply

Cancel reply

Leave a Comment

Previous post:

Next post: