மக்களை வஞ்சிக்கும் மதகுருமார்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள்!

in அழிவுப் பாதை,பகுத்தறிவுவாதம்

ஆறறிவு படைத்த மனிதன் ஐயறிவு மிருகங்களை விட உயர்ந்தவன் என்பதில் அசல் பகுத்தறிவாளர்களிடம் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. ஆனால் மனிதர்களில் மிகப்பெரும்பாலோர் போலி பகுத்தறிவு பேசி மிருக நிலைக்கு அதாவது ஐயறிவு பிராணியாக தாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதன் காரணமாக மிருகங்களைவிட கேடுகெட்ட நிலைக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். (7:179)

அதனால் இன்றைய மக்களிடையே விபசாரம், கொலை, கொள்ளை. புகை, மது, வட்டி, களவு, சூது, சாதிப்பாகுபாடு, மொழி வேறுபாடு, நிறவேறுபாடு, இனவேறுபாடு, பில்லி சூன்யம், மந்திரம், சோதிடம், பேய் நம்பிக்கை, இறந்தவர்களின் ஆவிகளின் சேட்டை பற்றிய மூட நம்பிக்கை, நல்லநேரம் கெட்ட நேரம், சகுனம், நோய்களுக்கும், இயற்கைச் சீற்றங்களுக்கும் மடமையான விளக்கங்கள், தீமையின் பக்கம் போட்டி பொறாமைகள், மூடச் சடங்குகள் சம்பிரதாயங்கள், சிலை, சமாதி, கபுரு வழிபாடு கள், சிலை, சமாதி, கபுருகளுக்குப் பலியிடுதல், சுரண்டல், கொத்தடிமை, சண்டை சச்சரவுகள், பெருமை, முகத்துதி, கர்வம், பொய், கோள், புறம், சுயநலம், வியாபாரத்தில் மோசடிகள், நீதிமன்றங்களில் அநீதமான தீர்ப்புகள், ஆட்சியாளர்களிடம், அரசு அதிகாரிகளிடம் காணப்படும் கையூட்டு, ஒழுங்கீனம், சட்டத்தை மீறி நடத்தல், ஒழுக்கக் கேடுகள், ஆக ஆறறிவு மனிதனிடம் எப்படிப்பட்ட இழி குணங்கள் இருக்கக் கூடாதோ அவை அனைத்தும் நிறைந்து காணப்படுகின்றன.

இந்த இழிகுணங்கள் அனைத்தையும் உயர் குணங்களாக, நற்குணங்களாக நம்பிச் செய்ய வைக்கும் தூண்டுகோளாக, மனிதனைச் சீரழியச் செய்யும் சின்னத்திரைகள், வெள்ளித்திரைகள். ஆம்! மனிதன் அழிவின் விளிம்பில், நரகின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறான். இந்த மிகமிக ஆபத்தான நிலையிலிருந்து மனித குலம் காப்பாற்றப்பட வேண்டுமா? அல்லது அப்படியே சீரழிந்து சின்னாபின்னப்பட்டுப் போகட்டும் என்று விட்டுவிடுவதா? மனித நேயமிக்க மனிதர்களில் யாருமே இதைச் சரிகாணமாட்டார்கள். அப்படியானால் மனிதனை மீண்டும் மிருக நிலையைவிட கேடுகெட்ட நிலையிலிருந்து மனித நிலைக்கு உயர்த்துவது எப்படி? அதற்குரிய வழி என்ன?

ஆம்! தன்னுடைய தீய செயல்களுக்குரிய தண்டனை இல்லை என்று மனிதன் நம்பும்போது, அவனிடம் இருக்கும் மிருக குணம் மிகைத்து முழு மிருகமாகத்தான் மாறுவான். மனிதனின் வாழ்க்கை இவ்வுலகோடு முற்றுப் பெற்று விடுகிறது. ஆட்சியாளர்களையும், அரசு அதிகாரி களையும் கையூட்டு மூலம் இசைய வைத்து விட்டால் எப்படிப்பட்ட மாபாதகச் செயல்களையும், மெகா குற்றச் செயல்களையும் செய்து விட்டுத் தப்பி விடலாம் என்ற நம்பிக்கையே மனிதனை மிருக நிலைக்குக் கொண்டு சேர்க்கிறது.

இதற்கு மூலகர்த்தாக்களாக இருப்பவர்கள், மனிதக் கரங்களால் கற்பனை செய்யப்பட்ட பொய்க் கடவுள்களை மக்களிடையே போதிப்பவர்களும், அவர்களை ஒழித்துக் கட்டுவதாக எண்ணிக்கொண்டு, அந்தப் பொய்க் கடவுள்களையும், அவற்றைக் கற்பனை செய்யும் மத குருமார்களான புரோகிதர்களையும் ஒழிப்பதை விட்டு, அகிலங்கள் அனைத்தையும், மனிதனை சோதனைக்காகவும் படைத்த தன்னந்தனியனான ஏகன் இறைவனை இல்லாமலாக்கும், அதாவது முடியாத காரியத்தை முடிக்க முனைந்து நிற்கும் நாத்திகர்களுமே!

மக்களிடையே நிறைந்து காணப்படும் மனிதக் கற்பனைகளான சிலைகள், சமாதிகள், கபுருகள் மற்றும் பிராணிகள் போன்ற பொய்க் கடவுள்கள், அவற்றைக் கடவுளாக கற்பிக்கும் மதகுருமார்கள் இவர்களின் வஞ்சகப் பிடியிலிருந்து மனித குலத்தை மீட்டெடுத்து, அகிலங்கள் அனைத்தையும் படைத்து இயக்கி வரும் தன்னந்தனியனான ஒரே இறைவனை மட்டும் ஏற்று, அவனது வழிகாட்டல்படி மட்டுமே மக்கள் நடக்கும் சூழ்நிலைகள் ஏற்பட்டால் மட்டுமே, மிருகமாக இருக்கும் மனிதன் உண்மையிலேயே மனிதனாகச் சிறக்க வழி பிறக்கும். அறிவு ஜீவிகளே சிந்தியுங்கள்!

அந்நஜாத்

Leave a Comment

Previous post:

Next post: