இஸ்லாமிய மாதங்களை ஆரம்பிப்பது எப்படி?

Post image for இஸ்லாமிய மாதங்களை ஆரம்பிப்பது எப்படி?

in சந்திர நாட்காட்டி

“நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும்  அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை; இது தான் நேரான மார்க்கமாகும்……” அல்குர்ஆன் 9:36.

தற்போது உலகில் இஸ்லாமியர்கள் என்று கூறுபவர்களில் பலர் மாதங்களை எந்தெந்த முறையில் ஆரம்பிக்கிறார்கள் என்பதையும் அறிய கடமைப்பட்டுள்ளோம்.

1. பிறையை புறக்கண்ணால் கண்டால் அதற்கு அடுத்த நாள் முதல் நாள் என ஒருசாரார் மாதங்களை ஆரம்பிக்கிறார்கள்.

2. பிறையை 29 நாள் புறக்கண்ணால் பார்க்க வேண்டும் அப்படி பார்க்க முடியவில்லை என்றால் அந்த மாதத்தை 30 நாட்களாக பூர்த்தி செய்து அடுத்த மாதத்தை ஆரம்பிக்க வேண்டும் என கூறி ஒரு சாரார் மாதங்களை ஆரம்பித்து வருகிறார்கள்.

3. எந்த ஊரில் புறக்கண்ணால் பிறை பார்க்கப்பட்டதோ அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் மட்டும் அதற்கு அடுத்த நாளை முதல் நாளாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என ஒரு சாரார் கூறி மாதங்களை ஆரம்பிக்கிறார்கள்.

4. எந்த ஊரில் பிறை புறக்கண்ணால் பார்க்கப்பட்டதோ அந்த ஊரிலிருந்து குறிப்பிட்ட கிலோ மீட்டர் சுற்றளவுள்ள பகுதி மக்கள் மட்டும் அடுத்த நாளை முதல் நாளாக அறிவிக்க வேண்டும் என ஒரு சாரார் கூறி மாதங்களை ஆரம்பித்து வருகிறார்கள்.

5. ஒரு ஊரில் சூரிய அஸ்தமத்திற்கு பின் ஒரு சில நிமிடங்கள் தாமதமாக சந்திர அஸ்தமனம் ஏற்பட்டு அது புறக்கண்ணுக்கு தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் அந்த ஊர்காரர்கள் அனைவரும் அடுத்த நாளை புதிய மாதத்தின் முதல் நாளாக எடுத்துக்கொள்ளலாம் என ஒரு சாரார் கூறி மாதங்களைஆரம்பித்து வருகிறார்கள்.

6. ஒரு சாரார் சவூதி அரேபியாவில் உள்ள மக்கா நகரில் சூரிய அஸ்தமத்திற்கு பின் ஒரு சில நிமிடங்கள் தாமதமாக சந்திர அஸ்தமனம் ஏற்பட்டு அது புறக்கண்ணுக்கு தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் அடுத்த நாள் புதிய மாதத்தின் முதல் நாளாக எடுத்துக்கொள்ள வேண்டும் என மாதங்களை ஆரம்பித்து வருகிறார்கள்.

7. சூரியன் சந்திரன் பூமி நேர்கோட்டிற்கு வரும் நிகழ்வு (The geocentric conjunction occurs before Sunset) சவூதி அரேபியாவின் சூரிய அஸ்தமனத்திற்கு முன் ஏற்பட்டடு, சவூதி அரேபியாவின் சூரிய அஸ்தமனத்திற்கு பின் ஒரு சில நிமிடங்கள் தாமதமாக சந்திர அஸ்தமனம் (The Moon sets after the Sun) ஏற்பட்டால் அதற்கு அடுத்த நாள் சந்திர மாதத்தின் புதிய நாள் என ஹிஜ்ரி 1423 ஆம் வருடம் முதல் சவூதி அரசாங்கம் பின்பற்றி வரும் முறையாகும்.

8. ஒரு சாரார் சவூதி அரேபியா அரசாங்கம் என்று ரமளான் மாதத்தையும் ஹஜ் மாதத்தையும் அறிவிக்கிறதோ அன்றைய தினம் உலக முஸ்லீம்கள் அனைவரும் மாதத்தை ஆரம்பிக்க வேண்டும் என கூறி சவூதி அரேபியாவை பின்பற்றி வருகிறார்கள்.

9. ஒரு சாரார் சந்திரனின் தேய்ந்து வளரும் நிலைகளை அறிந்து மாதங்களை கணக்கிட்டு அதன் அடிப்படையில் தான் ஒவ்வொரு இஸ்லாமிய மாதத்தையும் ஆரம்பிக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.

10. ஒரு சாரார் அவர்களுடைய நாட்டில் ஃபஜ்ர் நேரத்திற்கு முன் சூரியன் சந்திரன் பூமி நேர்கோட்டிற்கு வரும் நிகழ்வு (அமாவாசை அல்லது geocentric Conjunction occurs before Dawn)நடைபெற்றால் ஃபஜ்ருக்கு பிறகு ஆரம்பிக்கும் நாள் மாதத்தின் முதல் நாள் என முடிவு செய்து பின்பற்றி வருகிறார்கள். லிபியா போன்ற அரபு நாடுகள் இந்த முறையை பின்பற்றி வருகிறார்கள்.

இதில் எந்த சாராரின் கூற்று அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் காட்டித்தந்த அடிப்படையில் உள்ளது என்பதை நாம் சிந்தித்து ஆராய்ந்து பின்பற்ற கடமைப்பட்டுள்ளோம்.

முஸ்லீம்களே! இஸ்லாம் என்பது அறிவுப்பூர்வமான மார்க்கம். நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான கருத்துகள் நிறைந்த மார்க்கம். தன்னை பின்பற்றுபவர்கள் அவனுக்கு இணை வைப்பதையோ,அவனுடைய கட்டளைகளை நிராகரிப்பதையோ அல்லாஹ் திருக்குர்ஆனில் வன்மையாக எச்சரித்துள்ளான். அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் காட்டித்தராத எச்செயல்களையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்ளமாட்டான் என்பது முஸ்லீம்களாகிய நாம் அறிந்த ஒன்று தான்.

முஸ்லீம்களாகிய நாம் முக்கியமான மேற்கண்ட விஷயங்களை கவனத்தில் கொண்டு இஸ்லாமிய அடிப்படையில் மாதங்களை துவக்குவது பற்றி ஆராய கடமைப்பட்டுள்ளோம். முதலில் சந்திரன் மாதங்கள் பற்றிய முக்கிய திருக்குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் நாம் ஆராய்ந்து பார்க்க கடமைப்பட்டுள்ளோம்.

பிறையை பற்றி நாம் கீழ்கண்ட வினாக்களுக்கு முதலில் பதில் காண வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்.

1. நபி(ஸல்) அவர்கள் பிறையை எப்படி பார்க்க சொன்னார்கள்?

2. பிறை எப்போது கண்ணால் பார்க்கிறோமோ அதற்கு அடுத்த நாள் முதல் நாள் என்று முடிவு செய்துக்கொள்ள சொன்னார்களா?

3. பிறையை பார்க்க சொன்ன நபி(ஸல்) அவர்கள் எப்போதாவது 29 நாள் மஃக்ரிபில் நின்று சஹாபாக்களுடன் பிறை பார்த்தார்கள் என்பதற்கு ஏதாவது ஒரு ஹதீஸை ஆதாரம் காட்ட முடியுமா? தற்போது எந்த ஹதீஸின் அடிப்படையில் மஃக்ரிபில் நின்று பிறை பார்க்கிறார்கள்?

4. ஹிலால் என்ற வார்த்தை பிறையின் படித்தரங்களை பார்ப்பதற்காக சொல்லப்பட்ட வார்த்தையா அல்லது கண்ணால் சந்திரனை பார்த்தால் அதற்கு அடுத்த நாள் முதல் என்பதற்காக சொல்லப்பட்ட வார்த்தையா?

5. பிறையை புறக்கண்ணால் பார்த்து தான் மாதத்தை முடிவு செய்ய நபி(ஸல்) அவர்கள் கூறியதாக கூறுபவர்கள், நபி(ஸல்) தங்கள் வாழ்நாளில் எப்படி பிறை பார்த்தார்கள் அல்லது எப்படி பார்க்க சொன்னார்கள் என்ற ஆதாரத்தை ஏன் சமர்ப்பிக்க மறுக்கிறார்கள் ?

உதாரணமாக தற்போது இவர்களாகவே ஒரு நாளை மாதத்தின் 29 வது நாள் என கூறிகொண்டு அன்று மஃக்ரிப் தொழுகையையும் விட்டு விட்டு பிறையை மேற்கு பக்கம் பார்க்க முயற்சி செய்கிறார்கள். இப்படி 29 வது நாள் மஃக்ரிபிற்கு பிறகு மேற்கு பக்கம் பிறை பார்க்க நபி(ஸல்) அவர்கள் கற்றுக்கொடுத்ததாக ஓரு ஹதீஸையாவது மக்களுக்கு எடுத்து சொல்லியிருக்கிறார்களா?

6. பிறையை கணக்கிடுவது இஸ்லாமிய அடிப்படைக்கு முரணாணது. விஞ்ஞான அடிப்படையில் பிறையை கணக்கிடக் கூடாது என்று கூறுபவர்கள் பிறை விஷயத்தில் எந்த வித விஞ்ஞான கருத்தையும் கூறாமல் வாய் மூடி மவுனியாக இருந்து பிறையை புறக்கண்ணால் பார்த்து முடிவு செய்து விட்டு போகாமல் ஏன் கணக்கிட்டு முடிவு செய்பவர்களிடம் வம்பு சண்டைக்கு வருகிறார்கள்? கணக்கு கூடாது என்று கூறும் அவர்கள், ஒரு சாரார் கணக்கிட்டு நாட்களை ஆரம்பிக்கும் போது இன்றைய தினம் சூரிய அஸ்தமனத்திற்கு பின் பிறை உலகில் எங்குமே இருக்காது என விஞ்ஞானம் கூறுகிறது என விஞ்ஞானிகளை அழைத்து டி.வியில் பேட்டி எடுக்க வேண்டிய அவசியம் ஏன்?

7. மக்கள் முடிவு செய்வது தான் நோன்பு, மக்கள் முடிவு செய்வது தான் பெருநாள் என கூறி வருபவர்கள், ஒரு கூட்டத்தார் கணக்கின் அடிப்படையில் முடிவு செய்யும் போது அதை ஏன் கிண்டலும் கேலியும் செய்து வருகிறார்கள் ?

8. உலகத்திற்கே வழி காட்ட வந்த மார்க்கம் இஸ்லாம் (Universal way of life) என முஸ்லீம்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். ஆனால் இவர்களுக்கு அல்லாஹ் தந்த மார்க்கத்தில் (தீனில் Law of Allah) ஒரு நாட்காட்டியை (Calendar) எதை வைத்து, எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதை பற்றி சொல்லாமல் விடப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கும் உலக முஸ்லீம்கள் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள்.

9. ஒரு சில அறிஞர்கள், உலகின் இஸ்லாமிய நாட்காட்டியை கொண்டு நாட்களை கணக்கிடும் முறையே கிடையாது. ஏனென்றால் ஒவ்வொரு மாதமும் பிறையை கண்ணால் பார்க்கப்பட்டால் தான் மாதம் ஆரம்பிக்கும். அப்படி என்றால் எப்படி முன் கூட்டியே நாட்காட்டி (Calendar) போடமுடியும்? ஏன்ற கேள்வியை எழுப்பி மக்களுக்கு இஸ்லாமிய மார்க்கத்தில் நாட்காட்டி என்று ஒன்று கிடையாது என கூறி வருகிறார்கள். மேலும் ஒவ்வொரு ஊருக்கும் வித்தியாசமான நாட்களில் தான் பிறை கண்ணுக்கு தெரியும் அதனால் ஒவ்வொரு ஊருக்கும் வித்தியாசமான கிழமைகளில் தான் இஸ்லாமிய அடிப்பபடையில் மாதம் ஆரம்பிக்கும். அப்படிதான் இஸ்லாம் காட்டித்தந்துள்ளது. வித்தியாசமான நேரங்களில் தொழுகைகளை தொழுகிறோம் தானே அதைபோல் தான் இதுவும் என கூறுபவர்களும் அல்லாஹ்விடம் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளார்கள்? வித்தியாசமான நாட்களில் 1428வது வருடத்தின் ரமளான் மாதம் உலகில் ஆரம்பிக்கபட்டுள்ளது எந்ததெந்த நாடுகள் ஆரம்பித்துள்ளார்கள் என்பதற்கு ஒரு சில ஆதாரங்கள்.

OFFICIAL 1st Day of Ramadan in Different Countries. Wednesday, September 12, 2007: Libya (Conjunction before dawn), Nigeria Supreme Council of Islamic Affairs (Claims of sighting/Calculations), China (and on Thursday). Thursday, September 13, 2007: Saudi Arabia South Africa. Friday, September 14, 2006: Bangladesh India Pakistan.

10. மொத்தத்தில் அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் சம்மந்தம் இல்லை என கூறி ஒட்டு மொத்த முஸ்லீம்களையும் சிந்திக்க விடாமல் ஆக்கிவிட்ட ஷைத்தானிய சக்திகளான யூத நஸரானிகளின் பிடியில் சிக்கியிருக்கிற இஸ்லாமிய சமுதாயத்தை இவர்கள் எப்படி காப்பாற்ற போகிறார்கள்? யூத நஸரானிகளின் நாட்காட்டியை பின்பற்றும் முஸ்லீம்களை இஸ்லாமிய சிந்தனையாளர்கள் என கூறிக்கொள்பவர்கள் இஸ்லாமிய நாட்காட்டியை அறிமுகப்படுத்தி எப்படி காப்பாற்ற போகிறார்கள் என்ற கேள்விக்கும் முஸ்லீம் சமுதாயம் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளது?

பிறையை புற கண்களால் பார்த்துதான் மாதத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று கூறுபவர்கள்? கண்ணால் பார்த்த தகவலை ஏற்று செயல்படலாம் என்று கூறுகிறவர்களும், மேற்கண்ட கேள்விகளுக்கு விடையளிக்க கடமைப்பட்டுள்ளார்கள்.

மேற்கண்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாதவர்கள் கீழ்கண்ட ஹதீஸை நபி (ஸல்) அவர்கள் ஏன் கற்றுத்தந்தார்கள் என்ற கேள்வியை எழுப்புகிறார்கள்? அதில் பிறையை கண்ணால் பார்த்தால் மட்டும் தான் மாதத்தை முடிவு செய்ய தூதர் கற்றுக்கொடுத்துள்ளதாக தானே மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு உங்களால் என்ன விளக்கம் கூற முடியும் என்ற கேள்வியையும் சேர்த்து எழுப்புகிறார்கள்? அந்த ஹதீஸை ஆய்வுக்கு எடுக்கும் முன் கீழ்கண்ட வசனங்களை ஆய்வு செய்து பார்ப்போம்.

(நபியே!) சந்திரனின் தேய்ந்து வளரும் நிலைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். இது உலக மக்களுக்கும், ஹஜ்ஜிற்கும் நாட்களுக்கான தேதியை அறிவிப்பவையாக உள்ளது. (சந்திரன் உங்களுக்கு நாட்களுக்கான தேதியை காட்டும் போது) நீங்கள் வசிக்கும் பகுதியின் பின் புறத்தில் நுழைந்து (தேதியை) பின்பற்றி வருவதில் உங்களுக்கு புண்ணியமில்லை. நீங்கள் முறையான முறையில் (தேதியை) பின்பற்றி வாசல் வழியாக நுழையுங்கள். நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 2:189)

மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் தேய்ந்து வளரும் அதன் நிலைகள் தான் நாட்களுக்கான தேதிகள் எனவும், அதை வைத்து தான் நீங்கள் ஹஜ்ஜையும் பின்பற்றவேண்டும் என்றும், நீங்கள் வசிக்கும் பகுதிகளில் எது வாசல் என கண்டறிந்து அந்த வாசலின் வழியாகவே நுழைந்து நாட்களை துவங்குங்கள்.

பின்பக்கத்தில் இருந்து நாட்களை துவக்குவதால் உங்களுக்கு எந்த புண்ணியமும் கிடையாது என்பதை அல்லாஹ் நமக்கு தெளிவாக விளக்கியுள்ளான்.

நாம் உலகில் வசிக்கும் பகுதியில் எது நுழைவாயில் என முதலில் கண்டுபிடிக்க வேண்டும். அங்கிருந்து தான் நாட்கள் ஆரம்பிக்கப்படவேண்டும் என்பது எல்லாம் அல்லாஹ் நமக்கு கற்றுத்தந்தவை தான் என்பதை இன்னும் இஸ்லாமிய சமுதாய மக்கள் ஆராய்ந்து பார்க்காமல் உள்ளது மிகவும் வியப்பிற்குரியது.

நம்மில் திருக்குர்ஆனை கற்றறிந்த அறிஞர்கள் கூட பிறையை கண்ணால் பார்த்தால் போதுமானது அத்துடன் நமது வேலை முடிந்து விட்டது என நினைத்து வாழ்ந்து வருகிறார்கள். உண்மை அப்படி இல்லை. பிறையை அறியும் முன் ஒரு நாள் எங்கிருந்து எப்படி எப்போது ஆரம்பமாகிறது என்பதை அறிந்தால் தான் பிறையின் மூலம் மாதத்தை ஆரம்பிப்பதில் உள்ள குழப்பத்தை உலகில் தீர்த்து நாட்காட்டியை வடிவமைக்க முடியும்.

திருக்குர்ஆனில் அல்லாஹ் 10வது அத்தியாத்தில் 5வது வசனத்தில் அவன்தான் சூரியனைச் வெளிச்சத்தை ஏற்படுத்தும் விளக்காகவும், விளக்கின் ஒளியை பெற்று பிரகாசிக்க கூடியதாக சந்திரனையும் ஆக்கினான். (எண்ணில் அடங்கா) ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளைவிவரிக்கின்றான்.

36வது அத்தியாயம் 39 வசனத்தில் இன்னும் உலர்ந்து வளைந்த பேரீத்த பாளையை போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல படித்தரங்களை விதித்திருக்கின்றோம்.

அதை (பிறையை) அறிவதைக் கொண்டு நோன்பை துவக்குங்கள். அதை (பிறையை) அறிவதை கொண்டு நோன்பை விடுங்கள். உங்களுக்கு அதை அறிவதில் சந்தேகம் ஏற்பட்டால் மாதத்தை முப்பதாக முழுமைப் படுத்துங்கள். என நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புஹாரி

நபி (ஸல்) அவர்கள் பிறையின் வடிவத்தை ஆய்வு செய்து பார்த்து மாதத்தின் தேதிகளை முடிவு செய்து கொள்ளுங்கள் என்று தான் மேற்கூறிய வசனங்கள் மற்றும் ஹதீஸ் மூலம் தெளிவு படுத்துகிறன்றார்கள் என்பது ஆய்வின் முடிவாகும்.

பிறையின் வடிவத்தை தினமும் நபி(ஸல்) அவர்களும், அல்லாஹ்வும் கற்றுதந்த அடிப்படையில் நாம் ஆய்வு செய்து வந்தால் ஒரு சில மாதங்களை முன் கூட்டியே சந்தேகம் இல்லாமல் ஆரம்பிக்க முடியும். தவிர்க்க முடியாத சில காலங்களில் புழுதிப்புயல், வானமண்டலம் தூசி படிதல், அடைமழை தொடர்ந்து ஒரு சில மாதங்களில் பெய்து வரும் நிலை, நேர்கோட்டிற்கு வந்து புதிய மன்ஸில் உருவாகும் நேரம் இவற்றை போன்ற காரணங்களால் ஒரு சில காலங்களில் அவர்களுக்கு ஒரு மாதத்தை கூட முன் கூட்டியே கணக்கிடும் முறையில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. அப்படி சிக்கல் ஏற்படும் போது அடுத்து தெளிவான சந்திரனின் நிலைகளை வைத்து மன்ஸில்களை ஆய்வு செய்து பார்த்து நாட்களுக்கான தேதியை கண்டுபிடித்து சரிசெய்து கொள்ளவேண்டும் என்பது தான் அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதருடைய கட்டளை என்பதை நாம் அறிய முடிகிறது.

நபி(ஸல்) அவர்களிடம் சூரிய சந்திர ஓட்டங்களை முன் கூட்டியே கணக்கிட்டு நாட்காட்டி தயார் செய்யும் கணக்கு அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். ஒரு சில ஹதீஸ்களில் நபி(ஸல்) அவர்களுக்கு ஜிப்ரீல் (அலை) வந்து மாதம் இன்றுடன் முடிந்து விட்டது என்பதை அறிவித்து சென்றதை பார்க்க முடிகிறது. இவ்வுலகில் வாழும் மனிதனின் கண்ணால் பார்த்து மட்டும் தான் செயல்பட வேண்டும் என்பது தான் கட்டாயம் என்றால் ஜிப்ரீல் (அலை) வந்து மாத முடிவை அறிவித்து நபி(ஸல்) அவர்கள் ஏற்றுக்கொண்டது கூடுமா? (பார்க்க ஹதீஸ் CD நஸயீ 2104) ஏன்ற கேள்விக்கு பிறையை கண்ணால் பார்த்து தான் மாதத்தை துவங்க வேண்டும் என கூறுபவர்கள் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள்.

இதை உறுதிபடுத்த கீழ்கண்ட வசனங்களை நாம் ஆய்வு செய்ய கடமைப்பட்டுள்ளோம். அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் மன்ஸில்களை முன்கூட்டியே கணக்கிட்டு நாட்காட்டியை பின்பற்றுவதை பற்றி என்ன கற்றுத்தருகிறார்கள் என்பதை நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம்.

இரவையும், பகலையும் நாம் இரண்டு அத்தாட்சிகளாக ஆக்கினோம். பின்னர் இரவின் அத்தாட்சி மங்கி (இருளாகி)டச் செய்தோம். உங்கள் இறைவனுடைய அருட்கொடையை நீங்கள் தேடிக்கொள்வதற்காகவும் – ஆண்டுகளின் எண்ணிக்கைகளையும் கணக்குகளையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும், பகலின் அத்தாட்சியைப் பிரகாசமாக்கினோம் – மேலும் நாம் ஒவ்வொரு பொருளையும் தெளிவாக விவரித்திருக்கிறோம். அல்குர்ஆன் 17:12

அவனே பொழுது விடியச் செய்பவன்; (நீங்கள் களைப்பாறி) அமைதிபெற அவனே இரவையும்,காலக் கணக்கினை அறிவதற்காகச் சூரியனையும் சந்திரனையும் உண்டாக்கினான் – இவையாவும் வல்லமையில் மிகைத்தோனும், எல்லாம் அறிந்தோனுமாகிய (இறைவனின்) ஏற்பாடாகும். 6:96

நிச்சயமாக நாமே இரவை அதில் அவர்கள் ஓய்ந்திருப்பதற்காகவும், பகலை (அவர்களுக்கு) வெளிச்சமாகவும் ஆக்கினோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன.27:86

சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன. 55:5.

மாதம் என்பது சில சமயங்களில் 29 ஆகவும், சிலசமயங்களில் 30 ஆகவும் இருக்கும் என தங்கள் விரல்களை கொண்டு காட்டிவிட்டு, நாம் உம்மி சமுதாயமாக இருப்பதினால் நாம் கணக்கிட்டு எழுதும் முறையை அறியாமல் இருக்கிறோம். என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக புகாரியில் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். புகாரி 1913, 1780 முஸ்லீம் 1806, நஸஈ 2111, அபூதாவூத் 1975, அஹ்மத் 4776.

மேற்கண்ட வசனங்கள் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் சிந்திக்கும் போது இஸ்லாமிய மார்க்கத்தில் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் கணக்கிடுட்டு மாதங்களை துவக்க முடியும் என்று கூறியுள்ளதற்கு பல ஆதாரங்கள் இருப்பது மறுக்க முடியாத உண்மை.

மேலும் ஒரு சிலர் மார்க்கத்தில் பிறை சம்மந்தமான திருக்குர்ஆன் வசனங்களை ஆராய்ந்து பார்க்காமல், தவறாக புரிந்து கொண்டு முன்கூட்டியே கணக்கிட்டு மாதத்தை துவக்குவதை இஸ்லாம் தடை செய்துள்ளது என இறையச்சத்தின் காரணமாக பயந்து கண்ணால் பார்க்காமல் மாதத்தை ஆரம்பிக்கவே கூடாது என கூறி வருகின்றனர். முன்கூட்டியே கணக்கை அறிந்து கொள்ளளும் முறையை இஸ்லாம் எங்கும் தடை செய்யவில்லை. மாறாக அல்லாஹ் திருக்குர்ஆனின் 10 வது அத்தியாயம் 5 வது வசனம் வருடங்களின் எண்ணிக்கையை அறிந்து கொள்வதற்காகத்தான் மாறி மாறி வரும் படித்தரங்களை சந்திரனுக்கு ஏற்படுத்தியிருக்கிறேன் என அல்லாஹ் கூறகின்றான். அதுவும் ஒரு வருடம் என கூறாமல் வருடங்கள் என பன்மையில் கூறியிருப்பது முன் கூட்டியே மாதங்களையும் ஆண்டுகளையும் அறிந்து கொள்ளும் முறை இஸ்லாம் அங்கீகரித்துள்ள ஒன்று தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

கணக்கிடுவதில் சூரியனுக்கு ஒரு நீதி, சந்திரனுக்கு ஒரு நீதியா?

ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா?

அல்லாஹ்வின் பிரம்மாண்ட படைப்புகளான சூரியனும் சந்திரனும் அவற்றிற்கு நிர்ணயிக்கப்பட்ட கணக்கின்படியே இயங்குகின்றன என்கிறது திருக்குர்ஆன் (55:5). நேரத்தையும் காலத்தையும் மனிதர்கள் அறிந்து கொள்வதற்காகவே இவற்றைப் படைத்துள்ளதாக வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில் பல இடங்களில் சுட்டிக் காட்டுகிறான்.

சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இவ்விரண்டு கோள்களின் தன்மைகளும், இயற்கை குணங்களும் வெவ்வேறானவை, பெரும் வித்தியாசங்கள் கொண்டவை என்றாலும் அவற்றைக் கணக்கிட்டுக் கொள்ளலாம் என்பதும், நேரத்தை அறிந்து கொள்ள சூரியனையும், தேதிகளை அறிந்துகொள்ள சந்திரனையும் வல்ல அல்லாஹ் நமக்கு வசப்படுத்தித் தந்துள்ளான் என்றும்,அவை அல்லாஹ்வின் கட்டளைப்படி அதன் வரையறைக்குள் துல்லியமாக இயங்குகின்றன என்றும், நமது தினசரி நேரங்களுக்கும், தேதிகளுக்கும் இவ்விரண்டுமே அடிப்படையாகும் என்பதையும் அல்குர்ஆனின் பல்வேறு வசனங்கள் மூலம் நாம் தெளிவாக அறியலாம். (பார்க்க : 2:189, 6:96, 9:36-37, 10:5, 13:2, 17:12, 21:33, 36:38-40).

முஸ்லிம்களின் இறை வணக்கமான தொழுகையையும், முஸ்லிம்களின் கிப்லாவையும் மையப்படுத்தியே சர்வதேசத் தேதிக்கோட்டுப் பகுதியில் கிழமை மாற்றம் நடைபெறுவதை இவ்வுலகிற்கு மறைத்த யூதர்களும், கிருஸ்துவர்களும் இவ்விஷயத்தை வரலாறுகளில் திட்டமிட்டு இருட்டடிப்பும் செய்து விட்டனர். அல்லாஹ்வுடைய மார்க்கமாம் தீனுல் இஸ்லாம் என்ற இந்த சத்திய மார்க்கம் மேலோங்கி விடக்கூடாது என்பதிலும், இஸ்லாமிய நாட்காட்டியை முஸ்லிம்கள் தயாரித்து உலகை வழி நடத்தி விடக் கூடாது என்பதற்காகவும் யூத கிருஸ்துவ மிஷினரிகள் நேர்த்தியான பல சதித் திட்டங்களையும் தீட்டிச் செயல்பட்டுள்ளதை நமது முஸ்லிம் உம்மத் இந்த நவீன யுகத்தில் கூட உணராமல் வாழ்ந்து வருவது வேதனையிலும் வேதனையே. இருப்பினும் அறிந்தோ அறியாமலோ கணக்கீட்டு முறையை முஸ்லிம் சமுதாயம் ஏற்றுக் கொண்டுதான் இருக்கின்றது, அவற்றை நடைமுறையில் நாம் பின்பற்றித்தான் வருகிறோம்.

கடமையான ஐந்து வேளைத் தொழுகைகள் மற்றும் ஜூம்ஆ தொழுகை, இஃப்தார் முடிவு, சஹர் நேரம் போன்றவைகள் அனைத்தும் சூரியனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு குறித்த நேரத்தில் பின்பற்ற வேண்டியவை.

ரமழான் நோன்பின் துவக்கம், இருபெருநாட்கள், ஹஜ் மற்றும், ஆஷூரா நோன்பு, மாதமாதம் வெண்மை நாட்களின் மூன்று நோன்பு, அரஃபா நோன்பு, அனைத்துச் சந்திர மாதங்களையும் ஆரம்பித்தல், புனித மாதங்களைச் சரியாக ஆரம்பித்தல் ஆகிய வணக்கங்கள் சந்திரனை மையமாக வைத்துக் குறித்த தேதிகளில் பின்பற்ற வேண்டிய கடமைகளாகும்.

இங்கு சூரியனை அடிப்படையாக வைத்துச் செய்யவேண்டிய காரியங்களான தொழுகை நேரங்களை எவரும் சூரியனால் ஏற்படும் நிழலைப் புறக்கண்ணால் பார்த்து அறிந்து கொள்வதில்லை. அதுபோல ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள் (2:187) என்ற இறைக் கட்டளையை எவரும் புறக்கண்ணால் பார்த்து நடைமுறைப் படுத்துவதில்லை. மாறாக விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாகத் துல்லியமாகக் கணக்கிடப்பட்டுள்ள நேரங்களின் அடிப்படையில்தான் அட்டவணையிட்டு நாம் அனைவரும் பின்பற்றுகிறோம். இதற்கு எவரும் ஆட்சேபனை தெரிவிப்பதில்லை.

ஆனால் சந்திரனை அடிப்படையாகக் கொண்ட அமல்களைச் செய்வதற்கு மட்டும் நிலவை புறக்கண்ணால்தான் பார்ப்போம் என்று பிடிவாதமாக இருப்பது எந்த விதத்தில் நியாயம்? சூரியனுக்கு ஒருநீதி, சந்திரனுக்கு ஒரு நீதியா? வல்ல அல்லாஹ் சூரியனைப் போலவே சந்திரனையும் சேர்த்துதான் துல்லியமாக இயங்குவதாகச் சொல்கிறான். சூரியனை நாங்கள் கணக்கிடுவோம், ஆனால் சந்திரனை கணக்கிட மாட்டோம் என்ற இரட்டை நீதியை நாம் எங்கு போய் சொல்வது?ஒருவேளை மாற்றுக் கருத்துடையோர் சந்திரன் துல்லியமாக இயங்கவில்லை என்கின்றனரா?. அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

இந்நிலையில், மேற்படி அறிஞர்களிடம் பிறைகளின் படித்தரங்களை துல்லியமாகக் கணக்கிட்டு வழங்கப்பட்டுள்ள சந்திர நாட்காட்டியை (ஹஜ்ரி காலண்டரை) எதிர்க்கும் நீங்கள் நாம் சூரியனால் ஏற்படும் நிழலின் அளவை வைத்து கணக்கிடப்பட்டுள்ள தொழுகைக் கால அட்டவணையை மட்டும் ஏன் ஆட்சேபனை செய்யாமல் பின்பற்றி வருகிறீர்கள் என்ற நமது கேள்விக்கு அவர்கள் விடையாக :”சூரியன் மறைவதைக் கண்ணால் கண்ட பின்தான் நோன்பு துறக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை என்றும் மேகமூட்டமான நாட்களில் சூரியன் மறைவதைக் கண்டால் மஃரிபு தொழுங்கள் இல்லாவிட்டால் அஸர் நேரம் என்றே அதை கருதிக் கொள்ளுங்கள் என சூரியன் குறித்து நபி(ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை. ஆனால் பிறைக்குத்தான் இந்த நிபந்தனையைக் கூறினார்கள். மேகமூட்டமாக இருந்தால்30-ஆக பூர்த்தி செய்யுங்கள் என்ற அளவுகோல் பிறைக்குத்தான் உள்ளது என விடையளிக்கின்றனர்.

ஒரு வாதத்திற்காக சூரியன் விஷயத்தில் இவர்களின் வாதம் சரிபோலத் தோன்றினாலும், மேற்படி மாற்றுக்கருத்துடையோர் கூற்றின்படியே துல்லியமானச் சூரியக் கணக்கீட்டை தொழுகை நேரத்திற்கு ஒப்புக்கொண்டது, நபி(ஸல்) அவர்களின் நேரடி வழிகாட்டுதலான சூரியனின் வெளிச்சத்தால் ஏற்படும் நிழலின் அளவை பார்த்து தொழுகை நேரத்தைக் கணக்கிடவேண்டும் என்பதற்கு எதிரானதா இல்லையா என்பதை அவர்கள்தான் மக்கள் மன்றத்தில் தெளிவுபடுத்த வேண்டும்.

பிறை விஷயத்தில் மேகமூட்டமாக இருந்தால் மாதத்தை முப்பதாகப் பூர்த்தி செய்யுங்கள் என்ற கருத்திற்கு குர்ஆன்,சுன்னாவில் எத்தகைய ஆதாரங்களும் இல்லை என்பதை ஃபஇன்கும்ம அலைக்கும் என்பதின் பொருள் என்ன? என்ற தலைப்பிலும், புறக்கண்களால் பார்த்தல் என்ற நிபந்தனை உண்மையிலேயே பிறைகளுக்கு உள்ளதா என்பதை ருஃயத் (காட்சி) என்றால் என்ன? என்ற தலைப்பிலும் விரிவாக விளக்கியுள்ளோம்.

எனவே தொழுகை நேரங்களை அறிந்து கொள்ள சூரியனின் வெளிச்சத்தால் ஏற்படும் நிழலின் அளவை வைத்துக் கணக்கிடப்பட்டுள்ள தொழுகை அட்டவணையைப் பின்பற்றுவதைப் போல, தேதிகளை அறிந்து கொள்வதற்காகவே வல்ல அல்லாஹ்வால் வசப்படுத்தித் தரப்பட்டுள்ள பிறைகளையும் துல்லியமாகக் கணக்கிட்டு நாட்காட்டியைத் தயாரித்துப் பின்பற்றுவதும் தவறேதுமில்லை, என்பது மட்டுமல்ல மிகவும் அவசியமானதுமாகும்.

இஸ்லாமிய நாட்காட்டி (Calendar) ஏற்படுத்த முடியுமா? முடியாதா? உலகில் கிருஸ்தவர்களும்,யுதர்களும் தங்களுக்காக ஏற்படுத்திக்கொண்டுள்ள நாட்காட்டி (Calendar) யைத்தான் நாம் பின்பற்றியே ஆக வேண்டுமா? இஸ்லாம் ஒரு மாதம் என்பது 29 அல்லது 30 என வரையறுத்துள்ளது. வருடத்திற்கு 12 மாதம் தான் என 9:36-37 வசனங்களில் அல்லாஹ் கூறுகின்றான். கிறிஸ்துவ மாதம் 28,29,30,31என நான்கு தேதிகளில் முடிகிறது. இதை இஸ்லாமியர்கள் பின்பற்ற முடியுமா?பின்பற்றினால் முஸ்லீம்களின் நிலை என்ன? என்பதை எல்லாம் 9:36-37 வசனங்களை ஆய்வு செய்து படித்து தெளிவான ஒரு முடிவுக்கு வந்தால் இஸ்லாமிய நாட்காட்டியின் (Calendar) அவசியம் சமுதாயத்திற்கு புரியும்.

நன்றி , வஸ்ஸலாம்.

வெளியீடு:

இந்திய ஹிஜ்ரி கமிட்டி

Leave a Comment

Previous post:

Next post: