நன்மையின் பெயரால்….

in பித்அத்

ஷஃபான் மாதம் 15ஆம் இரவு நம்மவர்களால் மிக கோலாகலமாக கண்ணியப்படுத்தப்பட்டு விழாவாக கொண்டாடப்பட்டு வருவதை நாம் அறிவோம். இந்த விழாவை கொண்டாடுவதில் தமிழக மக்களோடு ஆலிம்களும் ஆர்வமாக இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இந்த நாளில் முஸ்லிம்கள் தங்கள் வீடுகளிலும் பள்ளிவாசல்களிலும் காலங்காலமாக நன்மை என்ற பெயரில் நடத்தி வருகின்றனர்.

   முன்னோர்கள்களில் சிலர் இதனை உருவாக்கினர் என்பதைத் தவிர குர்ஆனிலோ ஸஹீஹான ஹதீஸ்களிலோ இவற்றுக்கு ஆதாரமுண்டா என்று மார்க்கம் கற்றவர்கள்கூட ஆராயவில்லை. அதற்காக முயற்சிகளை மேற்கொள்வதுமில்லை. படித்தவர்களின் நிலைமையே இதுவானால் படிக்காதவர்கள் எப்படி உண்மையை உணரமுடியும்?

    மூன்று யாசீன்
இந்த இரவில் மஃரிபு தொழுகைக்குப்பின் மூன்று ‘யாசீன்’ ஓதி துன்பம் துயரங்கள் நீங்கவும் நீண்ட ஆயுளைப் பெறவும் நிலையான செல்வத்தைப் பெறவும் துஆச்செய்வது வழக்கத்தில் இருந்து வருகின்றது. இந்த இரவில்தான் ‘தக்தீர்’ எனும் விதியை நிர்ணயிக்கப்படுகிறது என்ற நம்பிக்கையிலேயே மூன்று யாசீன் ஓதி துஆசெய்யும் வழக்கம் இருந்து வருகின்றது.

   ஷஃபான்15ஆம் இரவில் குறிப்பிட்ட சில அமல்களைச் செய்வதற்கு ஆதாரமுண்டா என்றால் திருமறைக் குர்ஆனிலோ, நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரத்திலோ, அருமை ஷஹாபாக்களின் செயல்களிலோ, தாபீயீன்கள், நான்கு இமாம்கள் வழிமுறைகளிலோ இதற்கு ஆதாரம் எதுவுமில்லை. இப்படிச் செய்வது நன்மையானது என்றால், நம்மைவிட நன்மை செய்வதில் அதிக ஆர்வம் கொண்ட சஹாபாக்கள் இதனைச் செய்திருப்பார்கள். பிற்காலத்தில் தோன்றிய சிலர்தான் இதனை உருவாக்கினர். இமாம் கஸ்ஸாலி(ரஹ்) அவர்கள் இந்த இரவில் 100 ரக்அத்துக்கள் தொழவேண்டும் என்று கூறியிருப்பதற்கும் எவ்வித ஆதாரமும் கிடையாது.

    நன்மைகள் தானே
தொழுவது யாசீன் ஓதுவது துஆ செய்வது போன்றவை நன்மைகள்தானே, அவைகளைச் செய்வது மார்க்கத்திற்கு முரணானது என்று சொல்வது எப்படி? என்று, நம்மில் பெரும்பான்மையினர் பலரும் நினைக்கலாம். சற்று நிதானமாக படித்து சிந்தித்து சரியாக விளங்கிக்கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

    நபி (ஸல்) அவர் கூறுகிறார்கள்
“எவர் எம்மால் ஏவப்படாத அமல்களைச் செய்கின்றாரோ, அவை அல்லாஹ்விடத்தில் மறுக்கப் பட்டவையாகும்.”  என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரீ, முஸ்லிம்)

எவர் மார்க்கத்தில் புதுமையை ஏற்படுத்துகிறாரோ அல்லது அவ்விதம் ஏற்படுத்துபவருக்கு இடமளிக்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வினதும், மலக்குகளினதும், மனிதர்களினதும் சாபம் உண்டாகிறது என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள். (அலி (ரழி) அபூதாவூது, நஸயீ)

   வார்த்தையில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம். நடைமுறையில் சிறந்தது நபி (ஸல்) அவர்களின் நடைமுறை. காரியங்களில் கெட்டது நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் இல்லாத) பித்அத்துக்கள், பித்அத்துக்கள் அனைத்தும் வழிகேடுகள் வழிகேடுகள் அனைத்தும் நரகில் சேர்க்கும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு மஸ்வூத் (ரழி) ஜாபிர் (ரழி) புகாரீ, முஸ்லிம், நஸயீ)

  ஷஃபான் மாதம் 15ஆம் இரவில் இத்தகு வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவது மார்க்கமாக இருந்திருப்பின் நிச்சயமாக நபி(ஸல்) அவர்கள் நமக்கு காட்டித் தந்திருப்பார்கள். முஸ்லிம்கள் எவ்வித ஆதாரமுமின்றி விஷேச இரவு என்று கருதிக்கொண்டு  செய்துவரும் போலி வணக்கங்களிலிருந்து விடுபட்டு அல்லாஹ்வின் தூதரை எல்லா நிலைகளிலும் முன்மாதிரியாகக் கொண்டு வாழ வல்ல அல்லாஹ்வை இறைஞ்சுகிறோம்.

  K.முஹம்மது இக்பால் மதனி

{ 1 comment… read it below or add one }

Ashak July 25, 2018 at 2:31 am

நபி (ஸல்) அவர் கூறுகிறார்கள்
“எவர் எம்மால் ஏவப்படாத அமல்களைச் செய்கின்றாரோ, அவை அல்லாஹ்விடத்தில் மறுக்கப் பட்டவையாகும்.” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரீ, முஸ்லிம்)
# உங்களோட ஒரே காமெடியா போச்சி, குரான் ஓதுவது எப்படி தேவைப்படாத அமல் ஆகும் #

Reply

Leave a Comment

Previous post:

Next post: