நபிக்குப்பின் நபித்தோழர்கள்

Post image for நபிக்குப்பின் நபித்தோழர்கள்

in இஸ்லாம்

 “என்னுடைய பேச்சை செவியுற்று அதை மனனம் செய்து பாதுகாத்து அதை செவியுற்றது போன்று பிறருக்குச் சொல்லக்கூடியவனுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! எனது செய்தி எத்திவைக்கப்படுகின்ற எத்தனையோ பேர் எத்திவைப்பவரைவிட சிறந்தவராக இருக்கின்றனர்” என நபி அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூதாவூத், திர்மிதீ)

நபி அவர்கள் விட்டுச் சென்ற அமானிதத்தை எல்லா முஸ்லிம்களுக்கும் எத்தி வைப்பது தம்மீது கடமை என நபித்தோழர்கள் உணர்ந்தார்கள். இக்கடமையைச் செயல்படுவதற்காக நபித்தோழர்கள் உலகின் பல பாகங்களுக்கும் பரந்து சென்றுள்ளார்கள். இவர்கள் அவர்களை அடுத்த காலத்தினரான தாபியீன்கள் மத்தியில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றனர். நபித்தோழர்கள் இருக்கும் இடத்தை தேடி தாபியீன்கள் நீண்ட பிரயாணம் சென்றனர். நபி அவர்களின் ஹதீஸ்களை நபித்தோழர்களிடமிருந்து திரட்டலானார்கள். இவ்வாறு நபி அவர்களுடைய ஹதீஸ் எல்லா முஸ்லிம்களிடையிலும் பரவ ஆரம்பித்தது. (நபித்தோழர் என்பவர் நபியைப் பார்த்து நம்பிக்கை கொண்டவர். ‘தாபியீ’ என்பவர் நபித்தோழரைப் பார்த்து நம்பிக்கை கொண்டவர்)

நபிவழியை அறிவிப்பதில் நபித்தோழர்கள் எல்லோரும் ஒரே தராதரத்தில் இருந்ததில்லை. சுபைர்(ரழி), சைது பின் அர்கம்(ரழி) இம்றான் பின் ஹுஸைன்(ரழி) போன்ற நபித்தோழர்கள் மிகக்குறைவாகவே நபிவழியை அறிவித்திருக்கிறார்கள். சுபைர்(ரழி)வின் மகன் அப்துல்லாஹ் என்பவர் தனது தந்தையிடத்தில், சிலர் நபி அவர்களுடைய ஹதீஸ்களை அறிவிப்பது போன்று தாங்கள் அறிவிக்க நான் கேட்டதில்லையே! என்ன காரணம் என்று கேட்டார்கள். அதற்கு, ‘நான் நபி அவர்களை விட்டுப் பிரியாமலே அருகில் இருந்தேன் என்றாலும், என்மீது யார் பொய் சொல்லுகின்றானோ அவன் ஒதுங்குமிடம் நரகம்தான் என நபி அவர்கள் சொல்ல நான் கேட்டதால் அவர்களைப் பற்றி ஹதீஸ்களை அறிவிக்க நான் அஞ்சுகிறேன்’ என்று சொன்னார்கள். நூல்: புகாரி

சைது பின் அர்க்கம்(ரழி) என்ற நபித்தோழரிடத்தில் எங்களுக்கு நபி அவர்கள் பற்றிய ஹதீஸ்களைச் சொல்லுங்கள் என்று கேட்கப்பட்டபோது ‘நாங்கள் முதியவர்களாகி விட்டோம், மறந்து விட்டோம், நபி அவர்களைப் பற்றி ஹதீஸ்களை அறிவிப்பது சாதாரண விஷயமல்ல’ என்று சொன்னார்கள். நூல்: ஜாமிஉ இப்னு அப்துல்பர்

ஸாயின் இப்னு யஸீது(ரழி) அவர்கள் சொல்கிறார்கள் “நான் மதீனாவிலிருந்து மக்காவரை அபூசயீதில் குத்ரி(ரழி) என்ற நபித்தோழருடன் பிரயாணம் செய்தேன், நபி அவர்கள் பற்றி ஒரு ஹதீஸ்கூட எனக்கு அறிவிக்கவில்லை” நூல் ஜாமிஉ இப்னு அப்துல்பர்

அனஸ் பின் மாலிக்(ரழி) என்ற நபித்தோழர் நபி அவர்களைப் பற்றிய ஹதீஸ்களைக் கூறிவிட்டு, அல்லது நபி அவர்கள் சொன்னது போன்று என்ற வார்த்தையை சொல்லுவார்கள். நபி அவர்கள் மீது பொய்யாக ஏதாவது சொற்கள் தம் நாவிலிருந்து வந்துவிடுமோ என்ற அச்சத்தால்தான் அவ்வாறு சொல்வதாகச் சொன்னார்கள். நூல்: அஸ்ஸுன்னத்து வமகானத்துஹா

இந்த நபித்தோழர்களெல்லாம் நபி அவர்கள் பற்றி மிக அதிகமாக அறிந்திருந்தும் மிகக்குறைவாக அறிவித்திருப்பதின் காரணம், அவர்களை அறியாமலேயே நபி அவர்களைப் பற்றி பொய்யாக ஏதும் தம்மிலிருந்து வந்துவிடுமோ என்ற அச்சம்தான்.

நபிதோழர்களில் சிலர் நபி அவர்கள் பற்றிய ஹதீஸ்களை அறிவிப்பதில் பிரசித்து பெற்றுள்ளனர். அபூஹுரைரா(ரழி) அவர்கள் ஒரு ஹதீஸ் பேழையாகவே விளங்கினார்கள். அவர்கள் வாயிலாக முஸ்லிம் சமுதாயத்திற்கு ஏராளமான நபிமொழிகள் கிடைத்திருக்கின்றன. இவ்வாறே அப்துல்லாஹ்பின் அப்பாஸ்(ரழி) அதிகமான ஹதீஸ்களை மூத்த நபித்தோழர்களிடமிருந்து சேகரித்தார்கள். இந்தப் பாதையில் அவர்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. “ஒரு நபித்தோழரிடம் ஒரு ஹதீஸ் இருக்கிறது என்ற செய்தி எனக்கு கிடைக்குமானால் அவரை என்னிடத்தில் வரவழைத்து அந்த ஹதீஸை நான் தெரிந்துள்ள முடியும் என்றாலும், நானே அந்த நபித்தோழரைத் தேடிச் சென்று அவருடைய வாசலில் காத்திருந்து அந்த ஹதீஸைக் கேட்டுத் தெரிந்ததின் பின்னரே திரும்பி விடுவேன்” என அப்துல்லாஹ் பின் அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறினார்கள். நூல்: ஜாமிஉ பயானில் இல்மி

இவ்வாறு நபிமொழிகளை தெரிந்து கொள்வதற்காக இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் பல சிரமங்களை மேற்கொண்டு நபித்தோழர்களிடமிருந்து நபிமொழிகளை தெரிந்திருந்தார்கள். வேறு சில சஹாபாக்கள் தங்கள் பெயரால் நபி அவர்களைப் பற்றிப் பொய்யான செய்திகள் பரவ ஆரம்பிப்பது தெரிய வந்ததும் அந்த ஸஹாபாக்களும், இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களும் ஹதீஸ்களை அறிவிப்பதைக் குறைத்துக் கொண்டார்கள் என அறிவிக்கப்படுகிறது. நூல்: ஜாமிஉ பயானில் இல்ம்


தொடரும்…

S.கமாலுத்தீன் மதனி

Leave a Comment

Previous post:

Next post: