இன்பமும் துன்பமும்

Post image for இன்பமும் துன்பமும்

in படிப்பினை

உலகத்தில் நாம் பரவலாக பார்க்கும்போது இன்பமும் துன்பமும்  இருக்கிறது. இந்த உலகத்தில் மனிதனுக்கு, விருப்பத்திற்கு உட்பட்டவைகளும் சம்பவிக்கின்றன. ஆக இன்பம் துன்பம் விருப்பு வெருப்புகள் ஆகிய எல்லாமே நிறைந்ததுதான் வாழ்க்கை. ஆனால் உலகில் ஒவ்வொரு தனி மனிதனும் “நம் வாழ்வில் இன்பமும் இருக்கிறது. துன்பமும் இருக்கிறது. எது அதிகம்? என்று தன்னைத்தானே கேட்டுக் கொள்ளும் போது” ஒவ்வொருவனும்90% க்கு மேல் இன்பத்தை அனுபவிக்கிறார்கள். ஒரு 10%க்கும் குறைவாகவே துன்பம் அவனது வாழ்வில் அவ்வப்போது தலை காட்டுகிறது” என்பதை புரிந்து கொள்வான்.

    எப்போதும் வயிற்று வலியால் ஒருவன் துடித்துக் கொண்டிருப்பதில்லை. எப்போதாவது அஜீரணக் கோளாறு ஏற்பட்டு வயிற்றுவலி ஏற்படுகிறது. எப்போதும் ஒருவன் பசியோடு இருப்பதில்லை. எப்போதாவது ஓரு மனிதன் வியாதியிலேயே உழல்வதில்லை. எப்போதாவது சில சமயம் மருத்துவரைப் பார்க்க வேண்டிய நிலமை ஏற்படுகிறது. எப்போதும் ஒருவன் சட்டச் சிக்கலில் மாட்டிக் கொள்வது இல்லை. எப்போதாவது சில நேரங்களில் வக்கிலைப் பார்க்க வேண்டிய நிலமை ஏற்பட்டு விடுகின்றது.

    ஆக மனிதன், தன் வாழ்க்கையில் 90%க்கும் அதிகமாக அல்லாஹ்வின் அருளையே அனுபவிக்கிறான். ஒரு 10% துன்பமும் வரம் என்பதை மறுப்பதற்கில்லை. சில நேரங்களில் அவனையும் மீறி இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதற்கு சான்றாக அவனது விருப்புக்கு அப்பாற்பட்டவைகளும் நடந்து விடுகின்றன.

     அதனால் அவன் தன்னை அர்ரஹ்மான் அர்ரஹீம் என்று அறிமுகப்படுத்துகிறான். படைப்பினங்களுக்கு கருணை செய்வதை தன் மீது அவனே கடமையாக்கிக் கொண்டதாகவும் குறிப்பிடுகின்றான்.அப்படியானால் வியாதி எதற்காக ஏற்படுகிறது? கஷ்டங்கள் எதற்காக ஏற்படுகிறது இயற்கையின் விபத்துகளால் நாங்கள் எதற்காக அழிக்கப்படுகிறோம்? பல்வேறு துன்ங்களுக்கும், கொடுமையான சித்திரவதைகளுக்கும் எதனால் நாங்கள் உள்ளாக்கப்படுகிறோம்? என்று கேட்கும்போது அறிவு குறைந்த, இறைவனைப் புரிந்து கொள்ளாதவன் தான் இவற்றை எல்லாம் இறைவன் தன் மீது கொண்ட கோபத்திற்கு எடுத்துக் காட்டு என்று கொள்வான். ஒரு புத்திசாலி, அல்லாஹ்வை நன்கு புரிந்து கொண்டவன் ‘இந்த சோதனையும் அல்லாஹ்வின் கருணையில் ஒன்றுதான் என்று புரிந்து கொள்வான்.

     ஒரு தாய் தன்னுடைய குழந்தையின் ஒருகைகளையும் பிடித்துக் கொண்டு, அவனுடைய கால்கள் மீது தன்னுடைய கால்களை வைத்து அழுத்திக் கொண்டு அவனுடைய வாயைப் பலவந்தமாக திறந்து, அவனுக்கு பிடிக்காத விளக்கெண்ணையை ஊற்றும் போது, அந்த உலகம் தெரியாத குழந்தை “இப்படி சித்திரவதை செய்கிறாளே, கொடுமைப்படுத்துகிறாளே, இவளும் ஒரு தாயா? நம்மைக் கொடுமைப்படுத்துவதுதான் இவளது வேலையா என்று எண்ணிக் கொள்ளும்.

       ஆனால் உலக அனுபவமும், முதிர்ச்சியும், அறிவு வளர்ச்சியும் பெற்றவர்கள். இது தாய் நிகழ்த்தும்கொடுமை” என்று சொல்ல மாட்டார்கள். என்ன சொல்வார்கள்? “குழந்தைக்கு அஜீரணக் கோளாறு, குழந்தையின் உள்ளிருந்து சிறுகச் சிறுக, கொன்று கொண்டிருக்கும் வியாதிக்கு இவ்வளவு சிரமத்தோடு இந்த மருந்தைத் தரத்தான் வேண்டும், அந்தக் குழந்தை பொறுமையோடு இல்லாவிட்டாலும், அது தாங்கவியலாமல் துடித்தாலும் இந்தக் காரியம் முதிர்ச்சி பெற்றவாகள் விளங்கிக்கொள்ாாகள். ஆக அந்தக் குழந்தைக்கு வெளித்தோற்றத்தில் வேதனையாகத் தெரிவதும், சித்திரவதையாக படுவதும் அந்தக் குழந்தையின் நலனுக்குத்தான் என்பதை அறிவுடையோர் உணர்ந்து கொள்வர்.

    கல்விக் கூடத்திற்கு செல்ல மறுக்கும் குழந்தையை தாய் அடிக்கிறாள் துன்புறுத்துகிறாள். அவனுக்கு உணவு தராமல் அவனைப் பட்டினி போடுவதாய் நமக்குத் தோன்றுகிறது. ஆனால் அந்தக் குழந்தையின் வருங்கால நலன்தான். அந்தக் குழந்தை இந்த உலகத்து பிரச்சினைகளில் எதிர்நீச்சல் போட்டு, இந்த உலகத்தின் சவால்களை சமாளிக்கின்ற அளவுக்கு தன்னுடைய சந்ததி வளர வேண்டும் என்கிற தூர நோக்குத்தான், அந்தத் குழந்தைக்கு இவ்வளவு துன்பத்தையும் தருவதற்கு காரணம் என்பதை யாரால் மறுக்க துடியும்?

      நமக்கு காரும், பங்களாவும், நல்ல ஆடம்பரமான வாழ்வும் சுகபோகங்களும், ஒரு நாள் கூட காய்ச்சல், தலைவலி என்று படுக்காத ஒரு வாழ்க்கையும் நமக்குக் கிடைத்து விடுவதுதான், “நம்முடைய இறைவன் நம்மீது வைத்திருக்கும் கருணைக்கு எடுத்துக்காட்டு.” என்று நீங்கள் நினைத்தீர்களானால், நீங்கள் இன்னமும் ஞான முதிர்ச்சி பெறவில்லை. இன்னமும் போதிய விழிப்புணர்வு பெறவில்லை. நீங்கள் இன்னமும் அந்த இறைவனைப் புரிந்து கொள்ளவில்லை என்று பொருள்.

     அதே நேரத்தில் சற்று தூர நோக்கோடு, “இது எவனால் தரப்பட்டிருக்கின்றது? இந்தச் சோதனையில் நாம் எப்படி நடந்து கோள்ள வேண்டும் என்ற சிந்தனையின் பாற்பட்டு நீங்கள் இறைவனைச் சிந்திக்க தலைப்பட்டு விடுவீர்களானால் இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் மிகச் சுலபமாக விடை கிடைத்துவிடும்.

     மனிதா! இந்த உலக வாழ்க்கையில் உனக்கு மனிதனாக இருக்கலாம். அல்லது அந்த துன்பங்களுக்கு நானே நேரடிக் காரணமாக இருக்கலாம். உன்னைப் போன்ற மனிதன் உனக்கு துன்பங்கள் தரும்போது உதாரணமாக உன்னை அடிக்கிறான், அல்லது உன்னை ஏசுகிறான் அல்லது உன்னிடமிருந்து திருடுகிறான் எனும்போது அதற்காக நீ கவலைப்படாதே! ஏனென்றால்

    ரஹ்மானும், ரஹீமாகவும் இருக்கின்ற அதே நேரத்தில் நான் மாலிகி யவ்மித்தீனாக – நியாயத் தீர்ப்பு நாளின் அதிபதியாக இருக்கின்றேன். என்னுடைய சன்னிதானத்தில் “உனக்கு ஒரு அணுவத்தனை துன்பம் விளைவித்தவனும் உனக்கு தந்த துன்பத்திலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது.” என்ற கருத்தில் இறைவன் கூறுகிறான்.

    மனிதர்கள் எந்த வகையிலும் துன்பத்திற்கு காரணமாக ஆகவில்லை, “என் இறைவா! நீயே சில சந்தர்ப்பங்களில் எனது துன்பத்திற்கும் காரணமாக இருக்கின்றாயே! எனக்கு பசியைத் தருகிறாய். அந்த பசிக்கு காரணம் மனிதர்கள் இல்லை. இயற்கையின் சீற்றத்தால் சேதம் விளைவிக்கிறாய், அதற்கு காரணம் நிச்சயமாக மனிதர்களில்லை. என்னுடைய விவசாயம், பொருளாதாரம் இன்ன பிறவற்றில் சேதத்தை ஏற்படுத்துகிறாய்! இதற்கு நூற்றுக்கு நூறு நீயேதான் முழுக் காரணம். இந்த இறைவனிடம் கேட்கும் போது எல்லாம் வல்ல அல்லாஹ் பதில் கூறுகிறான். “நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலூம் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே நீர்) நன்மாரயங் கூறுவீராக! (2:155)

     (பொறுமையுடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படம் போது ,” நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள். 2:156.

     நீ சற்று முன்பு என்னிடம் புகார் கொடுத்தாயே, பசியால் சோதிக்கிறாயே! அச்சத்தால் சோதிக்கிறாயே! விவசாயத்தில் அழிவை ஏற்படுத்துகிறாயே! என் குலம் தழைக்க ஒரு சந்ததி இல்லாமல் என்னை ஒரு தனிமரமாக்கி விட்டாயே! இப்படிப்பட்ட சோதனைகளுக்கெல்லாம் நான் என்னைப் போன்ற ஒரு மனிதனை எப்படி பொறுப்பாக்க முடியும்? ரஹ்மான், ரஹீம் என்று சொல்லிக் கொள்ளும் நீ தானே முழுக்க, முழுக்க காரணம் என்று அவன் அவனைப் பார்த்துக் கேட்டால் ” உன்னுடைய இந்தச் சோதனைகளுக்கு, உன்னுடைய இந்த வேதனைகளுக்கு, உன்னுடைய இதயம் சுக்கு நூறாகி துன்பப்படுவதெற்கெல்லாம் எவ்வளவு பெரிய சுவனத்துச் சுகபோகங்களை நான் பரிசாக வைத்திருக்கிறேன் என்று” மேற்சொன்ன வசனத்தில் சுபச்செய்தி சொல்வதின் மூலம் நம்மை திருப்பிக் கேட்கின்றான்.

     அதே நேரத்தில் உன் வாழ்வு முழுவதும் துன்பம், சோதனை, வேதனை தான் என்று உன்னால் துணிச்சலாக சொல்ல முடியுமா? 90% சதவிகிதம் இறைவனின் கருணைக்கே உட்பட்டிருக்கிறாய் ஒரு 10% சதவிகித துன்பத்தைத் தரும்போது உன்னிடமிருந்து ஏற்பட வேண்டிய பண்பு நிலை என்ன? என்றால் பொறுமை

    இந்தப் பொறுமையை நீ கடைபிடித்து எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு அருள்வதற்கு பாத்தியப்பட்டது போல் நம்மிடமிருந்து தந்ததை பறிப்பதற்கும் உரிமை உள்ளவன். எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மை இன்பத்திற்கு உள்ளாக்கியதைப் போல், சல சமயங்களில் துன்பத்திற்கும் உள்ளாக்கவும் உரிமை உள்ளவன்.

     இன்பத்திற்கு உள்ளாகும் போது ஷுக்ரு என்ற நன்றிக்கடனை வெளிப்படுத்தும் பண்பு உன்னிடத்தில் குடிகொள்வதை எதிர்பார்க்கும் அல்லாஹ், துன்பத்தில் சில சமயம் உன்னை சிக்க வைக்கும்போது உன்னிடம் பொறுமை இருக்கிறதா? உன்னிடம் கசிப்புத் தன்மை, அந்த இறைவனைப் பற்றிய நல்லெண்ணம் இருக்கின்றதா? அல்லது அந்த இறைவனை கொடுரமானவனாக, கொடியவனாக, இரக்கமற்றவனாக கற்பனை செய்து கொள்கிறாயா? அல்லது அளவற்ற அருளாளன் என்று நாம் தானே சொன்னோம்; அவனது அருளை நாம் தானே அனுபவித்தோம், ஓராண்டு நம்முடைய வியாபாரத்தில் நட்டம் ஏற்பட்டுவிட்டால் என்ன? பத்து குழந்தைகளில் ஒரு குழந்தை இறந்து விட்டால் என்ன? என்று நீ பொறுத்துக் கொள்கிறாயா என்பதை இறைவன் சோதிக்கும் போது பொறுமையை கடைபிடித்த இப்படிப்பட்ட பொறுமையாளர்களை பார்த்து நபியே! நீர் சுபச் செய்தி கூறும் என்று அல்லாஹ் கூறுகின்றான்.

    துன்பம் ஏற்பட்டவுடன், அந்த துன்பத்திற்கு ஒரு வகையில் இறைவனே காரணமாக ஆகும்போதும், தனக்கு பிடிக்காதவைகளை மனிதன் தன் வாழ்வில் சந்திக்கும் போதும் பொறுமையோடு அதை சகித்துக் கொள்வதோடு மட்டும் நில்லாது இன்னா லில்லாஹ் வ இன்னா இலைஹி ராஜிஊன் என்று சொல்கிறார்களே அத்தகைய பண்பு நெறி கொண்டோருக்கு நபியே! நீர் சுபச் செய்தி கூறும் என்று அல்லாஹ் கூறுகிறான்.

      இந்தக் குழந்தை மாத்திரம் தான் இறந்து அல்லாஹ்விடத்தில் சேர்ந்து விட்டதா? நான் என்ன இங்கேயே இருக்கப் போகிறேனா? என்னுடைய கடை மாத்திரம் தான் தீப்பிடித்து எரிந்து அழிந்து போய் விட்டதா? நான் இங்கேயே அழியாமல் இருக்கப் போகிறேனா? என் மனைவி தான் என்னை என் குழந்தையோடு விட்டு விட்டு இறந்து விட்டாளா? நான் இங்கேயே இருந்து என் குழந்தைகளை சாகும்வரை காக்கப் போகிறேனா? என்னுடைய விவசாயம் மட்டும் தான் அழிந்து விட்டதா? நான் இங்கேயே நின்று நீடித்து நன்றாக செழித்து வளர்ந்து இந்த உலகத்தில் இருக்கப் போகிறேனா? நானும் இந்த விவசாயம் அடைந்த நிலையை, நானும் கடை அடைந்த நிலையை, நானும் என் மனைவி அடைந்த நிலையை இந்த மரணத்தை அடைய போகும் ஒருவன் தானே தவிர நான் மாத்திரம் இங்கேயே நிலைத்திருக்கக் கூடியவன் அல்லவே! நிலைத்திருக்காத எனக்கு எல்லாமே நிலைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி நியாயமாகும்?

      எனவே அது போன்று நானும் அங்கே தான் போகப் போகிறேன். நானும் இதே போன்ற சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுவேன். அது இந்த நிமிடமாகக் கூட இருக்கலாம். நான் அப்போது பதறி பரிதவித்து போகக் கூடாது. அப்போது நான் தடுமாறி விடக்கூடாது. அப்போது பொறுமை எனக்கு இல்லை என்றாகி விடக் கூடாது.

      துன்பம் வரும்போது இறைவனையே நொந்து கொள்கின்ற பண்பு கொண்ட மனிதனை அல்லாஹ் கண்டிக்கின்றான். அவனுக்கு (மனிதனுக்கு) அவனுடைய வாழ்க்கைப் பிரச்சினையை அக்கட்டுக்குள் கொண்டு வந்து, துன்ப நிலைக்கு உள்ளாக்கி சற்று அவனை அவனுடைய ரப்பு சோதிக்க முற்பட்டாலோ என்மீது என் இறைவனுக்கு கருணையே இல்லை. என்னை அவன் மிகவும் கொடுமைப்படுத்துகின்றான். என்னை மக்கள் மத்தியில் தலை குனியச் செய்து விட்டான், என்னை கேவலப் படுத்தி விட்டர் என்று மனிதன் சொல்கிறான். இந்த எண்ணம் சரி அல்ல அப்படி நீ எண்ணாதே! இந்த எண்ணத்தை நீ தூக்கி எறிந்து விடு.

      இப்படி இறைவனை நீ நம்பக் கூடாது, உன் தாய் உனக்கு அமுது படைக்கும் போதும் தாய் தான்! உனக்கு தேவையான நேரத்தில் உனக்கு மருந்து தரும் போதும் தாய் தான் என்று எப்படி தாயின் தரத்தை தலைக்கு மேல் வைத்து பேசுகிறாயோ அதுபோல் உனக்கு இன்பம் தரும் போதும் அவன் தான் உன் கடவுள். உன்னை அவன் துன்பத்திற்கு உள்ளாக்கும் போதும் நீ அவனை மறந்திடக்கூடாது. இது தான் உண்மையான முஃமினுக்குரிய இலட்சியமாக பண்பாக இருக்க வேண்டும்.

{ 5 comments }

mohamed ashik December 21, 2013 at 3:19 pm

Jazakallah Kairen, keep giving good article like this to keep our imam more storgner.

ABDUL KHADER December 22, 2013 at 10:17 pm

Zazakallah..nice article

habib December 23, 2013 at 12:54 pm

Jazakallah Kaire

M.M.A.NATHARSHAH DUBAI September 2, 2014 at 2:59 pm

JAZAKKALLAH KAIREN VERY GOOD ARTICALS

A.ABDULRAJAK September 18, 2014 at 1:38 pm

94:5. ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது
94:6. நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.

Comments on this entry are closed.

Previous post:

Next post: