தொழுகை ஓர் உடற்பயிற்சியும் கூட!

Post image for தொழுகை ஓர் உடற்பயிற்சியும் கூட!

in தொழுகை

தொழுகை சமத்துவத் தொட்டிலாக மட்டுமல்ல, மருந்தில்லா மருந்தாகவும் திகழ்கிறது. நமது ஆரோக்கிய வாழ்வுக்கு தொழுகை ஒரு சிறந்த உடற்பயிற்சியாக விளங்குகிறது. இருபத்தோராம் நூற்றாண்டில் அனைத்தும் இயந்திர மயமாகி விட்டன. இதனால் அதிக இயக்கம் இல்லாத இயந்திர வாழ்க்கையை நாம் நடத்தி வருகிறோம்.

நமது உடல் எப்போதும் இயங்கிக் கொண்டே இருக்க வேண் டும். தூங்கும்போது மட்டுமே முழு ஓய்வு எடுத்துக் கொள்ள வேண் டும். உண்பது, உட்காருவது, படுப்பது என்ற நிலையில் வாழ்க் கையை நகர்த்தினால் உடல் நலம் கெடும். உடல் எடை கூடும். பல் வேறு நோய்கள் தாக்கும் கூடாரமாக நமது உடல் மாறி விடும். எனவே நாம் அனைவரும் ஏதேனும் உடற்பயிற்சியோ, தேவையான நடைபயிற்சியோ கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும். இதுபோன்ற உயற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி போன்ற உடல் உழைப்புகளால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை சத்து உடைபட்டு சக்தியாகவும், வெப்பமாகவும் வெளியேறுகின்றது. இதன் காரணமாக உடலில் இருந்து அதிக கலோரிகள் செலவிடப் பட்டு உடல் பருமன் ஆகாமல் தடுக்கப்படுகிறது. கொழுப்பும் குறைகிறது.

சூரிய உதயத்திற்கு முன்பு நிறைவேற்றப்படும் தொழுகை சுபுஹு-ஃபஜ்ர் தொழுகையாகும். அந்தத் தொழுகையை நிறைவேற்றுவதில் நடைபயிற்சியும், உடற்பயிற்சியும் இடம் பெறுவதால் உடல் நலம் பெறுகிறது.

தொழுகைக்காகப் பள்ளிவாசலுக்கு நடந்தே செல்வது அதிக நன்மை பயக்கும். மதீனாவில் உள்ள மஸ்திதுன் நபவீ பள்ளிவாச லுக்கு அருகே சில இடங்கள் காலியாக இருந்தன. மிகத் தொலை வில் குடியிருந்த பனூ சலிமா குலத்தார் அந்த பள்ளிவாசலுக்கு அருகே குடியேறத் திட்டமிட்டனர். இதை அறிந்த நபி(ஸல்) பனூ சலிமா குடும்பத்தாரே! உங்கள் கால் எட்டுகளின் அளவுக்கு நீங்கள் நன்மையை எதிர்பார்க்க மாட்டீர்களா? என்று கேட்டார்கள். இதைத் தொடர்ந்து அந்தத் திட்டத்தை அவர்கள் கைவிட்டனர்.

மக்களில் கூலி அதிகம் பெறுபவர், தொழுகைக்காக வெகு தூரம் நடந்து வருபவர்தான் என்பது நபி(ஸல்) கூற்று :
எல்லாவித வேலைகளையும் இடைவிடாமல் தொடர்ந்து செய்ய மூளைக்கு நிறைய ஆக்சிஜன் அவசியம். மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு 800 மில்லி ரத்தம் தேவைப்படுகிறது. உடம்பின் எடையில் மூளை ஐம்பதில் ஒரு பங்கு அதாவது 2 சதவீதம்தான். இருந்தபோதிலும் உடல் பயன்படுத்தும் மொத்த அக்சிஜன் மற்றும் ரத்தத்தில் 20 சதவீதத்தை அதாவது ஐந்தில் ஒரு பாகத்தை மூளையே அபகரித்துக் கொள்கிறது. ஆக்சிஜன் கொஞ்ச நேரம் இல்லாவிட்டா லும் கூட மூளையின் செல்கள் பழுதடைந்து விடும் அல்லது இறந்து விடும்.

உயிர் வாழும் பொருட்கள் அனைத்தும் காற்றில் இருந்து ஆக்சிஜனைப் பெற்றுக் கொள்கின்றன. நமது உடலில் நிகழும் ரசாயன மாற்றங்கள் எல்லாவற்றுக்குமே ஆக்சிஜனே ஜீவாதாரம். அதிகாலை சூரிய உதயத்திற்கு 40 நிமிடத்திற்கு முன்புதான் மூளையின் செயலாற்றும் திறன், மிக அதிகபட்ச அளவான 70 சதவீதம் வரை வெளிப்படுகிறது என்பது விஞ்ஞான ஆராய்ச்சியின் வெளிப்பாடு. அந்த நேரத்தில்தான் முஸ்லிம்களின் அதிகாலைத் தொழுகை தொடங்குகிறது. இதில் பங்கேற்பதன் மூலம் மூளையின் செயல்திறன் அதிகரிக்கிறது.

பார்வை கண்களால் நிகழ்வது, கண் என்பது ஒரு கேமரா போலத்தான். அதற்குள் ஒரு லென்ஸ் இருக்கிறது. ஒளிக்கதிர்கள் கார்னியா வழியாகக் கண்ணுக்குள் நுழைகின்றன. இது குறைந்த வெளிச்சத்தில் பெரிதாகும். அதிக வெளிச்சத்தில் குறுகும். நமது முன்னோர்கள் அதிகாலையில் எழுந்து நடைபயிற்சியோடு அன்றாட வேலைகளைத் தொடங்கி விடுவதால் உடல் நலத்தோடு நீண்ட நாள் வாழ்ந்தவனர். அந்தக் காலத்தில் கண்ணாடி போடும் மனிதர்களைக் காண்பது அரிதாக இருக்கும்.

அதிகாலைத் தொழுகையில் பங்கேற்கச் செல்லும்போது சுத்தமான காற்றை நமது நுரையீரல் அதிகபட்சமாக் சுவாசிக்கிறது. அதிகாலை நேரத்தில் பள்ளிவாசலில் வைகறையின் அழகிய சூழல் மனதிற்கு அமைதியை அளிக்கிறது. இத்தகைய காரணங்களால் அதிகாலைத் தொழுகை, கண்களுக்கு மட்டுமல்ல, உடலுக்கும், உள்ளத்திற்கும் நன்மை பயக்கிறது. அதிகாலைத் தொழுகை (சுபுஹு) தவிர பகல் நேரத் தொழுகை (லுஹர்), மாலை நேரத் தொழுகை (அஸர்), அந்தி நேரத் தொழுகை (மஃக்ரிப்), முன்னிரவுத் தொழுகை (இஷா) ஆகிய தொழுகைகளும் மிதமான உடற்பயிற்சி என்பது ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மையாகும்.
தொழுகையில் நிமிர்ந்து நிற்பது, குனிவது, நெற்றியைத் தரையில் வைத்து வழிபடும் நிலை என பல நிலைகள் உள்ளன. தொழுகையில் இரு கைகளையும், புஜம் வரை உயர்த்திப் பின்னர் இரு முழங்கால் மீது வைத்து, குனிந்து நிற்கும் நிலை ருகூ எனப் படும். தொழுகையில் நெற்றி தரையில் படும்படி செய்யப்படும் சிர வணக்கம் சஜ்தா எனப்படும்; தொழுகை இருப்பில் ஓதப்படும் ஒரு வகைப் பிரார்த்தனை அத்தஹியாத்.

இரு கைகளையும் நான்கு முறை புஜம் வரை உயர்த்தி, நின்று குனிந்து நிமிர்ந்து தரையில் அமர்ந்து செய்யும் பயிற்சிகள் தொழுகையில் இடம் பெறுகின்றன. இதனால் தொழுகை அனைவருக்கும் ஏற்ற உடற்பயிற்சியாகும். தொழுகை இதயத்திற்கு இதமளிக்கிறது. மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. ஆன்மாவை அமைதிப்படுத்துகிறது.

பாத்திமா மைந்தன்

{ 2 comments… read them below or add one }

Siraj-Karaikudi May 9, 2017 at 5:17 am

மிக நல்ல கட்டுரை. அருமையான விளக்கங்கள்.

Reply

A.Abdulrajak May 15, 2017 at 7:11 am

எல்லா வணக்க , மற்றும் வழிபாடுகள், பூமியில் மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை குறித்த வாழும் கலை சட்டங்கள் அனைத்தும் பூமியிலேயே குடுக்க பட்டது . தொழுகை மட்டும் இறைவன் இறை தூதரை வானங்களுக்கு மேல் எல்லையில் அழைத்து ஒரு அருள் கொடையான தொழுகையை கடமை ஆக்கினான் . இதில் இருந்தும் கடமையான தொழுகை என்பது சிறிதளவு பயணப்பட்டாவது நிறைவேற்ற வேண்டும் என புரிந்து கொள்ள முடிகிறது .

Reply

Leave a Comment

Previous post:

Next post: